Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!

பரஞ்சோதி முனிவர் அருளிய
திருவிளையாடற் புராணம்
(திருவாலவாய் மான்மியம்)
1. மதுரைக் காண்டம், பாகம் 2 (படலம் 5-18)

tiruviLaiyATaR purANam - part 2
of paranjcOti munivar
In tamil script, unicode/utf-8 format




    Acknowledgements:
    Our Sincere thanks go to the Ms. Kalaivani Ganesan of Singapore for her help in the preparation of this etext for Saivam.org and
    Mr. S. Ganesan for providing an electronic version of this work for inclusion as part of Project Madurai collections.
    Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

    © Project Madurai, 1998-2014.
    to preparation
    of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
    are
    http://www.projectmadurai.org/

பரஞ்சோதி முனிவர் அருளிய
திருவிளையாடற் புராணம் (திருவாலவாய் மான்மியம்)
1. மதுரைக் காண்டம், பாகம் 2 ( படலம் 5 -18)


    உள்ளடக்கம்
      திருவிளையாடல்கள்
      1. இந்திரன் பழி தீர்த்த படலம் (344- 440)
      2. வெள்ளை யானையின் சாபம் தீர்த்த படலம் (441-471 )
      3. திருநகரம் கண்ட படலம் சுபம் ( 472 - 518)
      4. தடாதகைப் பிராட்டியார் திருவவதாரப் படலம் (519 - 599)
      5. திருமணப் படலம் (600 - 798)
      6. வெள்ளிஅம்பலத் திருக்கூத்தாடிய படலம் (799 - 826)
      7. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் (827 - 848)
      8. அன்னக் குழியும் வைகையும் அழைத்த படலம் (849- 875)
      9. ஏழு கடல்அழைத்த படலம் (876 - 890)
      10. மலயத் துவசனை அழைத்த படலம் (891- 921)
      11. உக்கிர பாண்டியன் திருஅவதாரப் படலம் (922 - 966)
      12. உக்கிர பாண்டியனுக்கு வேல் வளை செண்டு கொடுத்த படலம் (967 - 1032)
      13. கடல் சுவற வேல் விட்ட படலம் (1033- 1052 )
      14. இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலம் (1053 - 1111)
      15. மேருவைச் செண்டால் அடித்த படலம் (1112-1152)
      16. வேதத்துக்குப் பொருள்அருளிச் செய்த படலம் (1153 - 1194)
      17. மாணிக்கம் விற்ற படலம் (1195 - 1287)
      18. வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் (1288 - 1306)

    5. திருமணப் படலம் (600-798)

    600 தரை புகழ் தென்னன் செல்வத் தடாதகைப் பிராட்டி தானே
    திரைசெய் நீர் ஞாலம் காத்த செயல் சிறிது உரைத்தேன் தெய்வ
    விரைசெய் பூம் கோதை மாதை விடையவன் மணந்து பாராண்டு
    அரசு செய்து இருந்த தோற்றம் அறிந்தவாறு இயம்பல் உற்றேன்.
    601 காய் இரும் பரிதிப் புத்தேள் கலி இருள் உமிப்பச் சோதி
    பாய் இரும் குடை வெண் திங்கள் படர் ஒளி நீழல் செய்ய
    மாயிரும் புவனம் எல்லாம் மனுமுறை உலகம் ஈன்ற
    தாய் இளம் குழவி ஆகித் தனி அரசு அளிக்கும் நாளில்.
    602 மருங்கு தேய்ந்து ஒளிப்ப செம்பொன் வன முலை இறுமாப்பு எய்தக்
    கரும் குழல் கற்றை பானாள் கங்குலை வெளிறு செய்ய
    இரங்கு நல் யாழ் மென் தீம் சொல் இன்னகை எம் பிராட்டிக்
    கரும்கடி மன்றல் செய்யும் செவ்வி வந்து அடுத்தது ஆக.
    603 பனிதரு மதிக் கொம்பு அன்ன பாவையைப் பயந்தாள் நோக்கிக்
    குனிதர நிறையப் பூத்த கொம்பனாய்க்கு இன்னும் கன்னி
    கனிதரு செவ்வித்து ஆயும் கடி மணப் பேறு இன்று என்னாத்
    துனி தரு நீராள் ஆகிச் சொல்லினாள் சொல்லக் கேட்டாள்.
    604 அன்னை நீ நினைந்த எண்ணம் ஆம் பொழுது ஆகும் வேறு
    பின்னை நீ இரங்கல் யான் போய்த் திசைகளும் பெருநீர் வைப்பும்
    என்னது கொற்ற நாட்டி மீள் வள் இங்கு இருத்தி என்னாப்
    பொன் அவிர் மலர்க் கொம்பு அன்னாள் பொருக்கு என எழுந்து போனாள்.
    605 தேம் பரி கோதை மாதின் திரு உளச் செய்தி நோக்கி
    ஆம் பரிசு உணர்ந்த வேந்தர் அமைச்சரும் பிறரும் போந்தார்
    வாம் பரி கடாவித் திண் தேர் வலவனும் கொணர்ந்தான் வையம்
    தாம் பரி அகல வந்தாள் ஏறினாள் சங்கம் ஆர்ப்ப.
    606 ஆர்த்தன தடாரி பேரி ஆர்த்தன முருடு மொந்தை
    ஆர்த்தன உடுக்கை தக்கை ஆர்த்தன படகம் பம்பை
    ஆர்த்தன முழவம் தட்டை ஆர்த்தன சின்னம் தாரை
    ஆர்த்தன காளம் தாளம் ஆர்த்தன திசைகள் எங்கும்.
    607 வீங்கிய கொங்கை யார்த்த கச்சினர் விழி போல் தைப்ப
    வாங்கிய சிலை ஏறிட்ட கணையினர் வட்டத் தோல் வாள்
    தாங்கிய கையர் வை வேல் தளிர்க்கையர் பிணாத் தெய்வம் போல்
    ஒங்கிய வாயத் தாரும் ஏறினர் உடன் அத் திண்தேர்.
    608 கிடைப்பன உருளால் பாரைக் ஈண்டு பாதலத்தின் எல்லை
    அடைப்பன பரந்த தட்டால் அடையவான் திசைகள் எட்டும்
    உடைப்பன அண்டம் உட்டி ஒற்றிவான் கங்கை நீரைத்
    துடைப்பன கொடியால் சாரி சுற்றுவ பொன் திண்தேர்கள்.
    609 செருவின் மா தண்டம் தாங்கிச் செல்லும் வெம் கூற்றம் என்ன
    அருவி மா மதநீர் கால வரத்த வெம் குருதி கோட்டால்
    கருவி வான் வயிறுக் ஈண்டு கவிழு நீர் ஆயம் காந்து
    பருகிமால் வரை போல் செல்வ பரூஉப் பெரும் தடக்கையானை.
    610 ஒலிய வார் திரையின் அன்ன ஒழுங்கின யோக மாக்கள்
    வலியகால் அடக்கிச் செல்லும் மனம் எனக் கதியில் செல்வ
    கலிய நீர் ஞாலம் காப்பான் கடை உக முடிவில் தோற்றம்
    பொலியும் வாம் புரவி ஒன்றே போல்வன புரவி வெள்ளம்.
    611 காலினும் கடிது செல்லும் செலவினர் கடும் கண் கூற்றம்
    மேலினும் இகை உண்டாயின் வெகுண்டு வெம் கண்டு மீளும்
    பாலினர் பகுவாய் நாகப் பல்லினும் பில்கு ஆல
    வேலினர் வீயா வென்றி வீக்கிய கழல்கால் வீரர்.
    612 எண் புதைத்து எழுந்த வீரர் இவுளி தேர் யானை வெள்ளம்
    மண் புதைத்தன பதாகை மாலை வெண் கவிகை பீலி
    விண் புதைத்தன நுண் தூளி வெயில் விடு பரிதி புத்தேள்
    கண் புதைத்தன பேர் ஓதை கடல் ஒலி புதைத்தது அன்றே.
    613 தேர் ஒலி கலினப் பாய்மான் செல ஒலி கொலை வெண் கோட்டுக்
    கார் ஒலி வீரர் ஆர்க்கும் கனை ஒலி புனைதார்க் குஞ்சி
    வார் ஒலி கழல் கால் செம் கண் மள்ளர் வன் திண் தோள் கொட்டும்
    பேர் ஒலி அண்டம் எல்லாம் பிளந்திடப் பெருத்த அன்றே.
    614 பரந்து எழு பூழி போர்ப்பப் பகலவன் மறைந்து முந்நீர்
    கரந்தவன் போன்றான் ஆகக் கங்குல் வந்து இறுத்தது ஏய்ப்பச்
    ரந்திரு நிறைய முத்தின் சோதி வெண் குடையும் வேந்தர்
    நிரந்த பூண் வயிர வாளும் நிறைநிலா எறிக்கும் மன்னோ.
    615 தேர் நிரை கனலாய்ச் செல்லப் பரிநிரை திரையாய்த் துள்ள
    வார் முரசு ஒலியாய்க் கல்ல வாள் கலன் மீனாய் கொட்பத்
    தார் நிரை கவரிக் காடு நுரைகளாய் ததும்ப வேழம்
    கார் நிரை ஆகத் தானை கடல் வழிக் கொண்டது அன்றே.
    616 கள் அவிழ் கோதை மாதர் எடுத்து எறி கவரிக் காடு
    துள்ள அந்தணர் வாயாசி ஒரு புறந்துவன்றி ஆர்ப்ப
    தௌ¢ விளி அமுத கீத ஒரு புறந்து இரண்டு விம்ம
    வள்ளை வார் குழை எம் அன்னை மணித் திண் தேர் நடந்தது அன்றே.
    617 மீனவன் கொடியும் கான வெம்புலிக் கொடியும் செம்பொன்
    மான வில் கொடியும் வண்ண மயில் தழைக் காடும் தோட்டுப்
    பால் நலம் கரும் கண் செவ்வாய் வெண்ணகை பசும் தோள் நிம்பத்
    தேன் அலம் பலங்கல் வேய்ந்த செல்வி தேர் மருங்கில் செல்ல.
    618 மறை பல முகம் கொண்டு ஏத்தி வாய் தடுமாறி எய்ப்ப
    நிறை பரம்பரை நீ எங்கள் நிருபர் கோன் மகளாய் வையம்
    முறை செய்து மாசு தீர்ப்பாய் அடியனேன் முகத்து மாசும்
    குறை என நிழற்றும் திங்கள் கொள்கை போல் கவிகை காப்ப.
    619 அம் கயல் நோக்கி மான்தேர் அணித்து ஒரு தடம் தேர் ஊர்ந்து
    வெம்கதிர் வியாழச் சூழ்ச்சி மேம்படு சுமதி என்போன்
    நங்கை தன் குறிப்பு நோக்கி நாற்பெரும் படையும் செல்லச்
    செம் கையில் பிரம்பு நீட்டிச் சேவகம் செலுத்திச் செல்ல.
    620 அலகினால் கருவிச் சேனை ஆழ்கடல் அனைத்தும் தன்போல்
    மலர்தலை உலகம் அன்றி மகபதி உலகம் ஆதி
    உலகமும் பிறவும் செல்ல உலப்பிலா வலியது ஆக்கித்
    திலக வாண் நுதலாள் மன்னர் திருஎலாம் கவரச் செல்வாள்.
    621 கயபதி ஆதி ஆய வடபுலக் காவல் வேந்தர்
    புயவலி அடங்க வென்று புழைக்கைமான் புரவ மான்தேர்
    பயன் மதி நுதல் வேல் உண்கண் பாவையர் ஆயம்ஓடு
    நயமலி திறையும் கொண்டு திசையின் மேல் நாட்டாம் வைத்தாள்.
    622 வார் கழல் வலவன் தேரை வலிய கால் உதைப்ப முந்நீர்
    ஊர் கலன் ஒப்பத் தூண்ட உம்பர் கோன் அனிகத்து எய்திப்
    போர் விளையாடு முன்னர் புரந்தரன் இலைந்த தும்பைத்
    தார் விழ ஆற்றல் சிந்தத் தருக்கு அழிந்து அகன்று போனான்.
    623 இழை இடை நுழையா வண்ணம் இடை இற ஈங்கு கொங்கைக்
    குழை இடை நடந்து மீளும் கொலைக்கணார் குழுவும் தான
    மழை கவிழ் கடாத்து வெள்ளை வாரண மாவும் கோவும்
    தழை கதிர் மணியும் தெய்வத் தருக்களும் கவர்ந்து மீண்டாள்.
    624 இவ்வாறு மற்றைத் திசைக் காவலர் யாரையும் போய்த்
    தெவ் ஆண்மை சிந்தச் செருச் செய்து திறையும் கைக்கொண்டு
    அவ்வாறு வெல்வாள் என மூன்று அரண் அட்ட மேருக்
    கைவார் சிலையான் கயிலைக் கிரி நோக்கிச் செல்வாள்.
    625 சலிக்கும் புரவித் தம் தேர் உடைத் தம் பிராட்டி
    கலிக்கும் பல தூரியம் கைவரை தெய்வத் திண்தேர்
    வலிக்கும் பரி மள்ளர் வழங்கு ஒலி வாங்கி நேரே
    ஒலிக்கும் படி கிட்டினள் ஊழிதோர் ஓங்கு ஓங்கல்.
    626 வானார் கயிலை மலையான் மகள் தன்னை நீத்துப்
    போனாள் வந்தாள் என்று அருவிக் கண் புனலுக்கு அந்நீர்
    ஆனா ஒலியால் அனை வா என்று அழைத் தன் தேசு
    தான நகையால் தழீஇ எதிர் ஏற்பச் சென்றாள்.
    627 கிட்டிப் பொருப்பைக் கிரியோடு கிரிகள் தாக்கி
    முட்டிப் பொருதால் என வேழ முழங்கிப் பாயப்
    புட்டில் புறத்தார் மறத்தார் கணை பூட்டு இல்லார்
    வட்டித்து உரு மேறு என ஆர்த்து வளைந்து கொண்டார்.
    628 ஓடித் திருமா மலைக் காவலர் உம்பர் ஆர்க்கும்
    நாதிப் பணிதற்கு அரிது ஆகிய நந்தி பாதம்
    கூடிப் பணிந்து இத்திறம் கூறலும் கொற்ற ஏனம்
    தேடிக் கிடையான் உளம் தேர்ந்தன நந்தி எந்தை.
    629 வென்றிக் கணத்தை விடுத்தான் கனன் மீது பெய்த
    குன்றிக் கணம் போல் சுழல் கண்ணழல் கொப்பளிப்பச்
    சென்றிக் கனைய மொழியாள் பெரும் சேனை ஓடும்
    ஒன்றிக் கடலும் கடலும் பொருது ஒத்தது அன்றெ.
    630 சூலம் கண் மழுப் படை தோமரம் நேமி பிண்டி
    பாலங்கள் கழுக் கடை வாள் படை தண்டம் நாஞ்சில்
    ஆலம் கவிழ் கின்ற அயில் படை வீசி ஊழிக்
    காலம் கலிக்கும் கடல் போன்ற களமர் ஆர்ப்பு.
    631 எறிகின்றன ஓச்சுவ எய்வன ஆதி ஆகச்
    செறிகின்றன பல் படை செந் நிறப் புண்ணீர் மூழ்கிப்
    பறிகின்றனவும் பிழைக் கின்றனவும் பட்டுத் தாக்கி
    முறி கின்றனவும் முயன்றார் வினைப் போகம் ஒத்த.
    632 தெரிசிக்க வந்த சில தேவர் சிறைப் புள் ஊர்தி
    வெருவிப் பறந்த ஒழிந்தோர் விலங்கு ஊர்தி மானம்
    கருவிப் படையால் சிதைப் பட்டன கலன் ஊர்தி
    குருதிப் புனலுக்கு அது கொற்றவை உண்டது என்ன.
    633 பொரு கின்றது கண்டு இச் சாதரர் போகம் வீடு
    தருகின்றவனைத் தொழ வான் நெறி சார்ந்து நேரே
    வருகின்றவர் வேறு வழிக் கொடு போவர் அன்புக்கு
    உருகின்ற தளிர் மெல் அடியா ரொடு மூற்ற அஞ்சா.
    634 திங்கள் படை செம் கதிரோன் படை சீற்றம் ஏற்ற
    அங்கிப் படை தீம் புனல் ஆன் படை நார சிங்க
    துங்கப் படை சிம்புண் நெடும் படை சூறைச் செல்வன்
    வெம் கண் படை பன்னக வெம்படை மாறி விட்டார்.
    635 கொட்புற்று அமரா துமிக் கொள்கையர் தம்மின் நந்தி
    நட்பு உற்றவர் கைப் படை தூள் பட ஞான மூர்த்தி
    பெட்புற்று அருள வரும் எங்கள் பிராட்டி வெய்ய
    கட்புற்று அரவில் கணை மாரிகள் ஊற்றி நின்றாள்.
    636 கையில் படை அற்றனர் கல் படை தொட்டு வீரர்
    மெய்யில் படுக என்று விடுக்கு முன் வீரக் கன்னி
    பொய்யில் படு நெஞ்சுடையார் தவம் போல மாய
    நெற்றியில் படு வச்சிர வேலை நிமிர்த்து வீசி.
    637 துண்டம் படவே துணித்து அக்கண வீரர் தம்மைத்
    தண்டம் கொடு தாக்கினள் சாய்ந்தவர் சாம்பிப்போனார்
    அண்டங்கள் சரா சரம் யாவையும் தானே ஆக்கிக்
    கொண்டு எங்கு நின்றாள் வலி கூற வரம்பிற்று ஆமோ.
    638 படை அற்று விமானமும் பற்று அற அற்றுச் சுற்றும்
    தொடை அற்று இகன் மூண்டு எழு தோள் வலிஅற்றுச் செற்றம்
    இடை அற்று வீர நகை அற்ற அடல் ஏறு போலும்
    நடை அற்று அடைவார் நிலை கண்டனன் நந்தி அண்ணல்.
    639 உடையான் அடி தாழ்ந்து இவை ஓதலும் ஓத நீத்தச்
    சடையான் இள வாண் நகை செய்து தருமச் செம்கண்
    விடையான் சிலையான் இகல் வென்றி விளைக்கும் தெய்வப்
    படையான் எழுந்தான் அமர் ஆடிய பாரில் சென்றான்.
    640 மேவி ஆக அப் பார் இடைப் பாரிட வீரரை அமர் ஆடி
    ஓவிலா வலி கவர்ந்தது மன்றினி உருத்து எவர் எதிர்ந்தாலும்
    தாவிலா வலி கவரவும் மடங்கலின் தளிப் பிணா என நிற்கும்
    தேவியார் திரு உருவமும் சேவகச் செய்கையும் எதிர் கண்டான்.
    641 ஒற்றை வார் கழல் சரணமும் பாம்பசைத்து உடுத்தவெம் புலித் தோலும்
    கொற்ற வாள் மழுக் கரமும் வெண் நீறணி கோலமும் நூல் மார்பும்
    கற்றை வேணியும் தன்னையே நோக்கிய கருணை செய்திருநோக்கும்
    பெற்ற தன் வலப் பாதியைத் தடாதகை பிராட்டியும் எதிர் கண்டாள்.
    642 கண்ட எல்லையில் ஒரு முலை மறைந்தது கருத்தில் நாண் மடம் அச்சம்
    கொண்ட மைந்திடக் குனிதா மலர்ந்த பூம் கொம்பரின் ஒசிந்து ஒல்கிப்
    பண்டை அன்பு வந்து இறை கொளக் கரும் குழல் பாரமும் பிடர் தாழக்
    கெண்டை உண் கண்ணும் புறவடி நோக்க மண் கிளைத்து மின் என நின்றாள்.
    643 நின்ற மென் கொடிக்கு அகல் விசும்பு இடை அரன் நிகழ்த்திய திருமாற்றம்
    அன்று அறிந்த மூதறிவான் ஆம் சுமதி சீறடி பணிந்து அன்னாய் இக்
    கொன்றை அம் சடைய குழகனே நின்மணக் குழகன் என்றலும் அன்பு
    துன்ற நின்றவள் பார்த்து அருள் சிவ பரம் சோதி மற்று இது கூறும்.
    644 என்று தொட்டு நீ திசையின் மேல் சயம் குறித்து எழுந்து போந்தனை யாமும்
    அன்று தொட்டும் மதுரை விட்டு உனை விடாது அடுத்து வந்தனம் உன்னைத்
    தொன்று தொட்ட நான் மறை உரை வழிவரும் சோம வாரத் ஓரை
    நன்று தொட்ட நாண் மணம் செய வருதும் நின் நகர்க்கு நீ ஏகு என்றன்.
    645 என்ற நாதன் மேல் அன்பையும் உயிரையும் இருத்தி ஆயம் சூழக்
    குன்றம் அன்னது ஓர் மேல் கொடு தூரியும் குரைகடல் என ஆர்ப்ப
    நின்ற தெய்வ மால் வரைகளும் புண்ணிய நீத்தமும் நீத்து ஏகி
    மன்றல் மா மதுரா புரி அடைந்தனள் மதிக் குல விளக்கு அன்னாள்.
    646 மங்கை நாயகி மங்கலம் எதிர் கொள வந்து வான் இழிச் செல்வம்
    பொங்கு மாளிகை புகுந்தனள் ஆக மேல் புது மணத்திறம் தீட்டி
    எங்கும் ஓலை உய்த்து அமைச்சர் மங்க வினை இயைவன அமைக்கின்றார்
    அங்கண் மா நகர் எங்கணும் கடி முரசு ஆனைமேல் அறைவித்தார்.
    647 கன்னி தன் மண முரசு அறைதலும் கடிநகர் உறைபவர் கரை கெடத்
    துன்னிய உவகையர் கடவுளைத் தொழுகையர் உடலம் முகிழ்பு எழப்
    பன்னிய துதியினர் இயல் எழிலின் மகளிரை அழகு செய் பரிசு என
    இன்னிய எழில் வள நகர் எலாம் செயல்வினை அணிபெற எழில் செய்வார்.
    648 கோதை ஒடும் பரி சந்தனக் குப்பை களைந்தனர் வீசுவார்
    சீதள மென்பனி நீர்கள் தூய்ச் சிந்தின பூழி அடக்குவார்
    மாதரும்மைந்தரும் இறைமகள் மன்றல் மகிழ்ச்சி மயக்கினால்
    காதணி குழை தொடி கண்டிகை கழல்வன தெரிகிலர் தொழில் செய்வார்.
    649 மங்கலம் என்று என வினவுவார் வருமதி நாள் என உரை செய்வார்
    தங்களை ஒல்லை தழீ இக் கொல்வார் தாங்கரு மோகை தலைக் கொள்வார்
    திங்களின் எல்லையும் ஆறு நாள் ஆறு உகம் என்று செலுத்துவார்
    நங்கை அரும் கடி காண வோ துடித்தன தோள்கள் நமக்கு என்பார்.
    650 பித்திகை வெள்ளை புதுக்குவார் பெட்பு உறுவார்களும் பெட்பு உறச்
    சித்திர பந்தி நிறுத்துவார் தெற்றிகள் குங்குமம் நீவு வார்
    வித்திய பாலிகை மென் தழை விரிதலை நீர் நிறை பொன் குடம்
    பத்தியின் வேதி நிரப்புவார் தோரணம் வாயில் பரப்புவார்.
    651 நீள் இடை மணி மறுகு எங்கணும் நெடு நடைக்காவணம் நாட்டுவார்
    பாளை கொள் கமுகு சுவைக் கழை பழுக் குலைவாழை ஒழுக்குவார்
    கோள் நிறை கொண்டு என வாடிகள் கோத்து அணிவார் இசைக் கொடி நிரை
    வாள் அரி எழுபரி அடிபட மத்திகை நிரை என வைப்பர் ஆல்.
    652 பூவொடு தண்பனி சிந்துவார் பொரி ஒடு பொன்சுணம் வீசுவார்
    பாவை விளக்கு நிறுத்துவார் பைந்தொடை பந்தரின் ஆற்றுவார்
    ஆவணம் என்ன வயிர்ப்புற அணி மறுகு எங்கணும்அரதனக்
    கோவையும் மரகத மாலையும் கோப்பு அமை ஆரமும் தூக்குவார்.
    653 அடுகரி சிந்துரம் அப்புவார் அழல் மணி ஓடை மிலைச் சுவார்
    கடு நடை இவுளி கழுத்து அணி கால் அணி கலனை திருத்துவார்
    சுடர் விடு தேர் பரி பூட்டுவார் தொடை ஒடு கவரிகள் தூக்குவார்
    வடுவறு பொன்கல நவமணி மங்கல தீபம் இயற்றுவார்.
    654 பழையன கலனை வெறுப்பர் ஆல் புதியன பணிகள் பரிப்பர் ஆல்
    குழை பனி நீர் அளை குங்குமம் குவிமுலை புதைபட மெழுகுவார்
    மெழுகிய வீரம் புலர்த்துவார் விரைபடு கலைவைகள் அப்புவார்
    அழகிய கண்ணடி நோக்குவார் மைந்தரை ஆகுலம் ஆக்குவார்.
    655 அஞ்சனம் வேல் விழி தீட்டுவார் ஆடவர் மார்பு இடை நாட்டுவார்
    பஞ்சுகள் பாதம் இருத்துவார் பரிபுர மீது இருத்துவார்
    வஞ்சியர் தேறல் அருந்துவார் மருங்கு குறளாட வருந்துவார்
    கொஞ்சிய கனிமொழி கழறுவார் குழுவொடு குரவைகள் குழறுவார்.
    656 கின்னர மிதுனம் எனச் செல்வார் கிளை கெழு பாண் ஒடு விறலியர
    கன்னியர் அரசை வணங்குவார் கடிமணம் எய்தும் களிப்பினால்
    இன்னிசை யாழொடு பாடுவார் ஈந்தன துகில் விரித்து ஏந்துவார்
    சென்னியின் மீது கொண்டாடுவார் தேறலை உண்டு செருக்குவார்.
    657 மன்னவர் மகளிரும் மறையவர் மகளிரும் வந்து பொன் மாலையைத்
    துன்னினர் சோபனம் வினவுவார் தோகை தன் மணி அணி நோக்குவார்
    கன்னிதன் ஏவலர் வீசிய காசறை கர்ப்புர வாசமென்
    பொன்னறும் கலவையின் மெய் எல்லாம் புதைபட வளன் ஒடும் போவர் ஆல்.
    658 அம் கனகம் செய் தசும்பின வாடை பொதிந்தன தோடு அவிழ்
    தொங்கல் வளைந்தன மங்கையர் துள்ளிய கவரியின் உள்ளன
    கங்கையும் வாணியும் யமுனையும் காவிரியும் பல துறை தொறும்
    மங்கல தூரிய மார்ப்பன மதமலை மேலன வருவன.
    659 அங்கு அவர் மனை தொறும் மணவினை அணுகிய துழனியர் என மறைப்
    புங்கவரின் இதுண அறுசுவை போனக மடுவினை புரிகுவார்
    இங்கு அடுவனபலி அடிகளுக்கு என அதிகளை எதிர் பணிகுவார்
    சங்கரன் அடியரை எதிர் கொள்வார் சபரியை விதி முறை புரிகுவார்.
    660 இன்னண நகர் செயல் அணி செய இணை இலி மணமகன் மணவினைக்
    கன்னியும் அனையவள் என் இனிக் கடிநகர் செயும் எழில் வளனையாம்
    என்ன அரிய நகர் செயல் எழில் இணை என உரை செய்வது எவன் இதன்
    முன் இறை மகள் தமர் மண அணி மண்டப வினை செயும் முறை சொல்வாம்.
    661 கருவி வான் முகில் ஊர்தியைப் பொருத நாள் கலை மதி மருமாட்டி
    செருவில் வாங்கிய விமான மாலைகள் எனத் தெய்வத வரை எல்லாம்
    மருவி அந்நகர் வைகிய தம் இறை மடமகள் தமை காண்பான்
    துருவி நின்று என நட்டனர் எட்டி வான் தொடு நிலை நெடும் தேர்கள்.
    662 பளிக்கின் ஏழு உயர் களிறு செய்து அமைத்த பொன் படியது பசும் சோதி
    தௌ¤க்கும் நீலத்தின் ஆளிகள் நிரை மணித் தெற்றியது உற்றோர் சாய்
    வெளிக்குள் ஆடிய ஓவியப் பாவை போல் மிளிர் பளிங்கால் சோதி
    தளிர்க்கும் பித்தியத் இடை இடை மரகதச் சாளரத் அது மாதோ.
    663 பல் உருச் செய்த பவளக் கால் ஆயிரம் படைத்து இந்திர நீலக்
    கல் உருத்தலைப் போதிய தடாகக் கவின் கொளுத்தரமேல
    தல் உருக்கிய செம் மணித் துலாத் அதால முதுடற் பசும் திங்கள்
    வில் உருக்கு அகன் மாடம் ஆகிய வேள்வி மண்டபம் செய்தார்.
    664 முத்தில் பாளை செய்து அவிர் மரகதத்தின் ஆன் மொய்த்த பாசிலை துப்பின்
    கொத்தில் தீம் பழம் வெண் பொனால் கோழரை குயின்ற பூகம் உந்துப் பின்
    தொத்தில் தூங்கு பூச் செம் பொன்னால் பழுக்குலை தூக்கிப் பொன்னால் தண்டு
    வைத்துப் பாசொளி மரகத நெட்டிலை வாழையும் நிரை வித்தார்.
    665 பித்தி மாதவி சண்பகம் பாதிரி பிறவும் மண்டபம் சூழப்
    பத்தியா வளர்த் தளிகள் வாய் திறந்து பண் பாட இன் மதுக் காலத்து
    தத்தியாய் மணம் கவர்ந்து சாளரம் தொறும் தவழ்ந்து ஒழுகு இளம் தென்றல்
    தித்தியா நிற்கும் மதுத்துளி தௌ¤த்திட செய்தனர் உய்யானம்.
    666 வேள்விச் சாலையும் வேதியும் குண்டமும் மேகலை ஒடு தொல் நூல்
    கேள்விச் சார் பினால் கண்டு கண்ணாடி விடை கிளர் சுடர் சீவற்சம்
    நீள் வில் சாமரம் வலம்புரி சுவத்திக நிரைகுடம் என எட்டு
    வாள் விட்டு ஓங்கும் மங்கலம் தொழில் செய் பொறி வகையினால் நிருமித்தார்.
    667 மணம் கொள் சாந்தொடு குங்குமப் போது அளாய் மான் மதம் பனி நீர் தோய்த்து
    இணங்கு சேறு செய் திருநிலம் தடவி வான் இரவி மண்டலம் நாணப்
    பணம் கொள் நாகமா மணிவிளக்கு இருகையும் பாவைகள் எடுத்து ஏந்தக்
    கணம் கொள் தாரகை என நவ மணி குயில் கம்பலம் விதானித்தார்.
    668 செம் பொன் கோயில் முன் சேண் தொடு காவணம் திசை எலாம் விழுங்கச் செய்
    தம் பொன் பலிகை பாண்டில் வாய் முளைத்துத் தௌ¤த்து அம்புயத் அவன் ஆதி
    உம்பர் ஏற்ற பொன் கம்பல மேல் விரித்து உள்ளுறத் தவிசில் இட்டுத்
    தும்பை தாழ் சடை ஆன்று அமர்க்கு ஆடனம் சூழ விட்டு அதன் நாப்பண்.
    669 கற்பகத் தரு வயிரவாள் அரிப் பிடர் கதுவப் பொன்குறடு ஏற்றி
    எற்படும் துகிரால் குடம் சதுரமா இயற்றிய எருத்தத் தூண்
    வில் படும் பளிக்குத் தரம் துப்பினால் விடங்க மேல் நிலை மூன்றாப்
    பொற்ப நூல் வழி விமானம் பல் மணிகளால் பொலியச் செய்து உள் ஆக.
    670 அங்கம் ஆறுமே கால் களாய் முதல் எழுத்து அம்பொன் பீடிகை ஆகித்
    துங்க நான் மறை நூல்களே நித்திலம் தொடுத்து அசைத் தாம்பு ஆகி
    எங்கண் நாயகன் எம் பெருமாட்டி ஓடு இருப்பதற்கு உருக் கொண்டு
    தங்கினால் என நவமணி குயின்ற பொன் தவிசது சமைத்திட்டார்.
    671 புரந்தரன் தரு கற்பகம் பொலந்துகில் பூண் முதலிய நல்கச்
    சுரந்தரும் பெறல் அமுத மை வகை அறு சுவை உணா முதலாகப்
    பரந்த தெய்வவான் பயப்பச் சிந்தாமணி பற்பலவும் சிந்தித்து
    இரந்து வேண்டுவ தரத்தர இட்டினார் இந்திர நகர் நாண.
    672 தென்னர் சேகரன் திருமகள் திருமணத் திருமுகம் வரவேற்று
    மன்னர் வந்து எதிர் தொழுது கைக் கொண்டு தம் மணி முடி இசை ஏற்றி
    அன்ன வாசகம் கேட்டனர் கொணர்ந்து அவர்க்கு அரும் கலம் துகில் நல்கி
    முன்னர் ஈர்த்து எழு களிப்பு உற மனத்தினும் முந்தினர் வழிக் கொள்வார்.
    673 கொங்கர் சிங்களர் பல்லவர் வில்லவர் கோசலர் பாஞ்சாலர்
    வங்கர் சோனகர் சீனர்கள் சாளுவர் மாளவர் காம்போசர்
    அங்கர் மாகதர் ஆரியர் நேரியர் அவந்தியர் வைதர்ப்பர்
    கங்கர் கொங்கணர் விராடர் கண் மராடர்கள் கருநடர் குருநாடர்.
    674 கலிங்கர் சாவகர் கூவிளர் ஒட்டியர் கடாரர்கள் காந்தாரர்
    குலிங்கர் கேகயர் விதேகர்கள் பௌரவர் கொல்லர்கள் கல்யாணர்
    தெலுங்கர் கூர்ச்சரர் மச்சர்கள் மிலேச்சர்கள் செஞ்சையர் முதல் ஏனை
    புலம் கொள் மன்னரும் துறை தொறும் இடைந்து பார் புதை பட வருகின்றார்.
    675 இத்தகைப் பல தேய மன்னவர்களும் எள் இடம் பெறாது ஈண்டிப்
    பைத்த ஆழிபோல் நிலமகள் முதுகு இறப் பரந்த தானையர் ஆகித்
    தத்த நாட்டு உள பலவகை வளன் ஒடும் தழீஇப் பல நெறி தோறும்
    மொய்த்து வந்தனர் செழியர் கோன் திருமகள் முரசு அதிர் மணமூதூர்.
    676 வந்த காவலர் உழையர் சென்று உணர்த்தினர் வருக என வருகு உய்ப்பச்
    சந்த வாளரிப் பிடர் அணை மீது அறம் தழைத்து அருள் பழுத்து ஓங்கும்
    கந்த நாள் மலர்க் கொம்பினைக் கண்டு கண் களிப்பு உற முடித்தாமம்
    சிந்த வீழ்ந்து அருள் சுரந்திடத் தொழுது போய்த்திருந்து தம் இடம் புக்கார்.
    677 வரை வளங்களும் புறவினில் வளங்களும் மருதத் தண் பணை வேலித்
    தரை வளங்களும் சலதி வாய் நடைக்கலம் தரு வளங்களும் ஈண்டி
    உரை வரம்பு அற மங்கலம் பொலிந்தது இவ்வூரினில் நால் வேதக்
    கரை கடந்தவன் திருமணம் செயவரு காட்சியைப் பகர்கின்றேன்.
    678 ஏக நாயகி மீண்டபின் ஞாட்பிகந்து இரசத கிரி எய்தி
    நாக நாயக மணி அணி சுந்தர நாயகன் உயிர்க்கு எல்லாம்
    போக நாயகன் ஆகிப் போகம் புரி புணர்ப்பு அறிந்து அருணந்தி
    மாக நாயகன் மால் அயன் உருத்திரர் வரவின் மேல் மனம் வைத்தான்.
    679 சங்கு கன்னனை ஆதிய கணாதிபர் தமை விடுத்து தனன் அன்னார்
    செம் கண் ஏற்றவர் மால் அயன் முதல் பெரும் தேவர் வான் பதம் எய்தி
    எங்கள் நாயகன் திருமணச் சோபனம் இயம்பினார் அது கேட்டுப்
    பொங்கு கின்ற பேர் அன்பு பின் தள்ளுறப் பொள் என வருகின்றார்.
    680 அஞ்சு கோடி யோசனை புகைந்து திரு மடம் கழன்றவர் தமைப் போலீர்
    அஞ்சு தீ உருத்திரர் புடை அடுத்தவர் அழல் கணால் பூதங்கள்
    அஞ்சு நூறுருத்திரர் அண்டத்து உச்சியர் அரி அயன் முதல் தேவர்
    அஞ்சும் ஆணையும் ஆற்றலும் படைத்தவர் அடு குறள் படைவீரர்.
    681 புத்தி அட்டகர் நாலிரு கோடி மேல் புகப் பெய்த நரகங்கள்
    பத்து இரட்டியும் காப்பவர் பார் இடப் படை உடைக்கூர் மாண்டர்
    சத்தி அச்சிவ பரஞ்சுடர் உதவிய சத உருத்திரர் அன்னார்
    உய்த்து அளித்த ஈர் ஐம்பது கோடியர் உருத்திரர் கணநாதர்.
    682 பட்ட காரிவாய் அரவு அணிபவர் பசுபதி உருத்திரர் ஆதி
    அட்ட மூர்த்தி கண் மேருவின் அவிர்சுடர் ஆடகர் தோள் ஏந்தும்
    மட்ட அறா மலர் மகன் செருக்கு அடங்கிட மயங்கியவிதி தேற்ற
    நிட்டையால் அவன் நெற்றியில் தோன்றிய நீலலோகித நாதர்.
    683 பாலம் ஏற்ற செந்தழல் விழி உருத்திரர் பதினொரு பெயர் வாகைச்
    சூலம் ஏற்ற கங்காள கபாலியர் துரகத நெடும் காரி
    நீலம் ஏற்ற பைங்கஞ்சுகப் போர்வையின் நெடியவர் நிருவாணக்
    கோலம் ஏற்றவர் எண்மர் ஞாளிப் புறம் கொண்ட கேத்திர பாலர்.
    684 செய்ய தாமரைக் கண்ணுடைக் கரியவன் செம்மலர் மணிப்பீடத்து
    ஐயன் வாசவன் ஆதி எண் திசைப்புலத்து அமரர் எண் வசு தேவர்
    மையில் கேள்வி சால் ஏழ் எழு மருத்துக் கண் மருத்துவர் இருவோர்வான்
    வெய்ய வாள் வழங்கு ஆறு இரண்டு அருக்கர் ஓர் வெண் சுடர் மதிச் செல்வன்.
    685 கையும் கால்களும் கண்பெற்றுக் கதி பெற்ற கடும்புலி முனிச் செல்வன்
    பை அராமுடிப் பதஞ்சலி பால் கடல் பருகி மாதவன் சென்னி
    செய்ய தாள் வைத்த சிறு முனி குறு முனி சிவம் உணர் சனகாதி
    மெய் உணர்ச்சி ஓர் வாமதேவன் சுகன் வியாதனார் அதன் மன்னோ.
    686 எழுவர் அன்னையர் சித்தர் விச்சாதர் இயக்கர் கின்னரர் வேத
    முழுவரம் புணர் முனிவர் யோகியர் மணி முடித்தலைப் பல நாகர்
    வழு இல் வான் தவ வலி உடை நிருதர் வாள் வலி உடை அசுரேசர்
    குழுவொடும் பயில் பூத வேதாளர் வெம் கூளிகள் அரமாதர்.
    687 ஆண்டினோடு அயனம் பருவம் திங்கள் ஆறு இரண்டு இரு பக்கம்
    ஈண்டு ஐம் பொழுது யோகங்கள் கரணங்கள் இராப்பகல் இவற்றோடும்
    பூண்ட நாழிகை கணம் முதல் காலங்கள் பொருகடல் அதிதிக்கு
    நீண்ட மால் வரைதிக்கு மேகம் மின் நிமிர்ந்த ஐயம் பெரும் பூதம்
    688 மந்திரம் புவனங்கள் தத்துவம் கலை வன்னங்கள் பதம் வேதம்
    தந்திரம் பல சமயநூல் புறம் தழீஇச் சார்ந்த நூல்தரும் ஆதி
    முந்திரங்கிய சதுர்விதம் சரியையே முதலிய சதுட் பாதம்
    இந்திரங்கு நீர் முடியவர் அடியவர் இச்சியா எண் சித்தி.
    689 ஆயிரம் கடல் அனையவாய் பரந்து எழு ஆயிரம் அனிகத்துள்
    ஆயிரம் கதிர் அனையராய் உருத்திரர் அந்தரத்தவர் அண்டம்
    ஆயிரம் தகர் பட்டெனத் துந்துபி ஆயிரம் கலந்து ஆர்ப்ப
    ஆயிரம் சதகோடி யோசனை வழி அரைக் கணத்து இடைச் செல்வார்.
    690 சித்தம் தேர் முனி வேந்தரும் தேவரும் சிவன் உருத் தரித்தோரும்
    தத்தம் தேர் முதல் ஊர்தியர் வார் திகழ் சந்தன மணிக் கொங்கைக்
    கொத்தம் தேமலர் குழல் மனை ஆரோடும் குளிர் வீசும் பாறாச் சென்று
    அத்தம் தேரிடை ஆள் பங்கன் அணிவரைக் அணியராய் வருகின்றார்.
    691 இழிந்த ஊர்தியர் பணிந்து எழும் யாக்கையர் இறைபுகழ் திருநாமம்
    மொழிந்த நாவினர் பொடிப்பு எழும் மெய்யினர் முகிழ்த்த கை முடியேறக்
    கழிந்த அன்பினர் கண் முதல் புலம் கட்கும் கருணை வான் சுவை ஊறப்
    பொழிந்த ஆனந்தத் தேன் உறை திருமலைப் புறத்து வண்டு என மொய்த்தார்.
    692 விரவு வானவர் நெருக்கு அற ஒதுக்குவான் வேத்திரப் படை ஓச்சி
    அரவு வார் சடை நந்தி எம் பிரான் அவர் அணிமணி முடி தாக்கப்
    பரவு தூளியில் புதைபடு கயிலை அம் பருப்பதம் பகல் காலும்
    இரவி மண்டலத்து ஒடுங்கும் நாள் ஒடுங்கிய இந்து மண்டலம் மானும்.
    693 வந்த வானவர் புறநிற்ப நந்தி எம் வள்ளல் அங்கு உள் எய்தி
    எந்தை தாள் பணிந்து ஐய விண்ணவர் எலாம் ஈண்டினர் என ஈண்டுத்
    தந்தி என்ன வந்து அழைத்து வேத்திரத்தினால் தராதரம் தெரிந்து உய்ப்ப
    முந்தி முந்தி வந்து இறைஞ்சினர் சேவடி முண்டக முடி சூட.
    694 தீர்த்தன் முன் பணிந்து ஏத்து கின்றார்களில் சிலர்க்குத் தன் திருவாயின்
    வார்த்தை நல்கியும் சிலர்க்கு அருள் முகிழ் நகை வழங்கியும் சிலர்க்குக் கண்
    பார்த்து நீள் முடி துளக்கியும் சிலர்க் அருள் பரி சிறந்து எழுந்து அண்டம்
    காத்த கண்டன் ஓர் மண்டபத்து இடைப்புக்குக் கடி மணக் கவின் கொள்வான்.
    695 ஆண்ட நாயகன் திரு உளக் குறிப்பு உணர்ந்து அளகை நாயகன் உள்ளம்
    பூண்ட காதல் மேல் கொண்டு எழு அன்பும் தன் புனித மெய்த் தவப் பேறும்
    ஈண்ட ஆங்கு அணைந்து எண் இலா மறைகளும் இருவரும் முனி வோரும்
    தீண்டரும் திரு மேனியைத் தன்கையால் தீண்டி மங்கலம் செய்வான்.
    696 பூந்துகில் படாம் கொய் சகத் தானைபின் போக்கு கோவணம் சாத்தி
    ஏந்தி இரட்டை ஞாண் பட்டிகை இறுக்கி வண்டு இரைக்கும் நாள் மலர்க் குஞ்சி
    வேய்ந்து கற்பகப் புது மலர்ச் சிகழிகை இலைந்து நீறு அணி மெய்யில்
    சாந்த மான் மதம் தண் பனி நீரளாய்த் தடக்கையான் அட்டித்தான்.
    697 இரண்டு செம் சுடர் நுழைந்து இருந்தால் என இணை மணிக் குழைக் காதில்
    சுருண்ட தோடு பொன் குண்டலம் திணி இருள் துரந்து தோள் புறம் துள்ள
    மருண்ட தேவரைப் பரம் என மதிப்பவர் மையல் வல் இருண் மான
    இருண்ட கண்ட மேல் முழுமதி கோத்து என இணைத்த கண்டிகை சாத்தி.
    698 வலம் கிடந்த முந்நூல் வரை அருவியின் வயங்கு மார்பிடைச் சென்னித்
    தலம் கிடந்த வெண் திங்கள் ஊற்று அமுது எனத் தரளம் ஆல் இலை சாத்தி
    இலங் கிடந்த மாலிகைப் பரப்பிடை இமைத்து இருண் முகம் பிளந்து ஆரம்
    கலம் கிடந்த பால் கடல் முளைத்து எழும் இளம் கதிர் எனக் கவின் செய்து.
    699 திசை கடந்த நாற் புயங்களில் பட்டிகை சேர்த்து வாள் எறிக்கும் தோள்
    நசை கடந்த நல்லார் மனம் கவர்ந்து உயிர் நக்க அங்கதம் சாத்தி
    அசை கடங் கலுழ் வாரண உரிவை நீத்து அணிகொள் உத்தரியம் பெய்
    திசை கடந்த மந்திர பவித்திர எடுத்து எழில் விரல் நுழைவித்து.
    700 உடுத்த கோவண மிசை பொலம் துகில் அசைத்து உரகம் ஐந்தலை நால
    இடுத்த போல் வெயின் மணித்தலைக் கொடுக்கு மின் விட இரும்புறம் தூக்கித்
    தொடுத்த தார் புயம் தூக்கி நூபுரம் கழல் சொல் பதம் கடந்து அன்பர்க்கு
    அடுத்த தாள் இட்டு இருநிதிக் கோமகன் அரும் தவப் பயன் பெற்றான்.
    701 செம் கண் மால் அயன் இந்திரன் முதல் பெரும் தேவர்க்கும் யாவர்க்கும்
    மங்கலம் தரு கடைக் கணா அகன் ஒரு மங்கலம் புனைந்தான் போல்
    சங்கை கொண்டு உகும் போதரன் முதுகின் மேல் சரணம் வைத்து எதிர் போந்த
    துங்க மால் விடை மேல் கொடு நடந்தனன் சுரர்கள் பூ மழை தூர்த்தார்.
    702 அந்தரத் தவர் அந்தர துந்துபி ஐந்தும் ஆர்த்தனர் சூழ
    வந்த அரக்கரும் இயக்கரும் பூதரும் மங்கல இயம் கல்லக்
    கொந்தலர்க் கரும் குழல் அர மடந்தையர் கொளைவல் விஞ்சையர் தாளம்
    தந்து அசைத்திட மலர்ந்த பூம் கொம்பர் போல் சாய்ந்து அசைந்தனர் ஆட.
    703 துங்கம் ஆயிரம் கருவி ஆயிரம் மலைத் தூங்கி இருண் முழை தோறும்
    சிங்கம் ஆயிரம் வாய் திறந்து ஆர்த்து எனச்சிரங்கள் ஆயிரம் திண் தோள்
    அங்கம் ஆயிரம் ஆயிரம் உடையவன் ஆயிரம் முகம் தோறும்
    சங்கம் ஆயிரம் ஆயிரம் ஆயிரம் தடக்கையும் பிடித்து ஊத.
    704 போக்கு மாயவன் புணர்ப்பையும் இருள் மலப்புணர்ப்பையும் கடந்து எம்மைக்
    காக்கும் நாயகன் அருச்சனை விடாது அருள் கதி அடைந்துளவாணன்
    தூக்கு நேர் பட ஆயிரம் கரங்களால் தொம் என முகம் தொறும்
    தாக்க வேறு வேறு எழுகுட முழா ஒலி தடம் கடல் ஒலி சாய்ப்ப.
    705 முனிவர் அஞ்சலி முகிழ்த்த செம் கையினர் மொழியும் ஆசியர் உள்ளம்
    கனி அரும்பிய அன்பினர் பரவ உட் கருத்து ஒரு வழிக் கொண்டோர்
    துனிவரும் கண நாதர் கொட்டதிர் கரத் துணையினர் மழைபோலப்
    பனி வரும் கணர் ஆடிய தாளினர் பாடுநாவினர் ஏத்த.
    706 இந்திரன் மணிக் களாஞ்சி கொண்டு ஒரு மருங்கு எய்த மெல் இலை வாசம்
    தந்தில் அங்கு பொன் அடைப்பை கொண்டு ஈசன் ஒர் சார் வர மருத்துக் கோ
    வந்திரம் ஒலி ஆலவட்டம் பணி மாறாவா அழல் தூபம்
    தந்து நேர நீர்க் கடவுள் பொன் கோடிகம் தாமரைக் கரம் தூக்க.
    707 நிருதி ஆடி கொண்டு எதிர்வர அடிக்கடி நிதி முகத்து அளகைகோன்
    கருதி ஆயிரம் சிதறிடத் தண்டி நன்கு ஆம் சுகர் வினை செய்யப்
    பரிதி ஆயிரம் பணாடவி உரகரும் பல்மணி விளக்கு ஏந்தச்
    சுருதி நாயகன் திருவடி முடியின் மேல் சுமந்து பின்புறம் செல்ல.
    708 கங்கை காவிரி ஆதிய நவநிதிக் கன்னியர் குளிர் தூங்கப்
    பொங்குவார் திரைக் கொழுந்து எனக் கவரிகள் புரட்ட வெண் பிறைக் கீற்றுத்
    துங்க வாள் எயிற்று இருள் உடல் குழி விழிச்சுடர் அழல் செம்பங்கிச்
    சங்கவார் குழைக் குறிய குண்டோதரன் தண் மதி குடை தாங்க.
    709 இடிக்கும் வான் உரு மேறுயர் நெடும் கொடி எகின வெண் கொடி ஞாலம்
    முடிக்கும் ஊழி நாள் உளர் கடும் கால் என மூச் செறி விடநாகம்
    துடிக்க வாய் விடு முவண வண் கொடி முதல் சூழ்ந்து சேவகம் செய்யும்
    கொடிக் குழாத்தின் உள் கொடி அரசாய் விடைக் கொடி புடை பெயர்ந்து ஆட.
    710 கண் நுதல் பிரான் மருங்கு இரு கடவுளர் கப்பு விட்டு என தோன்றும்
    வண்ண முத்தலைப் படை எடுத்து ஒரு குட வயிறு உடைப் பெரும் பூதம்
    பண்ண அப்பதி நெண் படைக் கலமும் தன் பக்கமாச் சேவிப்ப
    அண்ணன் முச்சுடர் முளைத்து ஒரு வரை நடந்து அனையது ஓர் மருங்கு எய்த.
    711 பந்த நான் மறைப் பொருள் திரட்டு என வட பாடல் செய்து எதிர் புட்ப
    தந்தன் ஏத்த வான் உயிர் உண உருத்து எழு அடல் விடத்து எதிர் நோக்கும்
    அந்தம் ஆதி இலான் நிழல் வடிவமா ஆடியின் நிழல் போல
    வந்த சுந்தரன் சாத்து நீறொடு திரு மாலையும் எடுத்து ஏந்த.
    712 அன்னத் தேரினன் அயன் வலப்பாங்கர் அராவலி கவர் சேன
    அன்னத் தேரினன் மால் இடப் பாங்கரு மலர்க் கரம் குவித்து ஏத்தப்
    பொன்னத் தேமலர் கொன்றையான் வெள்ளி அம் பொருப்பொடு எழீஇப் போந்தால்
    என்ன தேர் அணி மதுரை மா நகர்ப் புறத்து எய்துவன் அவ்வேலை.
    713 தேவர்கள் தேவன் வந்தான் செம் கண் மால் விடையான் வந்தான்
    மூவர்கண் முதல்வன் வந்தான் முக்கண் எம்பெருமான் வந்தான்
    பூவலர் அயன் மால் காணாப் பூரண புராணன் வந்தான்
    யாவையும் படைப்பான் வந்தான் என்று பொன் சின்னம் ஆர்ப்ப.
    714 பெண்ணினுக்கு அரசி வாயில் பெருந்தகை அமைச்சர் ஏனை
    மண்ணினுக்கு அரசர் சேனை மன்னவர் பிறரும் ஈண்டிக்
    கண்ணினுக்கு இனியான் தன்னைக் கண்டு எதிர் கொண்டு தாழ
    விண்ணினுக்கு அரசன் ஊரின் வியத்தகு நகரில் புக்கான்.
    715 முகில் தவழ் புரிசை மூதூர் முதல் பெரு வாயில் நீந்தி
    அகில் தவழ் மாட வீதி வலம் பட அணைவான் ஆக
    நகில் தழை பொலம் கொம்பு அன்ன நன்னகர் மகளிர் அம் பொன்
    துகில் தழை மருங்குல் ஆயத் தொகைபுறம் தழுவச் சூழ்ந்தார்.
    716 தமிழ் முதல் பதினெண் தேத்து மகளிரும் தாரு நாட்டின்
    அமிழ்த மன்னவரும் முல்லை அம்புயம் குமுதம் நீலம்
    குமிழ் நறும் கோங்கு காந்தள் கோழ் இணர் அசோகம் வாசம்
    உமிழ் தர மலர்ந்த நந்த வனம் என ஒருங்கு மொய்த்தார்.
    717 எம்மை நீர் விடுதிர்ஏ யோ என்ப போல் கலையும் சங்கும்
    விம்ம நாண் மடனும் உங்கள் நெஞ்சுடை வெளியாறாக
    உம்மை நீத்து ஓடும் அந்தோ உரைத்தன முரைத் தோம் என்று
    தம்மை நூபுரம் கால் பற்றித் தடுப்ப போல் ஆர்ப்பச் சென்றார்.
    718 கடி அவிழ் கமலக் காடு பூத்தது ஓர் கருணைவாரி
    அடிமுதல் முடி ஈறு ஆக அலர் விழிக் குவளை சாத்திக்
    கொடிய செம் பதுமப் போது குழல் இசை சூடுவார் போல்
    தொடி அணி கரங்கள் கூப்பித் துதி என இனைய சொல்வார்.
    719 நங்கை என் நோற்றாள் கொல்லோ நம்பியைத் திளைத்தற்கு என்பர்
    மங்கையை மணப்பான் என்னோ வள்ளலும் நோற்றான் என்பர்
    அங் கடி மதுரை என்னோ ஆற்றிய தவந்தான் என்பார்
    இங்கு இவர் வதுவை காண்பான் என்ன நாம் நோற்றோம் என்பார்.
    720 தென்னவன் வருந்தி மேல் நாள் செய்தவப் பேறாப் பெற்ற
    தன் மகள் வதுவை காணத்தவம் செய்தான் இலனே என்பார்
    கன்னிதன் அழகுக் ஏற்ற அழகன் இக் காளை என்பார்
    மன்னவன் இவனே அன்றி வேறு இலை மதுரைக்கு என்பார்.
    721 நங்கை தன் நலனுக்கு ஏற்ப நம்பியைத் தந்தது இந்தத்
    துங்கமா மதி நூல் வல்ல சுமதி தன் சூழ்ச்சி என்பார்
    அங்கவள் தவப் பேறு என்பார் அன்னை தன் கன்னிக்கு அன்றி
    இங்கு இவண் மருகன் ஆக எத்தவம் உடையாள் என்பார்.
    722 பூந்துகில் நெகிழ்ப்பர் சூழ்வர் புணர் முலை அலைப்பர் பூசு
    சாந்தினை உகுப்பர் நாணம் தலைக் கொண்டார் போலச் சாய்வார்
    கூந்தலை அவிழ்ப்பர் வாரிக் கூட்டுவர் முடிப்பர் மேனி
    மாந்தளிர் எங்கு மாரன் வாளிகள் புதையச் சோர் வார்.
    723 தண்ணளி ஒழுக்கம் சார்ந்த குணத்தினைச் சார்ந்தும் இந்த
    வண்ண மென் மலர்கள் என்னே வாளியாய்த் தைத்த என்பார்
    கண் நறும் கூந்தல் வேய்ந்த கடி அவிழ் நீலத்தாரும்
    வெண்நகை அரும்பு முல்லை தாமமும் வெறுத்து வீழ்ப்பார்.
    724 விம்மிச் செம் மாந்த கொங்கை மின் அனார் சிலர் வில் காமன்
    கை மிக்க கணைஏறுண்டு கலங்கிய மயக்கால் தங்கள்
    மைம் மிக்க நெடும் கண் மூரல் வதனமும் அவன் அம்பு என்றே
    தம்மில்தம் முகத்தை நோக்கார் தலை இறக்கிட்டுச் செல்வார்.
    725 பற்றிய பைம் பொன் மேனிப் பசப்பது தேறார் அண்ணல்
    ஒற்றை மால் விடையின் மேல் கொண்டு இருந்து நம் உளத்து மேவப்
    பெற்றனம் இது என் கொல் மாயம் பேதை ஈர் பெருமான் நீண்ட
    கற்றைவார் சடைப் பூம் கொன்றை இது அன்றோ காண்மின் என்பார்.
    726 திங்கள் என்று எழுந்து நம்மைச் சுடுவது என் செம் தீ என்பார்
    புங்கவன் சென்னி மீதும் கிடப்பதே போலும் என்பார்
    அங்கு அவற்கு இந்த வெப்பம் இலை கொல் என்று அயிற்பார் ஆற்றக்
    கங்கை நீர் சுமந்தான் என்பார் அதனையும் காண்மின் என்பார்.
    727 கலையொடு நாணம் போக்கிக் கருத்தொடு வண்ணம் வேறாய்
    உலை யொடு மெழுக்கிட்டு என்ன உருகு கண்ணீரர் ஆகிக்
    கொலையொடு பயில் வேல் கண்ணார் குரிசிறன் பவனி நோக்கி
    அலை யொடு மதியம் சூடும் ஐயன் மெய் அன்பர் ஒத்தார்.
    728 நட்டவர்க்கு இடுக்கண் எய்த நன்றி கொன்றவர் போல் கையில்
    வட்டவாய் தொடியும் சங்கும் மருங்கு சூழ் கலையும் நீங்க
    இட்ட பொன் சிலம்பிட்டு ஆங்கே நன்றியின் இகவார் போல்கால்
    ஒட்டியே கிடப்ப நின்றார் உகுத்த பூம் கொம்பர் அன்னார்.
    729 மின்னகு வேல் கணாள் ஓர் விளங்கு இழை விடை மேல் ஐயன்
    புன்னகை போது நோக்கப் போது முப் புரமும் வேனின்
    மன்னவன் புரமும் சுட்ட அல்லவோ கெட்டேன் வாளா
    இன்னவை சுடாது போமோ ஏழையேம் புரமும் என்றாள்.
    730 உழை விழி ஒருத்தி தன் கண் உரு வெளி ஆகித் தோன்றும்
    குழகனை இரண்டு செம் பொன் கொங்கையும் ஒன்றாய் வீங்கத்
    தழுவுவாள் ஊற்றம் காணா தடமுலை இரண்டே ஆகி
    இழை உடை கிடக்க நீங்கி இருக்கை கண்டு இடைபோல் எய்த்தாள்.
    731 வார் இரும் கொங்கையாள் ஒர் மாதரால் வானோர் உய்யக்
    கார் இருள் விடம் உண்ட அன்று கறுத்ததே அன்று கொன்றைத்
    தார் இரும் சடையார் கண்டம் ஐயன் மீர் தமது நெஞ்சம்
    கார் இரும்பு என்றெ காட்டக் குறி இட்டக் கறுப்பே என்றாள்.
    732 பொன்னவிர் சடையான் முன்னே போனது என் நெஞ்சு தூது ஆய்
    அன்னது தாழ்த்தது என் என்று அழுங்குவாள் ஒருத்தி கெட்டேன்
    என்னது நெஞ்சும் போனது என் என்றனள் ஒருத்தி கேட்ட
    மின் அனாள் வேல் கண் சேந்தாள் விளைத்தனள் அவளும் பூசல்.
    733 செப்பு இளம் கொங்கையாள் ஓர் தெரிவை நீர் திருநோக்கு எம்பால்
    வைப்பது என் மதன் போல் எம்மைச் சுடுவதே அதனுக்கு ஆவி
    அப்பொழுது அளித்தால் போல் எம் ஆவியும் அளித்தாள் இன்று
    மெய்ப் புகழ் உமக்கு உண்டு இன்றெல் பெண் பழி விளையும் என்றாள்.
    734 கவன மால் விடையான் தன்னைக் கடைக் கணித்திலன் என்று ஆங்குஓர்
    சுவணவான் கொடியோர் ஓவத் தொழில் வல்லான் குறுக நோக்கி
    இவனை நீ எழுதித் தந்தால் வேண்டுவ ஈவன் என்றாள்
    அவனை யார் எழுத வல்லார் என்றனன் ஆவி சோர்ந்தாள்.
    735 வலத்து அயன் வரவு காணான் மாலிடம் காணாள் விண்ணோர்
    குலத்தையும் காணாள் மண்ணோர் குழாத்தையும் காணாள் ஞானப்
    புலத்தவர் போலக் கண்ட பொருள் எலாம் மழுமான் செம்கைத்
    தலத்தவன் வடிவாக் கண்டாள் ஒருதனித்து ஐயன் மாது.
    736 முன் பெற்றம் காலில் செல்ல வண்ணலை முன்போய் காண்பான்
    பின் பற்றி ஆசைப் பாசம் பிணித்து எழ ஓடு வாள் ஓர்
    பொன் பெற்ற முலையாள் கொம்பர் அகுமலர் போலத் தாளின்
    மின் பெற்ற காஞ்சி தட்ப விலங்கொடு நடப்பாள் ஒத்தாள்.
    737 விதுக்கலை இலைந்து செம் கண் விடையின் மெல் வரும் ஆனந்த
    மதுக் கடல்தனைக் கண் வாயான் முகந்து உண்டு மகளிர் எல்லாம்
    புதுக்கலை சரிவது ஓரார் புரிவளை கழல்வது ஓரார்
    முதுக் குறை அகல்வது ஓரார் மூழ்கினார் காம வெள்ளம்.
    738 பைத்தழகு எறிக்கு மாடப் பந்தி மேல் நின்று காண்பார்
    கைத்தலம் கூப்பி ஆங்கே கண்களும் நோக்கி ஆங்கே
    சித்தமும் குடிபோய்ச் சொல்லும் செயலும் மாண்டு அம்கண் மாண
    வைத்த மண் பாவை ஓடு வடிவுவேறு அற்று நின்றார்.
    739 அன்பட்ட புரமும் காமன் ஆகமும் சுட்டதீ இம்
    மின் பட்ட சடிலத்து அண்ணல் மெய் என்பது அறியார் நோக்கிப்
    பொன் பட்ட கலனும் மெய்யும் பொரிகின்றார் அவனைப் புல்லின்
    என் பட்டு விடுமோ ஐய ஏழையர் ஆவி அம்மா.
    740 கொடிகள் பூத்து உதிர்ந்த போதில் கொம்பனார் கலையும் சங்கும்
    தொடிகளும் சுண்ணத்தூளும் சுரர் பொழி மலரும் நந்தி
    அடிகள் கைப் பிரம்பு தாக்கச் சிந்திய வண்ட வாணர்
    முடிகளின் மணியும் தாரும் குப்பையாய் மொய்த்தவீதி.
    741 துன்னிய தருப்பை கூட அரசிலை துழாவித் தோய்த்துப்
    பொன் இயல் கலச நன்னீர் பூசுரர் வீசும் அன்னார்
    பன்னியர் வட்டமாக வானவில் பதித்தால் என்ன
    மின்னிய மணி செய் நீரா சனக்கலம் விதியால் சுற்ற.
    742 கொடி முரசு சாடி செம் பொன் குட மணி நெய்யில் பூத்த
    கடி மலர் அனைய தீபம் அங்குசம் கவரி என்னும்
    படிவ மங் கலங்கள் எட்டும் பரித்து நேர் பதுமக் கொம்பர்
    வடிவினார் வந்து காட்ட மாளிகை மருங்கில் செல்வான்.
    743 செப்புரம் கவர்ந்த கொங்கை அரம்பையர் தீபம் காட்டும்
    துப்புர அன்பினார்க்கு தூய மெய் ஞானம் நல்கும்
    முப்புரம் கடந்தான் தன்னை மும் முறை இயங்கள் ஏங்க
    கப்புர விளக்கம் தாங்கி வலம் செயக் கருணை பூத்தான்.
    744 கோயில் முன் குறுகலோடும் ஐம்புலக் குறும்பு தேய்த்த
    தூய நால் வேதச் செல்வர் சுவத்திகள் ஓத நந்தி
    சேஇரும் தடக்கைப் பற்றிச் செம்கண் ஏறு இழிந்து நேர்ந்து
    மாயனும் அயனும் நீட்டும் மலர்க்கரம் இருபால் பற்றி.
    745 எதிர்ந்தரு மறைகள் காணாது இளைத்து அடி சுமந்து காணும்
    முதிர்ந்த அன்பு உருவம் ஆன பாதுகை முடிமேல் சாத்தி
    பதிந்தவர் தலை மேல் கொண்டு பாசவல் வினை தீர்த்து உள்ளம்
    பொதிர்ந்து பேர் இன்பம் நல்கும் பொன்னடிப் போது சாத்தி.
    746 பையா உரியின் அன்ன நடைப் படாம் பரப்பிப் பெய்த
    கொய் அவிழ் போது நீத்தம் குரைகழல் அடி நனைப்பத்
    தெய்வ மந்தார மாரி திரு முடி நனைப்பத் தென்னர்
    உய்ய வந்து அருளும் ஐயன் உள் எழுந்து அருளும் எல்லை.
    747 மங்கல மகளி ரோடும் காஞ்சன மாலை வந்து
    கங்கையின் முகந்த செம்பொன் கரக நீர் அனையார் ஆக்கத்
    திங்கள் அம் கண்ணி வேய்ந்த சிவபரம் சோதி பாத
    பங்கயம் விளக்கி அந்நீர் தலைப் பெய்து பருகி நின்றாள்.
    748 பாத நாள் மலர் மேல் ஈரம் புலர வெண் பட்டான் நீவிச்
    சீத மென் பனி நீராட்டி மான் மத சேறு பூசித்
    தாது அவிழ் புது மந்தாரப் பொன் மலர் சாத்திச் சென்னி
    மீது இரு கரங்கள் கூப்பி வேறு நின்று இதனைச் சொன்னாள்.
    749 அருமையால் அடியேன் பெற்ற அணங்கினை வதுவை செய்தித்
    திருநகர் திருவும் கன்னித் தேயமும் கைக் கொண்டாள் என்று
    உரை செய்தாள் அதற்கு நேர்வார் உள் நகை உடையர் ஆகி
    மருகன் ஆரியங்கள் ஆர்ப்ப வதுவை மண்டபத்தைச் சேர்ந்தார்.
    750 அருத்த நான் மறைகள் ஆர்ப்ப அரி மணித் தவிசில் ஏறி
    நிருத்தன் ஆங்கு இருந்து சூழ நின்ற மால் அயனை ஏனை
    உருத்திராதி யரை பின்னும் ஒழிந்த வானவரைத் தத்தம்
    திருத்தகு தவிசின் மேவத் திருக் கடை நாட்டம் வைத்தான்.
    751 விண்டல வானோர் ஏனோர் இடைதலான் ஞாலச் செல்வி
    பண்டையள் அன்றி இன்று பரித்தனள் பௌவம் ஏழும்
    உண்டவன் தன்னைத் தான் இன்று உத்தரத்து இருத்தினானோ
    அண்டர் நாயகன் தன் ஆனை வலியினோ அறியேம் அம்மா.
    752 மாமணித் தவிசில் வைகி மணவினைக்கு அடுத்த ஓரை
    தாம் வரும் அளவும் வானத் தபனிய மலர்க் கொம்பு அன்னார்
    காமரு நடன நோக்கிக் கருணை செய்து இருந்தான் இப்பால்
    கோமகள் வதுவைக் கோலம் புனைதிறம் கூறல் உற்றேன்.
    753 மாசு அறுத்து எமை ஆனந்த வாரி நீராட்டிப் பண்டைத்
    தேசு உரு விளக்கவல்ல சிவபரம் பரையைச் செம்பொன்
    ஆசனத்து இருத்தி நானம் அணிந்து குங்குமச் சேறு அப்பி
    வாச நீராட்டினார் கண் மதிமுகக் கொம்பர் அன்னார்.
    754 முரசொடு சங்கம் ஏங்க மூழ்கிநுண் தூசு சாத்தி
    அரசியல் அறத்திற்கு ஏற்ப அந்தணர்க்கு உரிய தானம்
    விரை செறி தளிர்க்கை ஆர வேண்டுவ வெறுப்பத் தந்து
    திரை செய் நீர் அமுதம் அன்னாடு திருமணக் கோலம் கொள்வாள்.
    755 செம் மலர்த் திருவும் வெள்ளைச் செழுமலர்த் திருவும் தங்கள்
    கைமலர்த் தவப் பேறு இன்று காட்டுவார் போல நங்கை
    அம்மலர் அனிச்ச மஞ்சு மடியில் செம் பஞ்சு தீட்டி
    மைம் மலர்க் குழல் மேல் வாசக் காசறை வழியப் பெய்து.
    756 கொங்கையின் முகட்டில் சாந்தம் குளிர் பனிநீர் தோய்த்து அட்டிப்
    பங்கய மலர் மேல் அன்னம் பவளச் செவ்வாய் விட்டு ஆர்ப்பத்
    தங்கிய என்ன வார நூபுரம் ததும்பச் செங்கேழ்
    அங்கதிர்ப் பாதசாலம் கிண் கிணி அலம்பப் பெய்து.
    757 எண் இரண்டு இரட்டி கோத்த விரிசிகை இருபத்து ஒன்றில்
    பண்ணிய கலாபம் ஈர் ஏழ் பருமநால் இரண்டில் செய்த
    வண்ணமே கலை இரண்டில் காஞ்சி இவ் வகை ஓர் ஐந்தும்
    புண்ணியக் கொடி வண்டு ஆர்ப்ப பூத்த போல் புலம்பப் பூட்டி.
    758 பொன் மணி வண்டு வீழ்ந்த காந்தளம் போது போல
    மின் மணி ஆழி கோத்து மெல் விரல் செங்கைக் ஏற்ப
    வன் மணி வைர யாப்புக் கடகமும் தொடியும் வானத்
    தென் மணிக் கரங்கள் கூப்ப இருதடம் தோளில் ஏற்றி.
    759 மரகத மாலை அம் பொன் மாலை வித்துரும மாலை
    நிரைபடுவான வில்லின் இழல் பட வாரத் தாமம்
    விரைபடு களபச் சேறு மெழுகிய புளகக் கொங்கை
    வரைபடு அருவி அன்றி வனப்பு நீர் நுரையும் மான்.
    760 உருவ முத்து உருவாய் அம் முத்து உடுத்த பல் காசு கோளாய்
    மருவக் காசு சூழ்ந்த மாமணி கதிராய்க் கங்குல்
    வெருவ விட்டு இமைக்கும் ஆர மேருவின் புறம் சூழ்ந்து ஆடும்
    துருவச் சக்கரம் போல் கொங்கை துயல் வர விளங்கச் சூட்டி.
    761 கொடிக் கயல் இனமாய் நின்ற கோட்சுறா வேறும் வீறு
    தொடிக் கலை மதியும் தம் கோன் தொல் குல விளக்காய்த் தோன்றும்
    பிடிக் இரு காதின் ஊடு மந்தணம் பேசு மாப் போல்
    வடிக்குழை மகரத் தோடு பரிதி வாண் மழுங்கச் சேர்த்து.
    762 மழைக்கும் மதிக்கும் நாப்பண் வானவில் கிடந்தால் ஒப்ப
    இழைக்கும் மா மணி சூழ் பட்டம் இலம்பக இலங்கப் பெய்து
    தழைக்குமா முகிலை மைந்தன் தளை இடல் காட்டு மா போல்
    குழைக்கு நீர்த் தகர ஞாழல் கோதை மேல் கோதை ஆர்த்து.
    763 கற்பகம் கொடுத்த விந்தக் காமரு கலன்கள் எல்லாம்
    பொற்ப மெய்ப் படுத்து முக்கண் புனிதனுக்கு ஈறு இலாத
    அற்புத மகிழ்ச்சி தோன்ற அழகு செய்து அமையம் தோன்றச்
    சொல் கலையாளும் பூவின் கிழத்தியும் தொழுது நோக்கி.
    764 சுந்தர வல்லி தன்னைச் சோபனம் என்று வாழ்த்தி
    வந்து இருகையும் தங்கள் மாந்தளிர் கைகள் நீட்டக்
    கொந்தவிழ் கோதை மாது மறம் எலாம் குடிகொண்டு ஏறும்
    அந்தளிர் செங்கை பற்றா எழுந்தனண் மறைகள் ஆர்ப்ப.
    765 அறைந்தன தூரியம் ஆர்த்தன சங்கம்
    நிறைந்தன வானவர் நீள் மலர் மாரி
    எறிந்தன சாமரை ஏந்திழையார் வாய்ச்
    சிறந்தன மங்கல வாழ்த்து எழு செல்வம்.
    766 அடுத்தனல் சுந்தரி அம் பொன் அடைப்பை
    எடுத்தனள் ஆதி திலோத்தமை ஏந்திப்
    பிடித்தனள் விந்தை பிடித்தனள் பொன்கோல்
    உடுத்த நெருக்கை ஒதுக்கி நடந்தாள்.
    767 கட்டவிழ் கோதை அரம்பை களாஞ்சி
    தொட்டனள் ஊர்பசி தூமணி ஆல
    வட்டம் அசைத்தனள் வன்ன மணிக்கா
    சிட்டிழை கோடிக மேனகை கொண்டாள்.
    768 கொடிகள் எனக் குளிர் போதொடு சிந்தும்
    வடி பனி நீரினர் விசு பொன் வண்ணப்
    பொடியினர் ஏந்திய பூம்புகை தீபத்
    தொடி அணி கையினர் தோகையர் சூழ்ந்தார்.
    769 தோடு அவிழ் ஓதியர் சோபன கீதம்
    பாட விரைப் பனி நீரொடு சாந்தம்
    ஏடு அவிழ் மென் மலர் இட்டப் படத்தில்
    பாடக மெல்லடி பைப்பய வையா.
    770 செம் மலராளடு நாமகள் தேவி
    கைம்மலர் பற்றின கல்வி ஒடு ஆக்கம்
    இம்மையிலே பெறுவார்க்கு இது போது என்று
    அம்மணி நூபும் ஆர்ப்ப நடந்தாள்.
    771 ஒல்கினண் மெல்ல ஒதுங்கினள் அன்பு
    பில்கி இருந்த பிரான் அருகு எய்தி
    மெல்கி எருத்தம் இசைத்த தலை தூக்கிப்
    புல்கிய காஞ்சி புலம்ப இருந்தாள்.
    772 அற்பக இமைக்கும் செம்பொன் அரதன பீடத்து உம்பர்ப்
    பொற்பு அகலாத காட்சிப் புனிதன் ஓடு இருந்த நங்கை
    எற்பகல் வலம் கொண்டு ஏகு எரிகதிர் வரையின் உச்சிக்
    கற்பக மருங்கில் பூத்த காமரு வல்லி ஒத்தாள்.
    773 பண்ணுமின் இசையும் நீரும் தண்மையும் பாலும் பாலில்
    நண்ணும் இன் சுவையும் பூவும் நாற்றமும் மணியும் அம் கேழ்
    வண்ணமும் வேறு வேறு வடிவு கொண்டு இருந்தால் ஒத்த
    அண்ணலும் உலகம் ஈன்ற அம்மையும் இருந்தது அம்மா.
    774 விண் உளார் திசையின் உள்ளார் வேறு உளார் பிலத்தின் உள்ளார்
    மண் உளார் பிறரும் வேள்வி மண்டபத்து அடங்கி என்றும்
    பண் உளார் ஓசை போலப் பரந்து எங்கும் நிறைந்த மூன்று
    கண் உளார் அடியின் நீழல் கலந்து உளார் தம்மை ஒத்தார்.
    775 ஆய போது ஆழி அங்கை அண்ணல் பொன் கரக நீரால்
    சேயவான் சோதி ஆடல் சேவடி விளக்கிச் சாந்தம்
    தூய போது அவிழ்ச் சாத்தித் தூபமும் சுடரும் கோட்டி
    நேயமோடு அருச்சித்து ஐய நிறை அருள் பெற்று நின்றான்.
    776 விண் தலத்து அவருள் ஆதி வேதியன் பாத தீர்த்தம்
    முண்டகத் அவனும் மாலும் முனிவரும் புரந்தர் ஆதி
    அண்டரும் நந்திதேவு அடுகணத்தவரும் ஏனைத்
    தொண்டரும் புறம்பும் உள்ளும் நனைத்தனர் சுத்தி செய்தார்.
    777 அத்தலை நின்ற மாயோன் ஆதி செம்கரத்து நங்கை
    கைத்தலம் கமலப் போது பூத்தது ஓர் காந்தள் ஒப்ப
    வைத்தரு மனுவாய் ஓதக் கரகநீர் மாரி பெய்தான்
    தொத்தலர் கண்ணி விண்ணோர் தொழுது பூ மாரி பெய்தார்.
    778 ஆடினார் அரம்பை மாதர் விஞ்சையர் அமுத கீதம்
    பாடினார் அர என்று ஆர்த்துப் பரவினார் முனிவர் வானோர்
    மூடினார் புளகப் போர்வை கணத்தவர் முடிமேல் செம்கை
    சூடினார் பலரும் மன்றல் தொடு கடல் இன்பத்து ஆழ்ந்தார்.
    779 புத்தனார் எறிந்த கல்லும் போது என இலைந்த வேத
    வித்தனார் அடிக் கீழ் வீழ விண்ணவர் முனிவர் ஆனோர்
    சுத்த நா ஆசி கூறக் குங்குமத் தோயம் தோய்ந்த
    முத்த வால் அரிசிவீசி மூழ்கினார் போக வெள்ளம்.
    780 அம்மையோடு அப்பன் என்ன அலர் மணம் போல நீங்கார்
    தம் அருள் விளை யாட்டாலே ஆற்ற நாள் தமியர் போல
    நம்மனோர் காணத் தோன்றி நன் மணம் புணர ஞாலம்
    மும்மையும் உய்ந்த என்னாத் தத்தமின் மொழியல் உற்றார்.
    781 காமரு சுரபித் தீம்பால் கற்பகக் கனி நெய் கன்னல்
    நமரு சுவைய இன்ன நறு மது வருக்கம் செம் பொன்
    ஆம் அணி வட்டத் திண்கால் பாசனத்து அமையப் பெய்து
    தேமரு கொன்றை யானைத் திருக்கை தொட்டு அருள்க என்றார்.
    782 அம்கை வைத்து அமுது செய்தாங்கு அக மகிழ்ந்து அட்ட மூர்த்தி
    கொங்கு அவிழ் குமுதச் செவ்வாய் கோட்டிவாண் முறுவல் பூத்தான்
    புங்கவர் முனிவர் கற்பின் மகளிரும் போதின் மேய
    மங்கையர் இருவரோடும் மங்கலம் பாடல் உற்றார்.
    783 மாக்கடி முளரி வாணன் மைந்தரோடு ஒருங்கு வைகி
    நாக்களின் நடுவாரத் உடுவையான் அறுக நெய் ஆர்த்தி
    ஆக்கிட ஆர மாந்தி வலம் சுழித்து அகடு வீங்கித்
    தேக்கிடும் ஒலியின் ஆர்த்து நிமிர்ந்தது தெய்வச் செம்தீ.
    784 சுற்று நான் மறைகள் ஆர்ப்ப தூரியம் சங்கம் ஏங்கக்
    கற்ற நான் முகத்தோன் வேள்விச் சடங்கு நூல் கரைந்த ஆற்றால்
    உற்ற மங்கல நாண் சாத்தி முழுது உலகு ஈன்றான் செம்கை
    பற்றினன் பற்று இலார்க்கே வீடு அருள் பரம யோகி.
    785 இணர் எரித் தேவும் தானே எரிவளர்ப்ப அவனும் தானே
    உணவு கொள்பவனும் தானே ஆகிய ஒருவன் வையம்
    புணர் உறு போகம் மூழ்கப் புருடனும் பெண்ணும் ஆகி
    மணவினை முடித்தான் அன்னான் புணர்ப்பை யார் மதிக்க வல்லார்.
    786 பின்பு தன் பன்னி ஓடு பிறைமுடிப் பெருமான் கையில்
    நன் பொரி வாங்கி செந்தீ நாம் அடுத்து எனைத்தும் ஆன
    தன் படி உணர்ந்த வேத முனிவர்க்குத் தக்க தானம்
    இன்பகம் ததும்ப நல்கி எரிவல முறையால் வந்து.
    787 மங்கலம் புனைந்த செம்பொன் அம்மிமேல் மாணாட்டி பாத
    பங்கய மலரைக் கையால் பரிபுரம் சிலம்பப் பற்றிப்
    புங்கவன் மனுவல் ஏற்றிப் புண்ணிய வசிட்டன் தேவி
    எங்கு எனச் செம்கை கூப்பி எதிர்வர அருள் கண் சாத்தி.
    788 விதிவழி வழாது வேள்வி வினை எலாம் நிரம்ப இங்ஙன்
    அதிர் கடல் உலகம் தேற ஆற்றி நான் மறைகள் ஆர்ப்பக்
    கதிர் மணி நகையார் வாழ்த்தக் காமனைக் காய்ந்த நம்பி
    மதி நுதன் மங்கை ஓடு மணவறை தன்னில் புக்கான்.
    789 மனிதரும் இமையாது ஐயன் மங்கல வனப்பு நோக்கிப்
    புனித வானவரை ஒத்தர் அவர்க்கு அது புகழோ எந்தை
    கனிதரு கருணை நாட்டம் பெற்றவர் கடவுள் ஓரால்
    பனி தரு மலர் இட்டு ஏத்தி வழிபடல் பாலர் அன்றோ.
    790 மானிடர் இமையோர் என்னும் வரம்பு இலர் ஆகி வேள்வி
    தான் இடர் அகல நோக்கித் தலைத் தலை மயங்கி நின்றார்
    கான் இடம் நடனம் செய்யும் கண்நுதல் அருள் கண் நோக்கால்
    ஊன் இடர் அகலும் நாளில் உயர்ந்தவர் இழிந்தோர் உண்டோ.
    791 மணவறைத் தவிசின் நீங்கி மன்றல் மண்டபத்தில் போந்து
    கண மணிச் சேக்கை மேவிக் கரு நெடும் கண்ணன் வாணி
    துணை வனே முதல் வானோர்க்கும் சூழ் கணத் தொகைக்கும் என்றும்
    தணவறு செல்வம் தந்தோன் சாறு சால் சிறப்பு நல்கி.
    792 ஏட்டுவாய் முளரியான் மால் ஏனை வானவரும் தத்தம்
    நாட்டு வாழ் பதியில் செல்ல நல்விடை கொடுத்து வேந்தர்க்
    காட்டுவான் ஆடிக் காட்டும் தன்மை போல் அரசு செய்து
    காட்டுவான் ஆகி ஐயன் திருவுளக் கருணை பூத்தான்.
    793 அதிர் விடைக் கொடி அம் கயல் கொடியாக வராக் கலன் பொன் கலனாகப்
    பொதி அவிழ் கடுக்கை வேம்பு அலர் ஆக புலி அதள் பொலம் துகிலாக
    மதிமுடி வைர மணிமுடியாக மறை கிடந்து அலந்து மா மதுரைப்
    பதி உறை சோம சுந்தரக் கடவுள் பாண்டியன் ஆகி வீற்றிருந்தான்.
    794 விண் தவழ் மதியம் சூடும் சுந்தர விடங்கப் புத்தேள்
    கொண்டதோர் வடிவுக்கு ஏற்பக் குருதி கொப்புளிக்கும் சூலத்
    திண் திறல் சங்கு கன்னன் முதல் கணத் தேவர் தாமும்
    பண்டைய வடிவ மாறி பார்த்திபன் பணியின் நின்றார்.
    795 தென்னவன் வடிவம் கொண்ட சிவபரன் உலகம் காக்கும்
    மன்னவர் சிவனைப் பூசை செய்வது மறை ஆறு என்று
    சொன்னது மன்னர் எல்லாம் துணிவது பொருட்டுத்தானும்
    அந்நகர் நடுவூர் என்று ஒர் அணிநகர் சிறப்பக் கண்டான்.
    796 மெய்ம்மை நூல் வழியே கோயில் விதித்து அருள் குறி நிறீ இப்பேர்
    இம்மையே நன்மை நல்கும் இறை என நிறுவிப் பூசை
    செம்மையால் செய்து நீப வனத்து உறை சிவனைக் கால
    மும்மையும் தொழுது வையம் முழுவதும் கோல் நடாத்தும்.
    797 பூவரு மயன் மால் ஆதிப் புனிதரும் முனிவர் ஏனோர்
    யாவரும் தனையே பூசித்து இக பரம் அடைய நின்ற
    மூவருள் மேலா முக்கண் மூர்த்தியே பூசை செய்த
    தாவர இலிங்க மேன்மைத்தகுதி யார் அளக்க வல்லார்.
    798 மனித்தருக்கு அரசாகித் எவ் வேந்தர்க்கு மடங்கலாய் மட நல்லார்க்
    இனித்த ஐங்கணைக்கு ஆளைஆய் நிலமகள் இணர்த்துழாய் அணிமாலாய்
    அனித்த நித்தம் ஓர்ந்து இக பரத்து ஆசை நீத்து அகம் தௌ¤ந்து அவர்க்கு ஒன்றாய்த்
    தனித்த மெய்யறிவு ஆனந்தம் ஆம் பரதத்துவமாய் நின்றான்.

    திருமணப் படலம் சுபம்
    ----------------------


    06. வெள்ளிஅம்பலத் திருக்கூத்தாடிய படலம் (799 - 826)

    799 உலகியன் நிறுத்து வான் வந்து ஒரு பரம் சுடர்வான் திங்கள்
    குலமணி விளக்கை வேட்டுக் கோமுடி கவித்துப் பாராண்டு
    இலகுறு தோற்றம் ஈதான் முனிவர் இருவர் தேற
    அலகிலா ஆனந்த கூத்துச் செய்தவாறு அறையல் உற்றாம்.
    800 உலகியன் நிறுத்து வான் வந்து ஒரு பரம் சுடர்வான் திங்கள்
    குலமணி விளக்கை வேட்டுக் கோமுடி கவித்துப் பாராண்டு
    இலகுறு தோற்றம் ஈதான் முனிவர் இருவர் தேற
    அலகிலா ஆனந்த கூத்துச் செய்தவாறு அறையல் உற்றாம்.
    801 பொன் அவிர் கமலம் பூத்த புனித நீராடித் தத்தம்
    நன்னெறி நியமம் முற்றி நண்ணினார் புலிக்காலோனும்
    பன்னக முனியும் தாழ்ந்து பரவி அம் பலத்துள் ஆடும்
    நின்னருள் நடம்கண்டு உண்பது அடியேங்கள் நியமம் என்£றர்.
    802 என்னலும் அந்தக் கூத்தை இங்குநாம் செய்தும் தில்லைப்
    பொன்னகர் உலகம் எல்லாம் உருவம் ஆம் புருடன் உள்ளம்
    இன்னது துவாத சாந்தம் என்று இறை அருளிச் செய்ய
    மன்னவ ஏனை அங்கம் ஆவென மன்னன் சொல்வான்.
    803 அரைக்கும் மேல் உலகு ஏழ் என்று அரைக்குக் கீழ் உலகு ஏழ் என்றும்
    உரைக்கலால் உலகம் எல்லா உருவம் ஆம் புருடற்கு இந்தத்
    தரைக்கு மேல் அனந்தம் தெய்வத் தானம் உண்டு அனைத்தும் கூறின்
    வரைக்கு உறா சில தானங்கள் வகுத்து உரை செய்யக் கேண்மின்.
    804 திருவளர் ஆரூர் மூலம் திருவானைக் காவே குய்யம்
    மருவளர் பொழில் சூழ் அண்ணாமலை மணி பூரம் நீவிர்
    இருவரும் கண்ட மன்றம் இதயம் ஆம் திருக்காளத்தி
    பொருவரும் கண்டம் ஆகும் புருவ மத்தியம் ஆம் காசி.
    805 பிறை தவழ் கயிலைக் குன்றம் பிரமரந் திரமாம் வேதம்
    அறைதரு துவாத சாந்த மதுரை ஈது அதிகம் எந்த
    முறையினால் என்னின் முன்னர் தோன்றிய முறையால் என்றக்
    கறை அறு தவத்த ரோடு கவுரியன் கோயில் புக்கான்.
    806 தன் அருள் அதனால் நீத்த தன்னையே தேடிப் போந்த
    மின்னவிர் கயிலைதானோ விடை உரு மாறி மன்றாய்
    மன்னியது ஏயோ திங்கள் மண்டல மேயோ என்னப்
    பொன் அவிர் விமானக் கீழ்பால் வெள்ளி அம் பொது உண்டாக.
    807 மின் பயில் பரிதிப் புத்தேள் பால் கடல் விளங்கி ஆங்குப்
    பின் பதன் இசை மாணிக்கப் பீடிகை தோன்றிற்று அன்னது
    அன்பர் தம் உளமே ஆகும் அல்லது வேதச் சென்னி
    என்பது ஆம் அஃதே அன்றி யாது என இசைகற் பாற்றே.
    808 அன்னது ஓர் தவிசின் உம்பர் ஆயிரம் கரத்தால் அள்ளித்
    துன் இருள் விழுங்கும் கோடி சூரியர் ஒரு காலத்து
    மன்னினர் உதித்தால் ஒப்ப மன மொழி பக்கம் கீழ்மேல்
    பின் முதல் கடந்த ஞானப் பேர் ஒளி வடிவாய்த் தோன்றி.
    809 முந்துறு கணங்கள் மொந்தை தண்ணுமை முழக்கம் செய்ய
    நந்தி மா முழவம் தாக்க நாரணன் இடக்கை ஆர்ப்ப
    வந்துகம் தருவ நூலின் மரபுளி இருவர் பாட
    ஐந்து துந்துபியும் கல்லென்று ஆர் கலி முழக்கம் காட்ட.
    810 மது முகத்து அலர்ந்த வெண் தாமரைகள் சுருதிக் கூட்டச்
    சது முகத்து ஒருவன் சாமகீத யாழ் தடவிப் பாட
    விது முகத்து அருகு மொய்க்கும் மீன் என ஞான வெள்ளிப்
    பொது முகத்து அமரர் தூற்றும் பூமழை எங்கும் போர்ப்ப.
    811 பொரும் கடல் நிறத்த செம் தீ பொங்குளை குறளன் மீது
    பெரும் கடல் வடவைச் செம்கண் பிதுங்க மேல் திரிந்து நோக்கி
    முரும் கடல் எரியில் சீற முதுகிற வலத்தாள் ஊன்றிக்
    கரும் கடல் முளைத்த வெய் யோன் காட்சியில் பொலிந்து நின்று.
    812 கொய்யும் செம் கமலப் போது குவிந்து என எடுத்துக் கூத்துச்
    செய்யும் புண்டரிகத் தாளும் திசை கடந்து உள ஈர் ஐந்து
    கையும் திண் படையும் தெய்வ மகளிர் மங்கல நாண் காத்த
    மை உண்ட மிடரும் சங்க வார் குழை நுழைந்த காதும்.
    813 செக்கரம் சடையும் தேசு ஆர் வெண் திரு நீறும் தெய்வ
    முக்கணும் உரகக் கச்சும் முள் எயிறு இமைக்கும் மார்பும்
    மைக்கரும் கயல் கண் நங்கை வல்லியின் ஒதுங்கி நிற்கும்
    பக்கமும் அவள் மேல் வைத்த பார்வையும் நகையும் தோன்ற.
    814 கங்கை ஆறு அலம்பும் ஓசை கடுக்கை வண்டு இரங்கும் ஓசை
    மங்கல முழவின் ஓசை மந்திர வேத ஓசை
    செம்கை ஆடு எரியின் ஓசை திருவடிச் சிலம்பின் ஓசை
    எங்கணும் நிரம்பி அன்பர் இரு செவிக்கு அமுதம் ஊற்ற.
    815 ஆடினான் அமல மூர்த்தி அஞ்சலி முகிழ்த்துச் சென்னி
    சூடினார் அடியில் வீழ்ந்தார் சுருதி ஆயிரம் நாவாரப்
    பாடினார் பரமானந்தப் பரவையில் படிந்தார் அன்பு
    நீடினார் நிருத்த ஆனந்தம் காண்பது நியமம் பூண்டார்.
    816 முனிவர் கந்தருவர் வானோர் தானவர் மோன யோகர்
    புனித கிம்புருடர் ஆதிப் புலவரும் இறைஞ்சி அன்பில்
    கனிதரு இன்பத்து ஆழ்ந்தார் திருமணம் காணவந்த
    மனிதரும் காணப் பெற்றார் மாதவர் பொருட்டான் மன்னோ.
    817 அனந்தனா முனிவர் வேந்தன் அளவு இல் ஆனந்தம் மூறி
    மனம் தனி நிரம்பி மேலும் வழிவது போல மார்பம்
    புனைந்த புண்ணிய வெண்ணீறு கரைந்திடப் பொழி கண் நீருள்
    நனைந்து இரு கரம் கூப்பி நாதனைப் பாடுகின்றான்.
    818 பராபர முதலே போற்றி பத்தியில் விளைவாய் போற்றி
    சராசரம் ஆகி வேறாய் நின்ற தற் பரனே போற்றி
    கராசல உரியாய் போற்றி கனக அம்பலத்துள் ஆடும்
    நிராமய பரமானந்த நிருத்தனே போற்றி போற்றி.
    819 ஒன்று ஆகி ஐந்தாயை ஐந்து உருவாகி வருவாய் போற்றி
    இன்றாகிச் சென்ற நாளாய் எதிர் நாளாய் எழுவாய் போற்றி
    நன்றாகித் தீயது ஆகி நடுவாகி முடிவாய் மன்றுள்
    நின்றாடும் பரமானந்த நிருத்தனே போற்றி போற்றி.
    820 அடியரேம் பொருட்டு வெள்ளி அம்பலத்து ஆடல் போற்றி
    பொடி அணி தடம் தோள் போற்றி புரி சடை மகுடம் போற்றி
    கடி அவிழ் மலர் மென் கூந்தல் கயல் விழி பாகம் போற்றி
    நெடிய நல் பரமானந்த நிருத்தனே போற்றி போற்றி.
    821 என்று நின்று ஏத்தினான் பின் இருவரை நோக்கி வெள்ளி
    மன்றுள் நின்று ஆடா நின்ற மறை முதல் கருணை கூர்ந்து
    நன்று நீர் வேட்டது என் என்று அருள் செய்ய நாதன் பாதம்
    துன்று மெய் அன்பில் தாழ்ந்து தொழுது நின்று இதனைச் சொல்வார்.
    822 எந்தையிருத் திருக்கூத்தென் றுமிந்நிலைநின் றியார்க்கும்
    பந்தவெம் பாசநீங்கப் பரித்தருள் செய்தி யென்னச்
    செந்தமிழ்க் கன்னி நாடுசெய்தமா தவப்பே றெய்தத்
    தந்தன மென்றான் வேந்தலை தடுமாறநின்றான்.
    823 அராமுனி ஈது வேண்டும் ஆதி எம் பெரும் இந்த
    நிராமய பரமானந்த நிருத்த நேர் கண்டோர் எல்லாம்
    தராதலம் மிசை வந்து எய்தாத் தனிக்கதி பெறுதல் வேண்டும்
    பராபர என்று தாழ்ந்தான் பகவனும் அதற்கு நேர்ந்தான்.
    824 ஆர்த்தனர் கணத்தோர் கை கோத்து ஆடினார் அலர் பூ மாரி
    தூர்த்தனர் விண்ணோர் கண்ணீர் துளும்பினர் முனிவர் ஆகம்
    போர்த்தனர் புளக அன்பில் புதைந்தனர் விழுங்குவார் போல்
    பார்த்தனர் புல்லிக் கொண்டார் பரவிய அவ் இருவர் தம்மை.
    825 அனித்தம் ஆகிய பூத ஐம் பொறி புலன் ஆதி ஆறு ஆகி
    இனித்த மாயையோடு இருவினைத் தொடக்கினும் இருளினும் வேறு ஆகித்
    தனித்த யோகிகள் அகம் நிறைந்து ஆடிய தனிப்பெரும் திருக்கூத்தைக்
    குனித்த வண்ண மாக் கண்டவர்க்கு இகபரம் கொடுத்து அவண் உறை கின்றான்.
    826 குனிவில் ஆதிரைத் தினம் தொடுத்து எதிர் வரு கொடுவில் ஆதிரை எல்லை
    புனித ஆடக முளரி தோய்ந்து தனித்தனிப் பொது நடம் தரிசித்து அங்கு
    இனிது அமர்ந்து நூற்று எண் மடம் ஐந்து எழுத்து எண்ணி இந்நிலை நிற்கும்
    கனியும் அன்பினார் எண்ணியாங்கு எய்துவர் கருதிய வரம் எல்லாம்.

    வெள்ளிஅம்பலத் திருக்கூத்தாடிய படலம் சுபம்
    ------------------------


    1.7. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் (827 - 848)

    827 பன்ன கேசனும் அடு புலிப் பாதனும் பணிய
    மின்னுவார் சடை மன்னவன் வெள்ளி மன்று ஆடல்
    சொன்னவாறு இது பசித்து அழல் சுட ஒரு பூதம்
    அன்ன மாமலை தொலைத்த ஆறு எடுத்து இனி அறைவாம்.
    828 மின் இயல் கடை மாதவர் வேதியர் ஏனோர்
    எந் நிலத்து உள மன்னவர் யாவர்க்கும் முறையே
    பொன் இயல் கலத்து அறு சுவைப் போனகம் அருத்தா.
    829 பூசு கின்றவும் உடுப்பவும் பூண்பவும் பழுக்காய்
    வாச மெல்லிலை ஏனவும் அம் முறை வழங்காத்
    தேச மன்னவர் ஏனையோர் செல்லுநர்ச் செலுத்தி
    ஈசன் அன்புறு கற்பினாள் இருக்கும் அவ் வேலை.
    830 மடை வளத் தொழில் புலவர் வந்து அடியிணை வணங்கி
    அடியரேம் அட்ட போனகம் ஆயிரத்து ஒன்றின்
    இடையது ஆயினும் தொலைந்திலது ஆம் கண் மேல் செய்யக்
    கடவது ஏது எனப் பிராட்டி தன் கணவர் முன் குறுகா.
    831 பணிந்து ஒதுங்கி நின்று அடி கண் முப்பத்து முக்கோடி
    கணங்கள் தம்மொடும் இங்கு எழுந்து அருள்வது கருதி
    இணங்கும் இன் சுவைப் போனகம் எல்லை என்று ஆக்கி
    உணங்கு கின்றது உண்டு எஞ்சிய எனைத்து என உரைக்கின்.
    832 இமையக் குன்றமும் அடைகலாது இதன் புறம் கிடந்த
    சிமையக் குன்றுகள் ஈட்டமும் சேர்ந்து என நிமிரச்
    சமையக் கொட்டிய வால் அரிப் புழுக்கலும் சாதக்
    அமையக் கொட்டிய கறிகளின் வருக்கமும் அனைத்தே.
    833 என்ற போது இறை எம்பிரான் தேவியார் இடத்தில்
    ஒன்றும் அன்பினால் ஒரு விளையாடலை நினைத்தோ
    தன் தனிக்குடைப் பாரிடத் தலைவனது ஆற்றல்
    அன்றி யாவரும் அறிந்திடக் காட்டாவோ அறியேம்.
    834 சிறிது வாள் நகை செய்து மூ வேந்தரில் சிறந்த
    மறுவில் மீனவன் அரும் பெறல் மகள் உனக்கு அரிதில்
    பெறுவது ஏது வான் தருவும் நின் பணி செயப் பெற்று இங்கு
    உறைவதேல் பிறர் திரு எலாம் உன்னதே அன்றோ.
    835 அளவு இலாத நின் செல்வத்தின் பெருக்கை நாம் அறிய
    விளைவு செய்தனை போலும் நின் விருந்து உணப் பசியால்
    களை அடைந்தவர் ஆகி நம் கணத்தினுள் காணேம்
    தளவ மூரலாய் யாம் செய்ய தக்கது ஏது என்றான்.
    836 அடுக்க நின்ற குண்டோதரன் அகட்டிடை வடவை
    மடுக்க உன்னினான் அது வந்து வயிற்று எரி பசியாய்த்
    தொடுக்க ஆலம் உண்டாங்கு உடல் சோர்ந்து வேர்த்து ஆவி
    ஒடுக்கம் உற்று ஐய பசியினால் உயங்கினேன் என்றான்.
    837 குடை எடுக்கும் இக் குறிய தாள் குறட்கு ஒருபிடி சோறு
    இடுமின் அப்புறம் சோறுமால் எனத் தொழுது எல்லாம்
    உடைய நாயகி போயினாள் குறியனும் உடனே
    நடை தளர்ந்து கண் புதைந்து வாய் புலர்ந்திட நடந்தான்.
    838 படைக்கண் ஏவலர் இறைமகள் பணியினால் பசிநோய்
    தொடுத்தவன் தனைக் கொண்டு போய் சொன்றி முன் விடுத்தார்
    அடுத்து இருந்ததே கண்டனர் அன்ன மா மலையை
    எடுத்து அயின்றது அடிசில் அங்கு இருந்தது காணார்.
    839 சிலம்பு நூபுரச் சீறடிச் சேடியர் சில்லோர்
    அலம்பு வால் வளைக் கை நெரித்து அதிசயம் அடைந்தார்
    புலம்பு மேகலையார் சிலர் பொருக்கு என வெருண்டார்
    கலம் பெய் பூண் முலையார் சிலர் கண்புதைத்து திரிந்தார்.
    840 முரவை போகிய முரிவில் வான் மூரல் பால் வறையல்
    கருனை தீம் பயறு அடு துவையல் பல் வகைக் கறிகள்
    விரவு தேம்படு பால் தயிர் இழுது தேன் வெள்ளம்
    வரைவு இலாதன மிடாவொடு வாரி வாய் மடுத்தான்.
    841 பல் பழக் குவை வேற்று உருப் பண்ணியம் கன்னல்
    மெல் சுவைத் தண்டு தெங்கு இவை அன்றியும் ஏவா
    வல்சி காய்களின் வருக்கமும் நுகர்ந்து மாறாமல்
    எல்லைதீர் நவ பண்டமும் எடுத்து வாய் மடுத்தான்.
    842 பாரித்து உள்ள இப் பண்டமும் பரூ உக் குறும் கையால்
    வாரித் தன் பெரு வயிற்றிடை வைப்பவும் துடுவை
    பூரித்து ஆகுதி பண்ணிய தழல் எனப் பொங்கிக்
    கோரித்து ஒன்பது வாயிலும் பசித்தழல் கொளுத்த.
    843 அலங்கல் ஓதி கண்டு அதிசயம் அடைந்து தன் அன்பின்
    நலம் கொள் நாயகன் முன்பு போய் நாணம் உள் கிடப்ப
    இலங்கு பூம்குழல் சுவல் மிசை இறக்கி இட்டு ஒல்கி
    நிலங் கிளைத்து நின்றாள் நிலை கண்டனர் நிருபன்.
    844 அஞ் சில் ஓதியை வினவுவான் அறிகலான் போலக்
    குஞ்சி ஆர் அழல் அன்ன அக் குட வயிற்றவன் உண்டு
    எஞ்சி உள்ளவேல் பூதங்கள் இன்னமும் விடுத்து உன்
    நெஞ்சு உவப்பவே அருத்துதும் என்னலும் நிமலை.
    845 ஐய இன்னும் இக் குறள் பசி அடங்கிடா வேறு
    வெய்ய பாரிட வீரரை விடுத்தி ஏல் எடுத்து
    வையம் யாவையும் வயிற்றிடை வைப்பரே அதனால்
    செய்ய கால ருத்திரப் பெயர் தேற்றம் ஆம் உனக்கே..
    846 சங்க வார் குழைக் குறண் மகன் தன் செயல் தானே
    இங்கு வந்து உரை செய்திட அறிதி என்று இறைமுன்
    மங்கை நாயகி குமுதவாய் மலர் பொழுது எயிற்றுத்
    திங்கள் வாய் முழையான் பசித் தீச்சுட வந்தான்.
    847 நட்டம் ஆடிய சுந்தர நங்கை எம் பிராட்டி
    அட்ட போனகம் பனி வரை அனையவாய்க் கிடந்த
    தொட்டு வாய் மடுத்திடவும் என் சுடு பசி தணியாது
    இட்டு உணாதவர் வயிறு போல் காந்துவது என்றான்.
    848 கையர் முப்புரத்து இட்ட தீக் கடும்பசி உருவாய்ப்
    பொய்யனேன் வயிற்று இடைக் குடி புகுந்ததோ என்னும்
    கை எறிந்திடும் அண்டங்கள் வெடி படக் கதறும்
    ஐய கோ எனும் உயிர்த்திடும் ஆவி சோர்ந்து அயரும்.

    குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் சுபம்
    ---------------------


    1.8. அன்னக் குழியும் வைகையும் அழைத்த படலம் (849- 875)

    849 வேத நாயகன் பாரிட வேந்தனுக்கு அமையா
    ஓதன் ஆதிகன் அருத்திய தன்மை ஈது வையும்
    போத ராமையால் அமைவுறப் போனகக் குழிதந்து
    ஓத மாநதி அருத்திய செய்தியும் உரைப்பாம்.
    850 கவன மால் விடை ஆளியின் கடிகமழ் தென்றல்
    பவன மா மலை யாட்டியைப் பார்த்து உளே நகைத்துத்
    தவன மாப் பசி உடையவன் தன் பொருட்டு அன்ன
    புவன மாதினை நினைத்தனன் நினைக்கும் முன் போந்தாள்.
    851 நால் தடம் திசைத் தயிர்க்கடல் அனந்தன் தலை நிலம் ஈண்டு
    உற்று எழுந்து நால் கிடங்கராய் உதித்து எழுந்தாங்கு
    மாற்றரும் சுவைத் தீம் தயிர் வால் அரிப் பதத்தோடு
    ஏற்று எழுந்தது நால் குழி இடத்திலும் பொங்கி.
    852 குரு மதிக்குல மன்னவன் மருகனக்கு உண்டப்
    பெருவயிற்றில் இரு பிறை எயிற்று எரி சிகைப் பேழ் வாய்
    ஒரு குறள் குடை வீரனை உன் பசி தணியப்
    பருக எனப் பணித்து அருளும் பாரிடத் தலைவன்.
    853 அத் தயிர்ப் பதக் கிடங்கரில் அலை கடல் கலக்கும்
    மத்து எனக் கரம் புதைத்து எடுத்து வாய் மடுத்துச்
    துய்த்திடப் பசி விடுத்தது சுருதி நாயகன் தாள்
    பத்தி வைத்து வீடு உணர்ந்தவர் பழவினைத் தொடர் போல்.
    854 வாங்கி வாங்கி வாய் மடுத்தலும் உடம்பு எலாம் வயிறாய்
    வீங்கினான் தரை கிழிபடப் பொருப்பு என வீழ்ந்தான்
    நீங்கு நீள் உயிர்ப்பு இலன் உடல் புரண்டனன் நீர் வேட்டு
    ஆங்கு நீர் நிலை தேடுவான் ஆயினான் எழுந்தான்.
    855 ஆவி அன்னவர்ப் பிரிந்து உறை அணங்கு அனார் போலக்
    காவி நாள் மலர் தாமரைக் கடிமலர் வாட
    வாவி ஓடையும் குளங்களும் வறப்ப வாய் வைத்துக்
    கூவ நீள் நிலை நீர்களும் பசை அறக் குடித்தான்.
    856 அனையன் ஆகியும் நீர் நசை ஆற்றலன் வருந்தும்
    வினையன் ஆகி வானதிச் சடை வேதியன் பாதத்து
    இனைய நாதனும் தன் திரு முடியின் மீது இருக்கும்
    நனைய நாள் மலர் ஓதியைப் பார்த்து ஒன்று நவில் வான்.
    857 தேங்கு நீர்த்திரை மாலிகைச் செல்வி நீ இந்த
    வாங்கு நீர்த்தடம் புரிசை சூழ் மதுரையின் மாடு ஒர்
    ஓங்கு நீத்தம் ஆய் ஒல் என வருதி என்று உரைத்தான்
    நீங்கு நீர்த்திரு மாது அவண் ஒரு மொழி நிகழ்த்தும்.
    858 அன்று எம் பிரான் ஆணையால் பகீரதன் பொருட்டுச்
    சென்று நீ ஒரு தீர்த்தம் ஆய்த் திளைப்பவர் களங்கம்
    ஒன்று தீவினைத் தொடக்கு அறுத்து எழுக எனப் பணித்தாய்
    இன்று ஓர் நதி ஆகெனப் பணித்தியேல் என்னை.
    859 தெரிசித் தோர் படிந்து ஆடினோர் செம்கையால் ஏனும்
    பரிசித்தோர் பவத் தொடர்ச்சியின் பற்று விட்டு உள்ளத்து
    உருசித்தோர் உறு பத்தியும் விச்சையும் உணர்வாய்
    விரிசித்தோர் உறு மெய் உணர்வால் வரும் வீடும்.
    860 தந்திடப் பணித்து அருள் எனா தடம் புனல் செல்வி
    சுந்தரப் பெரும் கடவுளை வரம் கொண்டு தொழுது
    வந்த அளப்பு இலா வேகம் ஓடு எழுந்து மா நதியாய்
    அந்தரத்து நின்று இழிபவளாம் எனவரும் ஆல்.
    861 திரை வளை அணிகரம் உடையவள் செழு மணி நகை உடையாள்
    நுரை வளை துகில் உடையவள் கொடி நுணு இடையவள் அற நீள்
    விரை வளை குழல் உடையவள் கயல் விழி உடையவள் வருவாள்
    வரை வளை சிலையவன் முடி மட வரல்நதி வடிவினுமே.
    862 விரை படும் அகிலரை பொரிதிமில் வெயில் விடு மணி வரை யோடு
    அரை பட முது சினை அலறிட வடியொடு கடிது அகழாக்
    குரைபடு கழல் இற உளர் சிறு குடி அடியொடு பறியாக்
    கரைபட எறிவது வருவது கடுவிசை வளி எனவே.
    863 பிணையொடு கலை பிடியொடு கரி பிரிவில வொடு பழுவப்
    பணையொடு கருமுசு வயிறு அணை பறழொடு தழுவி அதன்
    துணையொடு கவிபயில் மர நிரை தொகை யொடும் இற உளர் வெம்
    கணையொடு சிலை இதண் நெடும் எறி கவணொடு கொடு வரும் ஆல்.
    864 அடியிற நெடுவரை உதைவன அகழ்வன அகழ் மடுவைத்
    திடர் இடுவன மழை செருகிய சினை மர நிரை தலைகீழ்
    பட இடிகரை தொறும் நடுவன படுகடல் உடை முது பார்
    நெடு முதுகு இருபிளவு உற வரு நெடு நதி இன அலையே.
    865 பிளிறொலி இனம் முது மரம் அகழ் பெருவலி இன வசையா
    வெளிறடி வனவெறி மணி இன விரை செலவின மதமோடு
    ஒளிறளி இனநுரை முக படம் உடையன என வரலால்
    களிறு அனையது மது இதழிகள் கவிழ் சடை அணி குடிஞை.
    866 நீடிய பிலம் உறு நிலையின நிருமலன் மதி முடி மீது
    ஆடிய செயல் இன வெயில் உமிழ் உருமணி தலை இள நீள்
    கோடிய கதியின நிரை நிரை குறுகிய பல காலின்
    ஓடிய வலியின வளை உடல் உரகமும் என வரும் ஆல்.
    867 மண் அகழ்தலின் வளை அணி கரு மாவனையது மிசை போய்
    விண் உள வலின் அவுணர்கள் இறை விடு புனலொடு நெடுகும்
    அண்ணலை அனையது சுவை இழு தலை அளை உறு செயலால்
    கண்ணனை அனையது நெடுகிய கடுகிய கதி நதியே.
    868 திகழ் தரு கரி பரி கவரிகள் செழு மணியொடு வருமாறு
    திகழ் தரு குடபுல அரசர்கள் நெறி செய்து கவர் திருவோடு
    அகழ் தரு பதிபுகு மதிகுல அரசனை அதை அலதேல்
    புகழ் தரு திறை இட வரு குடபுல அரசனும் நிகரும்.
    869 ஆரொடு மடல் அவிழ் பனை யொடும் அர நிகர் இலை நிம்பத்
    தாரொடு புலியொடு சிலையொடு தகு கயலொடு தழுவாப்
    பாரொடு திசை பரவிய தமிழ் பயில் அரசர்கள் குழுமிச்
    சீரொடு பல திரு வொடு வரு செயல் அனையது நதியே.
    870 கல்லார் கவி போல் கலங்கிக் கலை மாண்ட கேள்வி
    வல்லார் கவி போல் பலவான் துறை தோன்ற வாய்த்துச்
    செல்லாறு தோறும் பொருள் ஆழ்ந்து தௌ¤ந்து தேயத்து
    எல்லாறும் வீழ்ந்து பயன் கொள்ள இறுத்தது அன்றெ
    871 வண்டு ஓதை மாறா மலர் வேணியின் வந்த நீத்தம்
    கண்டு ஓத நஞ்சு உண்டு அருள் கண் நுதன் மூர்த்தி பேழ்வாய்
    விண்டு ஓதம் அணியாது என் விடாய் என வெம்பி வீழ்ந்த
    குண்டு ஓதரனை விடுத்தான் அக் குடிஞை ஞாங்கர்.
    872 அடுத்தான் நதியின் இடை புக்கு இருந்து ஆற்றல் ஓடும்
    எடுத்தான் குறும்கை இரண்டும் கரை ஏற நீட்டித்
    தடுத்தான் மலைபோல் நிமிர் தண்புனல் வாய் அங்காந்து
    மடுத்தான் விடாயும் கடல் உண்ணும் மழையு நாண.
    873 தீர்த்தன் சடை நின்று இழி தீர்த்தம் அருந்தி வாக்குக்
    கூர்த்து இன்பு கொண்டு குழகன் திரு முன்னர் எய்திப்
    பார்த்தன் பணிந்த பதம் முன் பணிந்து ஆடிப் பாடி
    ஆர்த்த அன்பு உருவாய்த் துதித்தான் அளவாத கீதம்.
    874 பாட்டின் பொருளான் அவன் பாரிட வீரன் பாடல்
    கேட்டு இன்பம் எய்திக் கணங்கட்குக் கிழமை நல்கி
    மோட்டு இன்புனன் மண் முறை செய்து இருந்தான் அளகக்
    காட்டின் புறம் போய் மடங்கும் கயல் கண்ணியோடும்.
    875 தீர்த்தன் இதழிச் சடை நின்றும் இழிந்து வரலால் சிவகங்கை
    தீர்த்தன் உருவம் தௌ¤ வோர்க்கு ஞானம் தரலால் சிவஞான
    தீர்த்தம் காலில் கடுகி வரும் செய்தியாலே வேகவதி
    தீர்த்தம் கிருத மாலை என வைகை நாமம் செப்புவர் ஆல்.
    அன்னக் குழியும் வைகையும் அழைத்த படலம் சுபம்
    ----------------------------


    09. ஏழு கடல்அழைத்த படலம் (876 - 890)

    876 முடங்கன் மதி முடி மறைத்த முடித் தென்னன் குறட்கு அன்னக்
    கிடங்கரொடு நதி அழைத்த கிளர் கருணைத் திறன் இது மேல்
    மடங்கல் வலி கவர்ந்தான் பொன் மாலை படிந்து ஆட ஏழு
    தடம் கடலும் ஒருங்கு அழைத்த தன்மை தனைச் சாற்றுவாம்.
    877 ஓத அரும் பொருள் வழுதி உருவாகி உலகம் எலாம்
    சீதள வெண் குடை நிழற்றி அறச் செம் கோல் செலுத்தும் நாள்
    போத அரும் பொருள் உணர்ந்த இருடிகளும் புனித முனி
    மாதவரும் வரன் முறையால் சந்தித்து வருகின்றார்.
    878 வேதமுனி கோத மனும் தலைப்பட்டு மீள்வான் ஓர்
    போது அளவில் கற்புடைய பொன் மாலை மனை புகுந்தான்
    மாது அவளும் வரவேற்று முகமன் உரை வழங்கிப் பொன்
    ஆதனம் இட்டு அஞ்சலி செய்து அரியதவத் திறம் கேட்பாள்.
    879 கள்ள வினைப் பொறி கடந்து கரை கடந்த மறைச் சென்னி
    உள்ள பொருள் பரசிவம் என்று உணர்ந்த பெருந்தகை அடிகேள்
    தள்ளரிய பவம் அகற்றும் தவம் அருள் செய்க எனக் கருணை
    வெள்ளம் என முகம் மலர்ந்து முனிவேந்தன் விளம்பும் ஆல்.
    880 தவ வலியான் உலகு ஈன்ற தடா தகைக்குத் தாய் ஆனாய்
    சிவ பெருமான் மருகன் எனும் சீர் பெற்றய் திறல் மலயத்
    துவசன் அரும் கற்பு உடையாய் நீ அறியாத் தொல் விரதம்
    அவனி இடத்து எவர் அறிவார் ஆனாலும் இயம் பக்கேள்.
    881 மானதமே வாசிகமே காயிகமே என வகுத்த
    ஈனம் இல் தவம் மூன்றம் இவற்றின் ஆனந்தம் தருமது
    தான மிசை மதி வைத்தறயவு பொறை மெய் சிவனை
    மோனம் உறத் தியானித்தல் ஐந்து அடக்கல் முதல் அனந்தம்.
    882 வாசிக ஐந்து எழுத்து ஓதன் மனுப் பஞ்ச சாந்தி மறை
    பேசுசத உருத்திரம் தோத்திரம் உரைத்தல் பெரும் தருமம்
    காசு அகல எடுத்து ஓதன் முதல் அனந்தம் ஆயிகங்கள்
    ஈசன் அருச்சனை கோயில் வலம் செய்கை எதிர்வணங்கல்.
    883 நிருத்தன் உறை பதிபலப் போய்ப் பணிதல் பணி நிறை வேற்றல்
    திருத்தன் முடி நதி ஆதி தீர்த்த யாத்திரை போய் மெய்
    வருத்தமுற ஆடல் இவை முதல் பல அவ் வகை மூன்றில்
    பொருத்த முறு காயிகங்கள் சிறந்தன இப் புண்ணியத்துள்.
    884 திருத்த யாத்திரை அதிகம் அவற்ற அதிகம் சிவன் உருவாம்
    திருத்த ஆம் கங்கை முதல் திரு நதிகள் தனித் தனி போய்த்
    திருத்த மாடு அவதரித்த திரு நதிகள் தனித் தனி போய்த்
    திருத்தமாய் நிறைதலினால் அவற்று இகந்து திரை முந்நீர்.
    885 என்று முனி விளம்பக் கேட்டு இருந்த காஞ்சன மாலை
    துன்று திரைக் கடல் ஆடத் துணிவுடைய விருப்பினள் ஆய்த்
    தன் திருமா மகட்கு உரைத்தாள் சிறிது உள்ளம் தளர்வு எய்திச்
    சென்று இறைவற்கு உரைப்பல் எனச் செழியர் தவக் கொழுந்து அனையாள்.
    886 தன் தன்னை உடைய பெரும் தகை வேந்தர் பெருமான் முன்
    சென்று அன்னம் என நின்று செப்புவாள் குறள் வீரர்க்கு
    அன்று அன்னக் குழியு னொடு ஆறு அழைத்த அருட்கடலே
    இன்று அன்னை கடல் ஆட வேண்டினாள் என்று இரந்தாள்.
    887 தேவி திரு மொழி கேட்டுத் தென்னவராய் நிலம் புரக்கும்
    காவி திகழ் மணி கண்டர் கடல் ஒன்றோ எழு கடலும்
    கூவி வர அழைத்தும் என உன்னினார் குணபால் ஓர்
    வாவி இடை எழுவேறு வண்ணமொடும் வருவன ஆல்.
    888 துண்ட மதித் திரள் அனைய சுரிவளை வாய் விட உதைத்து
    வெண் தவள நுரை ததும்பச் சுறா ஏறு மிசைக் கொட்பத்
    தண் தரள மணித் தொகுதி எடுத்து எறியும் தரங்க நிரை
    அண்ட நெடு முகடு உரிஞ்ச ஆர்த்து எழுந்த கடல் ஏழும்.
    889 காணும் மாநகர் பனிப்பக் கலி முடிவில் அயன் படைப்புக்
    கோணுமாறு எழுந்தது எனக் கொதித்து எழுந்த கடல் அரவம்
    பூணு நாயகன் அகில புவனம் எலாம் கடந்த திரு
    ஆணையால் அவன் அடி சென்று அடைந்தார் போல் அடங்கியது ஆல்.
    890 தன் வண்ணம் எழு கடலின் தனி வண்ணமொடு கலந்து
    பொன் வண்ண நறும் பொகுட்டுப் பூம் பொய்கை பொலிவு எய்தி
    மின் வண்ணச் சடைதாழ வெள்ளி மணி மன்று ஆடும்
    மன் வண்ணம் என எட்டு வண்ண மொடும் வயங்கியது ஆல்.

    ஏழு கடல்அழைத்த படலம் சுபம்
    -------------------


    1.10. மலயத் துவசனை அழைத்த படலம் (891- 921)

    891 எழு கடல் அழைத்த வாறு இயம்பினாம் இனிச்
    செழு மதி மரபினோன் சேண் இழிந்து தன்
    பழுது இல் கற்பில் லொடும் பரவை தோய்ந்து அரன்
    அழகிய திரு உரு அடைந்தது ஓதுவாம்.
    892 புரவலன் தடாதகைப் பூவையோடும் வந்து
    உரவு நீர்க் கடல் மருங்கு உடுத்த சந்தனம்
    மரவ மந்தார மா வகுளம் பாடலம்
    விரவு நந்தனத்து அரி அணையின் மேவினான்.
    893 தாது அவிழ் மல்லிகை முல்லை சண்பகப்
    போது கொய்து இளையரும் சேடிப் பொன் தொடி
    மாதரும் கொடுத்திட வாங்கி மோந்து உயிர்த்து
    ஆதரம் இரண்டாற அமரும் எல்லையில்.
    894 தன்னமர் காதலி தன்னை நோக்கியே
    மன்னவன் உன் பொருட்டு ஏழு வாரியும்
    இந் நகர் அழைத்தனம் ஈண்டுப் போந்து நின்
    அன்னையை ஆடுவான் அழைத்தி ஆல் என.
    895 மடந்தையும் அன்னையைக் கொணர்ந்து வாவி மாடு
    அடைந்தனள் ஆக மற்று அவள் புராண நூல்
    படர்ந்த கேள்வியர் தமை நோக்கிப் பௌவநீர்
    குடைந்திடும் விதி எவன் கூறும் என்னவே.
    896 கோது அறு கற்பினாய் கொழுநன் கைத்தலம்
    காதலன் கைத்தலம் அன்றிக் கன்றின் வால்
    ஆதல் இம் மூன்றில் ஒன்று அம் கை பற்றியே
    ஓத நீர் ஆடுதல் மரபு என்று ஓதினார்.
    897 மறையவர் வாய்மை பொன் மாலை கேட்டு மேல்
    குறைவு அறத் தவம் செயாக் கொடிய பாவியேற்கு
    இறைவனும் சிறுவனும் இல்லையே இனிப்
    பெறுவது கன்று அலால் பிறிது உண்டாகுமோ.
    898 ஆதலால் கன்றின் வால் பற்றி ஆடுகோ
    மாதராய் என்று தன் மகட்குக் கூறலும்
    வேதன் மால் பதவியும் வேண்டினார்க்கு அருள்
    நாதன் ஆருயிர்த் துணை ஆய நாயகி.
    899 தன் உயிர்க் கிழவனை அடைந்து தாழ்ந்து தன்
    அன்னை தன் குறை உரை ஆட ஆண் தகை
    மன்னவன் வலாரியோடு ஒருங்கு வைகிய
    தென்னவன் மேல் மனம் செலுத்தினான் அரோ.
    900 சிலையத் திரியார் திரு உள்ளம் உணர்ந்து
    தலையத் திரி அட்டவன் ஆதனம் நீத்து
    உலையத் திரி ஒத்த விமான மொடு
    மலையத் துவசச் செழியன் வரும் ஆல்.
    901 மண் பேறு அடைவான் வரும் ஏழ் கடல் வாய்
    எண் பேறு அடையா அருளின் அமுதைப்
    பெண் பேறு அதனால் பெறும் பேறு இது எனாக்
    கண் பேறு அடைவான் எதிர் கண்டனனே.
    902 வந்தான் மருகன் சரணம் பணிவான்
    முந்தாமுனம் மாமன் எனும் முறையால்
    அந்தா மரை அம் கையமைத்து மகள்
    தந்தானை எதிர்ந்து தழீஇ யினன் ஆல்.
    903 ஆத்தன் திரு உள்ளம் மகிழ்ந்து அருளால்
    பார்த்து அன்பு நிரம்பிய பன்னியொடும்
    தீர்த்தம் புகுந்து ஆடிய செல்க
    எனப் பூத்தண் பொருநைப் புனல் நாடவனும்.
    904 முன்னைத் தவம் எய்தி முயன்று பெறும்
    அன்னப் பெடை அன்னவள் வந்து எதிரே
    தன்னைத் தழுவத் தழுவிக் கிரிவேந்து
    என்னக் குறையா மகிழ் எய்தினனே.
    905 தண்டே மொழிவேள் விதவக் குறையால்
    கண்டேன் இலன் என்று கருத்து அவலம்
    உண்டே அஃது இவ் உவகைக் களிதேன்
    வண்டே என உண்டு மறந்தனன் ஆல்.
    906 சேண் உற்றவனைச் சிலநாள் கழியக்
    காண் உற்றவள் போல் நிறை கற்பு உடையாள்
    பூண் உற்று மலர்ந்த ஒர் பொன் கொடிபோல்
    நாண் உற்று எதிர் நண்ணி இறைஞ்சினள் ஆல்.
    907 மஞ்சு ஓதிய காஞ்சன மாலை கையில்
    பைஞ் சோதி விளங்குப இத் திரையாய்ச்
    செஞ் சோதி முடிச் சிவ நாம எழுத்து
    அஞ்சு ஓதி நெடும் கடல் ஆதும் அரோ.
    908 துங்கக் கலை வேதியர் தொல் மறை நூல்
    சங்கற்ப விதிப்படி தன் துணைக்கை
    அம் கைத் தளிர் பற்றி அகத்து உவகை
    பொங்கப் புணரிப் புனல் ஆடினளே.
    909 குடைந்தார் கரை ஏறினர் கொன்றை முடி
    மிடைந்தார் கருணைக் கண் விழிக் கமலம்
    உடைந்தார் அனைமாரும் உதரம் குருகாது
    அடைந்தார் உமை பாகர் அருள் படிவம்.
    910 ஒண் கொண்டல் மிடற்று ஒளியும் ஒருநால்
    எண் கொண்ட புயத்து எழிலும் அழல் சேர்
    கண் கொண்ட நுதல் கவினும் பொலியா
    மண் கண்டு வியப்ப வயங்கினர் ஆல்.
    911 விண்ணின்று வழுக்கி விழும் கதிர் போல்
    கண் நின்ற நுதல் கருணா கரன் வாழ்
    எண் நின்ற புரத்தின் இழிந்து இமையா
    மண் நின்றது ஓர் தெய்வ விமானம் அரோ.
    912 அத் தெய்வ விமானம் அடுத்திடலும்
    முத் தெய்வதம் முக்கணவன் பணியால்
    நத் தெய்வ தருக் கரன் அம் கையொடும்
    எத் தெய்வதமும் தொழ ஏறினன் ஆல்.
    913 தேமாரி எனும் படி சிந்த நறும்
    பூ மாரி பொழிந்தது பொன் உலகம்
    தூமா மறை அந்தர துந்துபி கார்
    ஆம் ஆம் என எங்கும் அதிர்ந்தன ஆல்.
    914 எழுந்தது விமனம் வானம் எழுந்த துந்துபியும் நாணி
    விழுந்தது போலும் என்ன அர ஒலி எங்கும் விம்மத்
    தொழும் தகை முனிவர் ஏத்தச் சுராதிகள் பரவத் திங்கள்
    கொழுந்து அணி வேணிக் கூத்தர் கோ நகர் குறித்துச் செல்வார்.
    915 முன்பு தம் உருவாய் வைய முறைபுரி கோல் கைக்கொண்டு பின்பு தம் உருவம் தந்த மருகனும் பெருகு கேண்மை
    அன்பு தந்து அருகு நின்ற தடா தகை அணங்கு மீண்டு
    பொன் புனை குடுமிக் கோயில் புகுந்து நன்கு இருப்பக் கண்டார்.
    916 முன்னை வல் வினையால் யாக்கை முறை தடுமாறித் தோற்றம் மன்னிய மனிதர் போலப் பண்டைய வடிவம் மாறி
    அன்னையே மகளா ஈன்ற அப்பனே மருகன் ஆக என்னயா நோற்றேம் யார்க்கும் இயற்ற அரும் தவம்தான் என்ன.
    917 கன்று அகலா ஆன் போல ஐயன் கனை கடல் விடாது பற்றி ஒன்றிய அன்பு பின்நின்று ஈர்த்து எழ உள்ளத்தோடும்
    சென்று இரு கண்ணும் முட்டி அடிக்கடி திரும்பி நோக்கக் குன்று உறழ் விமானத்து அன்னை அஞ்சலி கூப்பிச் செல்வார்.
    918 புவ லோகம் கடந்து போய்ப் புண்ணியருக்கு எண் இறந்த போகம் ஊட்டும்
    சுவலோகம் கடந்து போய் மகலோகம் சனலோகம் துறந்து மேலைத்
    தவலோகம் கடந்து போய்ச் சத்திய லோகம் கடந்து தண் துழாயோன்
    நவலோகம் கடந்து உலக நாயகம் ஆம் சிவலோகம் நண்ணினாரே.
    919 அறக் கொடி பின் இறை மகனை அடி பணிந்து தனை ஈன்றார்க்கு ஆதி வேத
    மறைப் பொருள் தன் வடிவு அளித்த அருளின் மன நிறை மகிழ்ச்சி வாய் கொள்ளாமல்
    புறப்படுவது என இரண்டு திருச் செவிக்கும் செம்குமுதம் பொதிந்த தீம்தேன்
    நிறைப்பது எனப் பல் முறையால் துதி செய்து தொழுது ஒன்று நிகழ்த்தா நின்றாள்.
    920 எண் இறந்த தேவர்க்கும் யாவர்க்கும் பயன் சுரக்கும் இமையோர் நாட்டுப்
    புண்ணியவான் தன் புனிற்றுக் கன்றுக்குக் குறைவு ஏது என் பொருட்டு என் ஈன்றாள்
    எண்ணியது கடல் ஒன்றெ எழு கடலும் ஈண்டு அழைத்தாய் ஈன்றாள் ஆட
    விண் இருந்த கண வனையும் விளித்து உன் அருள் வடிவு அளித்து உன் மேனாடு ஈந்தாய்.
    921 தென்னர் மரபு இறந்தது எனப் படு பழியில் ஆழவரும் செவ்வி நோக்கிப்
    பொன் அவிர் தார் முடி புனைந்து கோல் ஒச்சி வருகின்றாய் போலும் மேலும்
    இந் நிலைமைக்கு இடையூறும் இனி இன்றே எனத் தலைவி இயம்ப லோடும்
    தன் இறைவி உட் கோளை அகம் கொண்டு மகிழ்ந்து இருந்தான் தமிழர் கோமான்.

    மலயத் துவசனை அழைத்த படலம் சுபம்
    ----------------------


    1.11. உக்கிர பாண்டியன் திருஅவதாரப் படலம் (922 - 966)

    922 மன்னவன் குல சேகரன் திரு மகன் மனைவி
    தன்னொடும் கடல் ஆடிய தகுதி ஈது அந்தத்
    தென்னவன் தனித் திருமகள் திருஉளம் களிப்ப
    உன்னரும் திறல் உக்கிறன் உதித்தவாறு உரைப்பாம்.
    923 தண் நிலா மௌலி வேய்ந்த சுந்தர சாமி ஞாலத்து
    எண் இலா வைகல் அன்னது இணையடி நிழல் போல் யார்க்கும்
    தெண் நிலாக் கவிகை நீழல் செய்து அருள் செம்கோல் ஓச்சி
    உண்ணிலா உயிர் தானாகி முறை புரிந்து ஒழுகும் நாளில்.
    924 கரியவன் கமலச் செம்மன் மறை முதல் கலைகள் காண்டற்கு
    அரியவன் அன்பர்க்கு என்றும் எளியவன் ஆகும் மேன்மை
    தெரியவன் பகன்ற சிந்தைத் தென்னவன் தனக்கும் கற்பிற்கு
    உரியவள் தனக்கும் காதல் மகளென உமையைத் தந்தான்.
    925 மற்று அதற்கு இசையத் தானும் மருமகன் ஆகி வையம்
    முற்றும் வெண் குடைக் கீழ் வைக முறை செய்தான் ஆக மூன்று
    கொற்றவர் தம்மில் திங்கள் கோக்குடி விழுப்பம் எய்தப்
    பெற்றது போலும் இன்னும் பெறுவதோர் குறைவு தீர்ப்பான்.
    926 ஒன்றினைச் செய்கை செய்யாது ஒழிகை வேறு ஒன்று செய்கை
    என்று இவை உடையோன் ஆதி ஈறு இலாப் பரம யோகி
    நன்று தீது இகழ்ச்சி வேட்கை நட்பு இகல் விளைக்கும் மாயை
    வென்றவன் செய்யும் மாயை விருத்தி யார் அளக்க வல்லார்.
    927 இந்திர சால விச்சை காட்டுவான் என்னத் தன்பால்
    செம் தழல் நாட்டம் ஈன்ற செல்வனைக் கருப்பம் எய்தா
    தம் தமில் உயிரும் ஞாலம் அனைத்தையும் ஈன்ற தாயாம்
    சுந்தரவல்லி தன்பால் தோன்று மாறு உள்ளம் செய்தான்.
    928 அங்கு அவன் வரவுக்கு ஏற்ப ஆயமும் பிறரும் தாழ்ந்து
    மங்கை நின் வடிவுக்கு ஏற்பக் கருவுரு வனப்பும் சீரும்
    திங்கதோற் ஆற்று மன்றல் செவ்வியும் காண ஆசை
    பொங்கியது எங்கட்கு என்றார் புனிதை அப்படி போல் ஆனாள்.
    929 கரு மணிச் சிகரச் செம் பொன் கனவரை அனைய காட்சித்
    திரு முலை அமுதம் பெய்த செப்பு இரண்டு அனைய வாக
    வரு முலை சுமந்து மாய்ந்த மருங்குலும் வந்து தோன்ற
    அருள் கனிந்த அனையாள் நாவிற்கு இன் சுவை ஆர்வம் பொங்க.
    930 என்னவும் எளிய வேனும் அரியன என்ன வேட்டாள்
    அன்னவும் போக பூமி அரும் பெறல் உணவு நல்கிப்
    பன்னகர் அமுதும் திங்கள் படுசுவை அமுதும் தெய்வப்
    பொன்னகர் அமுதும் ஆசை புதைபடக் கணங்கள் நல்க.
    931 புண்ணிய முனிவர் வேத பண்டிதர் போந்து வேந்தர்க்கு
    கண்ணிய சடங்கு மூதூர் அரும் கடி வெள்ளத்து ஆழ
    எண்ணிய திங்கள் தோறும் இயற்ற இக் கன்னித் தேயம்
    பண்ணிய தருமச் சார்பால் படுபயன் தலைப்பாடு எய்த.
    932 மாசு அறத் துறந்தோர் உள்ளம் ஆன வான் களங்கம் நீங்க
    ஈசர் தம் கிழமை என்னும் இந்து ஆதிரை நாள் செய்த
    பூசையின் பயன் தான் எய்த எரி பசும் பொன் கோள்வந்து
    தேசு ஒடு கேந்திரத்தில் சிறந்த நல் ஓரை வாய்ப்ப.
    933 முந்தை நான் மறைகள் தாமே முழங்க மந்தார மாரி
    சிந்த நாள் மலர் பூத்து ஆடும் மின் எனத் திசைகள் தோறும்
    அந்தர மகளிர் ஆடத் துந்துபி ஐந்தும் ஆர்ப்ப
    விந்தையும் திருவும் வெள்ளைக் கிழத்தியும் வீறு வாய்ப்ப.
    934 அந்தணர் மகிழ்ச்சி தூங்க அடுத்து அவர் வளர்க்கும் முன்னர்
    மந்திர வேள்விச் செந்தீ வலம் சுழித்து எழுந்து ஆர்த்து ஆடச்
    சிந்துர நுதல் மா எட்டும் சேடனும் பொறை எய்ப்பு ஆற
    இந்திரன் மேருப் புத்தேள் புனல் இறைக்கு இடம் தோள் ஆட.
    935 ஆலத்தை அமுதம் ஆக்கும் அண்ணலும் அணங்கும் கொண்ட
    கோலத்துக்கு ஏற்பக் காலைக் குழந்தை வெம் கதிர் போல் அற்றைக்
    காலத்தில் உதித்த சேய்போல் கண் மழை பிலிற்று நிம்ப
    மாலை தோள் செழியன் செல்வ மகள் வயின் தோன்றினானே.
    936 எடுத்தனள் மோந்து புல்லி ஏந்தினள் காந்தன் கையில்
    கொடுத்தனள் வாங்கி வீங்கு கொங்கை நின்று இழிபால் வெள்ளம்
    விடுத்தனள் குமுதப் போதில் வெண் நிலா வெள்ளம் போல்வாய்
    மடுத்தனள் அருத்தி னாள்தன் மைந்தனை எம் பிராட்டி.
    937 சலத்தலைக் கிடக்கைப் புத்தேள் அருநிழல் வாழ்க்கைப் புத்தேள்
    அலர்த்தலை இருக்கைப் புத்தேள் ஆதி இப் புத்தேளிர் வேதப்
    புலத்தலைக் கேள்வி சான்ற புண்ணிய முனிவர் ஏனோர்
    குலத்தலை மகளி ரோடும் கோமகன் கோயில் புக்கார்.
    938 குட புலத்து அரசும் பொன்னிக் குளிர் புனல் கோழி வேந்தும்
    வடபுலத்து அரசர் யாரும் குறுநில வாழ்க்கைச் செல்வத்து
    அடல்கெழு தொண்டைத் தண்தார் அரசொடு மணிகம் சூழக்
    கடல்கள் நால் திசையும் பொங்கி வருவ போல் கலிப்ப வந்தார்.
    939 மன்னனைத் தேவிதன்னை முறையினால் வழுத்தி வாழ்த்தி
    நன்னர் கோளாகி ஓகை நவின்று வெண் மழு மான் நீத்த
    தென்னவர் பெருமான் தேவி திருமுகக் கருணை பெற்றுப்
    பொன்னடி பணிந்து தம் ஊர் போகுவார் இனைய சொல்வார்.
    940 வழுதியர் பெருமான் தன் பால் கந்தனே வந்தான் என்பார்
    பழுதறு கற்பினாள் தன் பாக்கியம் இதுவே என்பார்
    அழகினான் மதனும் பெண்மை அவா உறும் இவன் கோல் ஆணை
    எழுகடல் உலகோடு வையம் ஏழையும் காக்கும் என்பார்.
    941 மனிதர் வான் தவமோ தென்பார் வைகு வோர் தவமோ வானப்
    புனிதர் வான் தவமோ வேள்விப் பூசுரர் தவமோ கேள்வி
    முனிவர் வான் தவமோ ஈறு முதல் இலா முதல்வன் உள்ளக்
    கனிதரு கருணை போலிக் காதலன் தோற்றம் என்பார்.
    942 தரும மா தவத்தின் பேறோ வருத்த மாதவத்தின் பேறோ
    பெருமை சால் காமன் நோற்ற பெருந்தவப் பேறோ எய்தற்கு
    அருமை ஆம் வீடுநோற்ற அரும்தவப் பேறோ இந்தத்
    திருமகன் என்று தம்மில் வினாய் மகிழ் சிறப்பச் சென்றார்.
    943 அவ் அவர் மனைகள் தோறும் மங்கல அணிகளாகக்
    கௌவை மங்கலங்கள் ஆர்ப்பக் கடிநகர் எங்கும் பொங்க
    நெய் விழா எடுப்பக் கேள்வி நிரம்பிய மறையோர்க்கு ஈந்த
    தெய்வ மா தான நீத்து அந் திரைக் கடன் மடுத்தது அம்மா.
    944 சுண்ணமும் பொரியும் தூ வெள் அரிசியும் தூர்வைக் காடும்
    தண் அறும் சிவிறி வீசு தண் பனி நீரும் சாந்தும்
    எண்ணெயும் நானச் சேறும் பசை அற எடுத்து வாரிக்
    கண்ணகன் நகரம் எங்கும் கழுவின தான வெள்ளம்.
    945 செம் பொன் செய் துருத்தி தூம்பு செய் குழல் வட்டம் ஆக
    அம் பொன் செய் சிவிறி வெண் பொன் அண்டை கொண்டாரம் தூங்கும்
    வம் பஞ்சு முலை யினாரும் மைந்தரும் மாறி ஆட
    அம் பஞ்சு மாறி மாறி அனங்கனும் ஆடல் செய்தான்.
    946 இன்னணம் களிப்ப மூதூர் இந்து ஆதிரை நல் நாளில்
    பொன்னவன் கேந்திரித்த புனித லக்கினத்தில் போந்த
    தென்னவர் பெருமான் சேய்க்குச் சாதகச் செய்தி ஆதி
    மன்னவர்க்கு இயன்ற வேத மரபினால் வயங்க ஆற்றி.
    947 கரிய வெண் திரை நீர்ச் செல்வன் கல் இறகு அரிந்த வென்றித்
    தெரியலன் உலகம் தாங்கும் தெய்வதக் வரைக்கோன் ஆதித்
    தரியலர் வீரம் சிந்தத் தருக்கு அழிந்து அச்சம் தோற்றற்கு
    உரிய காரணத்து ஆனா உக்கிர வருமன் என்பார்.
    948 நால் ஆகும் மதியில் சந்தி மிதிப்பது நடாத்தி ஆறு ஆம்
    பாலாகும் மதியில் அன்ன மங்கலம் பயிற்றி ஆண்டின்
    மேல் ஆகும் மதியில் கேச வினை முடித்து ஐந்தாம் ஆண்டின்
    நூல் ஆறு தெரிந்து பூண நூல் கடி முடித்துப் பின்னர்.
    949 பத நிரை பாழி சாகை ஆரணம் பணைத்த வேத
    முதல் நிரை கலையும் வென்றி மூரி வில் கலையும் வாளும்
    மத நிரை ஒழுகும் ஐயன் மா நிரை வையம் பாய்மா
    வித நிரை ஏற்றம் மற்றும் உணர்த்தினான் வியாழப் புத்தேள்.
    950 குரு முகத்து அறிய வேண்டும் என்பது ஓர் கொள்கை ஆலே
    ஒரு முறை கேட்டு ஆங்கு எண் நான்கு கலைகளும் ஒருங்கு தேறி
    அரன் அல ஒருவராலும் தேற்றுவது அருமை ஆல் அப்
    பரன் இடைத் தௌ¤ந்தான் பாசு பதாத்திரப் படையும் மன்னோ.
    951 எல்லை இல் கலைகள் எல்லாம் அகவை நால் இரண்டின் முற்றத்
    தொல் அறிவு உடையன் ஆகித் குரவரைத் தொழுது போற்ற
    வல்லவன் ஆகி அன்னார் மகிழ்ச்சி கொள் கனலாய் வென்றிச்
    செல்வ ஏற்று இளைய ரோடும் திரு விளையாடல் செய்வான்.
    952 புகர் மத வேழம் முட்டிப் போர் விளையாடி என்றும்
    தகரொடு தகரைத் தாக்கித் தருக்கு அமர் ஆடி வென்றும்
    வகிர் படு குருதிச் சூட்டு வாரணம் ஆடி வென்றும்
    நகை மணிப் பலகை செம் பொன்னால் குறுப் பாடி வென்றும்.
    953 காற்றினும் கடிய மாவில் காவதம் பல போய் மீண்டும்
    கூற்றினும் கொடிய சீற்றக் குஞ்சரம் உகைத்தும் வைகை
    ஆற்றின் உய்யானத்து ஆவி அகத்தின் உள் இன்பம் துய்த்தும்
    வேல் திறன் மைந்தரோடு மல் அமர் விளைத்து வென்றும்.
    954 சந்த வெற்பு அடைந்து வேட்டம் செய்து சைல வாழ்க்கை
    அந்தணர் ஆசி கூற அவர் தொழில் வினாயும் அன்னார்
    கந்த மென் கனி விருத்து ஊண் கை தழீக் களித்து மீண்டும்
    இந்தவாறு ஐம் மூ ஆண்டு கழிய மேல் எய்தும் ஆண்டில்.
    955 சூர் முதல் தடிந்த தங்கள் தோன்றலே இவன் என்று எண்ணிக்
    கார் முக மயிலும் வேலும் கை விடாக் காக்கு மா போல்
    வார் முக முலையினாரும் வடிக் கணும் மருங்கு மொய்ப்பக்
    கூர் முக வேலான் இன்ன கொள்கையன் ஆகத் தாதை.
    956 பங்கயச் செவ்வித்து ஆகித் கண் மனம் பருகு காந்தி
    அங்கு அழல் காலும் சொன்ன அடைவினில் திரண்டு நீண்ட
    சங்கமும் வட்டம் தோன்றச் செழு முழந்தாளும் நால் வாய்த்
    துங்க ஈர்ங் கவுண் மால் யானைத் துதிக்கை போல் திரள் கவானும்.
    957 சிறுகிய வயிறும் தாழ்ந்த நாபியும் செவ்வி நோக்கும்
    மறு இல் கண்ணடியின் அன்ன கடிய கல் வரை கொள் மார்பும்
    எறி இசை வீணைக் தண்டின் இணைந்து நீண்டு இழிந்த கையும்
    வெறிய தார் கிடந்த மேரு வெற்பு இரண்டு அனைய தோளும்.
    958 வலம்புரி என்ன வாய்ந்த கண்டமும் மலராள் மன்னும்
    பொலம் புரி கமலம் அன்ன வதனமும் பொதுவான் நோக்கி
    நிலம் புரி தவப் பேறு அன்னான் வடிவு எலாம் நின்று நின்று
    நலம் புரி நூலோன் நோக்கிச் சோதிப்பான் அடிக்க வல்லான்.
    959 959
    உன்னத ஆறு நீண்ட உறுப்பும் ஐந்து சூக்கம் தானும்
    அன்னது குறுக்க நான்காம் அகல் உறுப்பு இரண்டு ஏழ் ஆகச்
    சொன்னது சிவப்பு மூன்று கம்பிரம் தொகுத்த வாறே
    இன்னவை விரிக்கின் எண் நான்கின் இலக்கண உறுப்பாம் என்ப.
    960 வயிறு தோள் நெற்றி நாசி மார்பு கை அடி இவ் ஆறும்
    உயிரில் வான் செல்வன் ஆகும் ஒளி கவர் கண் கபோலம்
    புயல் புரை வள்ளல் செம்கை புது மணம் கவரும் துண்டம்
    வியன் முலை நகுமார்பு ஐந்து நீண்ட வேல் விளைக்கும் நன்மை.
    961 நறிய பூம் குஞ்சி தொக்கு விரல் கணு நகம் பல் ஐந்தும்
    சிறியவேல் ஆயுள் கோசம் சங்க நா முதுகு இந் நான்கும்
    குறியவேல் பாக்கியப் பேறாம் சிரம் குளம் என்று ஆய்ந்தோர்
    அறியும் இவ் உறுப்பு இரண்டும் அகன்றவேல் அதுவும் நன்றாம்.
    962 அகவடி அங்கை நாட்டக் கடை இதழ் அண்ணம் நாக்கு
    நகம் இவை ஏழும் சேந்த நன்மை நாற் பெறுமா இன்பம்
    இகல் வலி ஓசை நாபி என்று இவை மூன்றும் ஆழ்ந்த
    தகைமையால் எவர்க்கும் மேலாம் நன்மை சால் தக்கோன் என்ன.
    963 எல்லை இன் மூர்த்தி மைந்தன் இலக்கண நிறைவினோடு
    நல்ல ஆம் குணனும் நோக்கிப் பொது அற ஞாலம் காக்க
    வல்லவன் ஆகி வாழ் நாள் இனி பெற வல்லன் என்னா
    அல் அணி மிடற்றான் பின்னும் மனத்தினால் அளந்து சூழும்.
    964 இத் தகு பண்பு சான்ற நீர்மையால் இசைமை நீதி
    வித்தக நல்ல உள்ளம் உடைமை மெய் வீறு தெய்வ
    பத்திமை உலகுக்கு எல்லாம் மகிழ்ச்சி செய் பண்பு சாந்த
    சித்தம் எவ் உயிர்க்கும் அன்பு செய்கை நல் ஈகை கல்வி.
    965 வெல்லுதற்கு அரியார் தம்மை வெல்லுதல் தேவராலும்
    செல்லுதற்கு அரிய ஏத்தும் சென்றிடும் திறையும் கோடல்
    புல்லுதற்கு அரிய ஞாலம் மாலை போல் புயத்தில் ஏந்திச்
    சொல்லுதற்கு அரிய வீரம் உலகு எலாம் சுமப்ப வைத்தல்.
    966 என்று இவை ஆதி ஆய இயல் குணம் உடையன் ஆகி
    நன்றி செய்து உலகுக்கு எல்லாம் நாயகன் ஒருவன் ஆகி
    நின்றிடும் இவற்குப் பின்னர் நீள் முடி கவித்து முன்னர்
    மன்றல் செய்க என்று சூழ்ந்து மதிஞரோடு உசாவினானே.

    உக்கிர பாண்டியன் திருஅவதாரப் படலம் சுபம்
    --------------------


    1.12. உக்கிர பாண்டியனுக்கு வேல் வளை செண்டு கொடுத்த படலம் (967 - 1032)

    967 உருக்கும் திறல் உக்கிர குமரன் உதயம் இது வான் மதியும் நதிப்
    பெருக்கும் கரந்த சடைக் கற்றைப் பெரும் தேர்ச் செழியர் பிரான் அவற்குச்
    செருக்கும் செல்வ மணம் முடித்துச் செவ்வேல் வளை செண்டு அளித்து உள்ளம்
    தருக்கு முடி தந்து அரசு உரிமை தந்த செயலும் சாற்றுவாம்.
    968 வையைக் கிழவன் தன் அருமை குமரன் தனக்கு மணம் புணர்ச்சி
    செய்யக் கருதும் திறம் நோக்கி அறிஞரோடும் திரண்ட அமைச்சர்
    மை அற்று அழியா நிலத் திருவும் மரபும் குடியும் புகழ்மையும் நம்
    ஐயற்கு இசையத் தக்க குலத்து அரசர் யார் என்று அளக்கின்றார்.
    969 தீம் தண் புனல் சூழ் வடபுலத்து மணவூர் என்னும் திருநகர்க்கு
    வேந்தன் பரிதி திரு மரபின் விளங்கும் சோம சேகரன் என்று
    ஆய்ந்த கேள்வி அவனிடத்துத் திருமாது என்ன அவதரித்த
    காந்திமதியை மணம் பேச இருந்தார் அற்றைக் கனை இருள்வாய்.
    970 வெள்ளைக் களிற்றின் பிடர் சுமந்த குடுமிக் கோயில் மேய இளம்
    பிள்ளைக் கதிர் வெண் மதி மௌலிப் பெருமான் இரவி மருமான் ஆம்
    வள்ளல் கரத்தான் கனவில் எழுந்து அருளி வானோர் நனவிற்கும்
    கள்ளத்து உருவாம் திருமேனி காட்டி இதனை விளம்புவார்.
    971 அன்னம் இறை கொள் வயன் மதுரைச் சிவன் யாம் அரச நீ ஈன்ற
    பொன்னை அனையாள் தனை மதுரா புரியில் கொடுபோய் மறு புலத்து
    மன்னர் மகுட மணி இடற மழுங்கும் கழல் கால் சுந்தரன் ஆம்
    தென்னர் பெருமான் குமரனுக்குக் கொடுத்தி என்று செப்புதலும்.
    972 உள்ளக் கமல முக கமலம் உடனே மலர இரு தடம் கண்
    அள்ளல் கமல மலர்ந்து தனது அம் கை கமல முகிழ்த்து எழுந்து
    வள்ளல் பரமன் கருணை எளி வந்த செயலை நினைந்து அதன் பின்
    வெள்ளத்து அழுந்தி எழுந்து இரவி வேளை முளைக்கும் வேலையினில்.
    973 நித்த நியமக் கடன் நிரப்பி நிருபன் அமைச்சரோடு நான்கு
    பைத்த கருவிப் படையினொடு பல்வேறு இயமும் கலிப்பத்தன்
    பொய்த்த மருங்கு உற்று திருமகளைப் பொன் அன்னாரோடு இரதமிசை
    வைத்து மணம் சேர் திருவினொடு மதுரை நோக்கி வழிக் கொண்டான்.
    974 நென்னல் எல்லை மணம் பேச நினைந்தவாறே அமைச்சர் மதி
    மன்னர் பெருமான் தமரோடு மணவூர் நோக்கி வழி வருவார்
    அன்ன வேந்தன் தனைக் கண்டார் அடல் வேல் குமரன் அனையான் எம்
    தென்னர் பெருமான் குமரனுக்கு உன் திருவைத் தருதி என அனையான்.
    975 குலனும் குடியும் கனவின் கண் கொன்றை முடியார் வந்து உரைத்த
    நலனும் கூறி மணம் நேர்ந்து நயப்ப அதனை நன் முதியோர்
    புலன் ஒன்று உழையர் தமை விடுத்துப் பொருனைத் துறைவர்க்கு உணர்த்தி வரு
    வலனும் அயில் வேல் மன்னனொடு மதுரை மூதுர் வந்து அணைந்தார்.
    976 இரவி மருமான் மதி மருமான் எதிரெ பணியத் தழீ இமுகமன்
    பரவி இருக்கை செல உய்த்துப் பாண்டி வேந்தன் இருந்தான் மேல்
    விரவி அமைச்சர் திரு முகங்கள் வேந்தர் யார்க்கும் விடுத்து நகர்
    வரைவு நாள் செய்து அணி செய்ய மன்றல் முரசு அறைவித்தார்.
    977 மாடம் புதுக்கிப் பூகதமும் கதலிக் காடும் மறுகு எங்கும்
    நீடு நிரைத்துப் பாலிகையும் நிறை பொன் குடமும் முறை நிறுத்தி
    ஆடு கொடியும் தோரணமும் புனைவித்து அழகுக்கு அழகு ஆகக்
    கூட நெருங்கு நகரை மணக் கோலம் பெருகக் கொளுத்தினார்.
    978 தென்றல் நாடன் திருமகளைத் தேவர் பெருமான் மணம் புரிய
    மன்றல் அழகால் ஒரு நகர் ஒப்ப அதிகம் இன்றி மதுரைநகர்
    அன்று தானே தனக்கு ஒப்பது ஆகும் வண்ணம் அணி அமைத்தார்
    இன்று தானே தனக்கு அதிகம் என்னும் வண்ணம் எழில் அமைத்தார்.
    979 முன்னர் மாலை முடி அணி சுந்தரத்
    தென்னர் ஏற்றின் திருமுகம் கண்டு தாழ்ந்து
    அன்ன வாசகம் உள் கொண்டு அயல் புல
    மன்னர் மாதவர் யாரும் வருவர் ஆல்.
    980 புரவி வெள்ளமும் போர்க் கரி வெள்ளமும்
    வரவில் கால் வலி மள்ளரின் வெள்ளமும்
    விரவி ஆழிய வெள்ளமும் உள் உற
    இரவி தன் வழித் தோன்றல் வந்து எய்தினான்.
    981 கோடு வில்லொடு மேகக் குழாங்கள் மின்
    நீடு வாளடு நேர்ந்து என மார்பு தாழ்ந்து
    ஆடு குண்டலக் காது உடை ஆடவர்
    சேடன் ஈகத்துச் சேரன் வந்து ஈண்டினான்.
    982 கடலும் உள்ளமும் காற்றும் பல் வண்ணமும்
    உடலம் கொண்டன வந்து உறு வாம் பரிப்
    படு கடல் உள் பரிதியில் தோன்றினான்
    அடு பரிப் பதி ஆகிய வேந்தனே.
    983 அலகு இலா உதயம் ஒறு மாதவர்
    அலகு இலார் உதித்து என்னப் பொன் ஓடை சேர்
    அலகு இலானை அனீகமொடு எய்தினான்
    அலகு இலா ஆற்றல் கயபதி அண்ணலே.
    984 தொக்க மள்ளர் அடிப்படு தூளி போய்த்
    திக்கு அடங்க விழுங்கித் திரைக் கடல்
    எக்கர் செய்ய எழுந்து இயம் கல் என
    நக்க வேல் கை நரபதி நண்ணினான்.
    985 மீன வேலையில் கந்துகம் மேல் கொடு
    கூனல் வார் சிலை வஞ்சக் கொடும் சமர்க்கு
    ஆன வாழ்க்கை அரட்டக் கரும் படை
    மான வேல் குறு மன்னவர் நண்ணினார்.
    986 சீனர் சோனகர் சிங்களர் கொங்கணர்
    மான வேல் வல மாளவர் சாளுவர்
    தான மா நிரைச் சாவகர் ஆதி ஆம்
    ஏனை நாட்டு உள மன்னரும் ஈண்டினர்.
    987 நூலொடும் துவக்குஉண்டு நுடங்கு மான்
    தோலர் தூங்கு சுருக்கு உடைத் தானையர்
    கோல முஞ்சியர் கிஞ்சுகக் கோலினர்
    நாலு நூல் நாவினர் நண்ணினார்.
    988 வட்ட நீர்க் கலக் கையினர் வார்ந்து தோள்
    விட்ட குண்டலக் காதினர் வேட்ட தீத்
    தொட்ட கோலினர் வேள்வியில் சுட்ட நீறு
    இட்ட நெற்றியர் இல்லொடு நண்ணினார்.
    989 முண்ட நெற்றியர் வெள் நிற மூரலர்
    குண்டி கைக் கையர் கோவணம் வீக்கிய
    தண்டு கையர் கல் தானையர் மெய்யினைக்
    கண்டு பொய்யினைக் காய்ந்தவர் நண்ணினார்.
    990 தீம் தண் பால் கடல் செம் துகிர்க் காட்டொடும்
    போந்த போல் மெய்யில் புண்ணியப் பூச்சினர்
    சேந்த வேணியர் வேதச் சிரப் பொருள்
    ஆய்ந்த கேள்வி அரும் தவர் எய்தினார்.
    991 ஆதி சைவர் முதல் சைவர் ஐவரும்
    கோது இலா அகச் சைவக் குழாங்களும்
    பூதி மேனியர் புண்ணிய ஐந்து எழுத்து
    ஓது நாவினர் ஒல்லை வந்து எய்தினார்.
    992 வெண் களிற்றவன் வேரி அம் தாமரைப்
    பெண் களிப்பு உறு மார்பன் பிரமனேடு
    ஒண் களிப்பு உற உம்பர் முதல் பதி
    நெண் கணத்தவர் யாவரும் ஈண்டினார்.
    993 அணைந்து கோயில் அடைந்து அரிச் சேக்கை மேல்
    குணம் கடந்தவன் கோமள வல்லியோடு
    இணங்கி வைகும் இருக்கை கண்டு ஏத்தினார்
    வணங்கினார் வணங்கும் முறை வாழ்த்தினார்.
    994 விரை செய் தார் முடிச் சுந்தர மீனவன்
    சுரர்கண் மாதவர் வேந்தர்க்குத் தொல் முறை
    வரிசை நல்கி இருந்தனன் மன்னவன்
    திரு மகன் மணம் செய் திறம் செப்புவாம்.
    995 சேம சேகரன் தோகை வனப்பு எலாம்
    கோமகன் கண்டு உவப்ப அக் கொள்கை கண்டு
    ஏம மேனிய நூல் வழி யார்க்கும் அத்
    தேமன் கோதை உறுப்பு இயல் தேற்றுவான்.
    996 பெருக நீண்டு அறவும் குறுகிடா தாகிப் பிளந்திடா கடைய வாய்த் தழைத்து
    கருவி வான் வண்டின் கணம் எனக் கறுத்துக் கடை குழன்றி இயல் மணம் கான்று
    புரை அறச் செறிந்து நெறித்து மெல் என்று புந்தி கண் கவர நெய்த்து இருண்ட
    மருமலர்க் குழலாள் தன் பதிக்கு இனிய மல்லல் வான் செல்வம் உண்டாகும்.
    997 திண் மத வேழ மத்தகம் போலத் திரண்டு உயர் சென்னியாள் அவள் தன்
    உள் மகிழ் கணவன் ஆயுள் நீண்டு அகில உலக அரசு உரியன் ஆம் எட்டு ஆம்
    தண் மதி போன்று மயிர் நரம்பு அகன்று அசைந்து மூவிரல் இடை அகன்ற
    ஒண் மதி நுதல் தன் பதிக்கு நல் திருவோடு உலப்பு இல் ஆரோக்கியம் உண்டாம்.
    998 கண் கடை சிவந்தான் பால் என வெளுத்து நடுவிழி கழியவும் கரிதாய்
    எண்கவின் அடைந்து கோமளம் ஆகி இமை கரு மயிர்த்து எனின் இனிய
    ஒண் கரும் புருவம் குனிசிலை ஒத்த தத்தமில் ஒத்த இரு தொளையும்
    பண் கொள உருண்டு துண்டம் எள் போது பதும மேல் பூத்தது போலும்.
    999 வள்ளை போல் வார்ந்து தாழ்ந்து இரு செவியும் மடல் சுழி நல்லவாய் முன்னர்த்
    தள்ளிய காது மனோ கரம் ஆகும் தன்மையான் நன்மையே தழைக்கும்
    ஒள்ளிய கபோலம் வட்டமாய்த் தசைந்திட்டு உயர்ந்து கண்ணாடி மண்டலம் போல்
    தௌ¢ளிய ஊற்றம் இனியது நன்று என்று ஓதினான் திரைக் கடல் செல்வன்.
    1000 கொவ்வை வாய் அதரம் திரண்டு இருபுடையும் குவிந்து சேந்து இரேகை நேர் கிடந்தால்
    அவ் அணி இழை தன் அன்பனுக்கு என்று நண்பு உருவாகும் எண் நான்கு
    வல்ல வாள் எயிறும் இடை வெளி இன்றி வார்ந்து மேல் கீழ் இரண்டு ஒழுங்கும்
    செவ்வன் நேர்ந்து ஆவின் பால் என வெள்கித் திகழின் நன்று என்பர் நூல் தௌ¤ந்தோர்.
    1001 மெல்லிதாய்ச் சிவந்து கோமளம் ஆன நாவினாள் வேட்ட வேட்டு ஆங்கே
    வல்லை வந்து எய்த நுகர்ந்திடும் தசைந்து வட்டமாய் அங்குலம் இரண்டின்
    எல்லையது ஆகி மஞ்சுளம் ஆகி இருப்பது சிபுக நன்று என்பர்
    அல்லி அம் கமலம் போல் மலர்ந்து இருள் தீர்ந்து அவிர் மதி போல்வது முகமே.
    1002 திரை வளைக் கழுத்துத் தசைந்து நால் விரலின் அளவது ஆய்த் திரண்டு மூன்று இரேகை
    வரை படில் கொழுநன் அகில மன்ன வனாம் மார்பகம் தசைந்து மூ ஆறு
    விரல் அளவு அகன்று மயிர் நரம்பு அகன்று மிதந்தது ஏல் விழுமிது ஆம் வேய் தோள்
    புரை அறத் தசைந்து மயிர் அகன்று என்பு புலப்படா மொழிய கோமளம் ஆம்.
    1003 செம் கை நீண்டு உருண்டு கணுக்கள் பெற்று அடைவே சிறுத்திடில் செல்வமோடு இன்பம்
    தங்கும் வள் உகிர் சேந்து உருண்டு கண் உள்ளம் கவர்வதாய்ச் சர சரப்பு அகன்றால்
    அங்கு அவை நல்ல அகங்கை மெல் எனச் சேந்து இடை வெளி அகன்று இடை உயர்ந்து
    மங்கலமாய்ச் சில் வரைகளின் நல்ல இலக்கண வரை உள மாதோ.
    1004 முத்து அணி தனங்கள் கடினம் ஆய் அசைந்து வட்டமாய் முகிழ்த்து இரு கட நேர்
    ஒத்து இருமாந்து ஈர்க்கு இடை அற நெருங்கி உள்ளன மெலிந்து அமர்ந்து உரோமம்
    பத்தி பெற்று அயலே மயிர் நரம்பு அகன்ற பண்டியாள் உண்டி வேட்டு ஆங்கே
    துய்த்திடும் நாபி வலம் சுழித்து ஆழ்ந்தால் தொலைவு இலாத் திருவளம் பெருகும்.
    1005 இடை மயிர் நரம்பு அற்று இருபதோடு ஒரு நான்கு எழில் விரல் அளவோடு வட்ட
    வடிவு அதாய்ச் சிறுகி மெலிவது நிதம்ப மத்தகம் ஆமையின் புறம் போல்
    படிவ நேர் ஒத்தல் நன்று இரு குறங்கும் படுமயிர் என்பு அகன்று யானைத்
    தட உடைக் கையும் கரபமும் கதலித் தண்டு ஒத்து இருக்கின் நன்று என்ப.
    1006 அங்கம் உள் மறைந்து வட்டமாய்த் அசைவ அணி முழந்தாள் மயிர் நரம்பு
    தங்கிடாது அடைவே உருட்சியாய்ச் சிறுத்துச் சம வடிவாய் அழகு அடைந்த
    சங்கம் ஆம் சிரை என்பறத் அசைந்து ஆமை முதுகு எனத் திரண்டு உயர்ந்த அழகு
    மங்கலம் பொலிந்த புறவடி மடந்தை மன்னவன் பன்னி ஆம் மன்னோ.
    1007 அல்லி அம் கமலக் கால் விரல் உயர்ந்து தூயவாய் அழகவாய்க் கழுநீர்
    மெல் இதழ் நிரைத்தாங்கு ஒழுங்கு உறத் திரண்டு வால் உகிர் வெண் மதிப் பிளவு
    புல்லிய போன்று மெல்லிய ஆகிப் புகர் அறத் தசைந்தன அகத்தாள்
    சொல்லியது அசைவும் மென்மையும் சமமும் துகள் அறப் படைத்தன நன்று ஆல்.
    1008 வண்ண மாந்தளிர் போல் சிவந்து எரி பொன்போல் வைகலும் வெயர்வை அற்று ஆகம்
    உண்ணம் ஆய் இருக்கின் செல்வம் உண்டாகும் ஒண் மணம் பாடலம் குவளை
    தண் அறா முளரி மல்லிகை நறும் தண் சண்பகம் போல்வன ஆகும்
    பண்ணவாம் கிளவி குயில் கிளி யாழின் படி வரும் பாக்கியம் என்னா.
    1009 கரும் குழல் கற்றை தொட்டுச் செம்மலர்க் காலின் எல்லை
    மருங்கு நல் கூர்ந்து கன்னி வடிவு எலாம் வாக்கின் செல்வன்
    ஒருங்கு நூல் உணர்வால் தௌ¢ளி இம்பரின் உம்பர் தேத்தும்
    இரங்கும் இக் குயில் அன்னாள் மெய் இலக்கணம் அரியது என்றான்.
    1010 அங்கு அது கேடோர் யாரும் அகம் களி துளும்ப இப்பால்
    கொங்கு அலர் நறும் தார் குஞ்சி உக்கிர குமரன் போந்து
    மங்கல வரிசை மாண மத்த மான் சுமந்த வைகைச்
    சங்கு எறி துறை நீராடித் தகும் கடி வனப்புக் கொள்வான்.
    1011 கட்டு அவிழ் கண்ணி வேய்ந்து மான் மதக் கலவைச் சாந்தம்
    மட்டனம் செய்து முத்தான் மாண் கலன் முழுதும் தாங்கி
    விட்டவர் கலை வான் திங்கள் வெண் கதிர்ச் செல்வன் போல் வந்து
    இட்ட பூம் தவிசின் மேல் கொண்டு இருந்தனன் சங்கம் ஏங்க.
    1012 அந்நிலை மண நீர் ஆதி அரும் கலப் போர்வை போர்த்த
    கன்னியைக் கொணர்ந்து நம்பி வல வயின் கவின வைத்தார்
    பன்னியொடு எழுந்து சோம சேகரன் பரனும் பங்கின்
    மன்னிய உமையும் ஆக மதித்து நீர்ச் சிரகம் தாங்கி.
    1013 மங்கல நீரான் நம்பி மலரடி விளக்கி வாசக்
    கொங்கு அலர் மாலை சூட்டிக் குளிர் மது பருக்கம் ஊட்டி
    நங்கை தன் கையைப் பற்றி நம்பி தன் கையில் ஏற்றிப்
    புங்கவர் அறிய நன்னீர் மந்திரம் புகன்று பெய்வான்.
    1014 இரவி தன் மருமான் சோம சேகரன் என் பேர் திங்கள்
    மரபினை விளக்க வந்த சுந்தர மாறன் மைந்தன்
    உரவு நீர் ஞாலம் தாங்கும் உக்கிர வருமற்கு இன்று என்
    குரவு அலர்க் கோதை மாதைக் கொடுத்தனன் என நீர் வார்த்தான்.
    1015 மைந்து உறு மடங்கல் திண் கால் மணி வட வயிர ஊசல்
    ஐந்துடன் பதம் செய் பஞ்சி அணையினோடு அன்னத்தூவிப்
    பைந்துகில் அணை ஈர் ஐந்து பவளவாய்ப் பசும் பொன் மேனி
    இந்திர மணிக்கண் பாவை விளக்கு நான்கு இரட்டி என்ப.
    1016 அட்டில் வாய் அடுக்கும் செம்பொன் கலங்கள் நூறு அம் பொன் ஆக்கி
    இட்டு இழை மணிக் களாஞ்சி ஏழு பொன் கவரி எட்டு
    விட்டு ஒளிர் பசும் பொன் கிண்ணப் பந்தி சூழ் விளங்க நாப்பண்
    நட்ட பொன் கலினோடு நகை மணிக் கலன் நூறு என்ப.
    1017 பெரு விலை ஆரப் பேழை ஆயிரம் பெற்ற நுண் தூசு
    அரு விலைப் பட்டு வெவ் வேறு அமைந்தன பேழை முந்நூறு
    உரு அமுது எழுதிச் செய்த ஓவியப் பாவை அன்னார்
    திருமணிக் கலனோடு ஏவல் சேடியர் எழு நூற்று ஐவர்.
    1018 விளை வொடு மூன்று மூதூர் மின்னு விட்டு எறியும் செம்பொன்
    அளவு இருகோடி இன்ன அரும் பெறல் மகட்குச் செல்வ
    வளம் உற வரிசை ஆக வழங்கினான் முழங்கி வண்டு
    திளை மதுக் கண்ணிச் சேம சேகர மன்னன் மாதோ.
    1019 ஆர்த்தன வியங்கள் எல்லாம் அமரர் மந்தார மாரி
    தூர்த்தனர் வேள்விச் செம் தீ சுழித்தது வலமாய்த் துள்ளி
    ஆர்த்தன மடவார் நாவின் முளைத்தன வாழ்த்து மன்றல்
    பார்த்தனர் கண்கள் எல்லாம் பெற்றன படைத்த பேறு.
    1020 பொதி அவிழ் கடப்பந் தண் தார்ப் புயத்து இளம் காளை அன்னான்
    முதியவர் செந்தீ ஓம்ப இன்னியம் முழங்கக் காந்தி
    மதியை மங்கல நாண் பூட்டி வரி வளைச் செங்கைப் பற்றி
    விதி வழி ஏனை மன்றல் வினை எலாம் நிரம்பச் செய்தான்.
    1021 எண் இலாத வளத்தினொடும் இரவி மருமான் மடப்பிடியை
    பண் நிலாவு மறை ஒழுக்கம் பயப்ப வேள்வி வினை முடித்துக்
    தண் நிலா வெண் கலை மதியும் தாரா கணமும் தவழ்ந்து உலவ
    விண் நிலாவு மணி மாட வீதி வலமாய் வரும் எல்லை.
    1022 மின் நேர் பொன் அம் தொடியினரும் மென் செம் பஞ்சி அடியினரும்
    பொன் நேர் மணிப்பூண் முலையினரும் புலம்பு மணிமேகலை யினரும்
    அன் நேர் ஓதித் தாரினரும் ஆகிக் கண்ணும் மனமும் அவன்
    முன்னே தூது நடப்பது என நடப்ப நடந்தார் முகிழ் முலையார்.
    1023 சுருங்கும் இடையார் தன் பவனி தொழுது வருவார் தமக்கு இரங்கி
    மருங்குல் பாரம் கழிப்பான் போல் கலையைக் கவர்ந்தும் வரைத் தோள் மேல்
    ஒருங்கு பாரம் கழிப்பான் போல் வளையைக் கவர்ந்தும் உள்ளத்துள்
    நெருங்கு பாரம் கழிப்பான் போல் நிறையைக் கவர்ந்து நெறிச் செல்வான்.
    1024 வான மதி சேர் முடி மறைத்த வழுதி மகனே இவன் என் என்றால்
    ஆனை எழுத்தில் சிங்க இள அடலேறு என்ன வயல் வேந்தர்
    செனை தழுவ வரும் பவனிக்கு ஒப்பு ஏது ஒப்புச் செப்பும் கால்
    யானை மகளை மணந்து வரும் இளையோன் பவனிச் செல்வமே.
    1025 இம்மை தனிலும் நன்மை தரும் ஈசன் தனையும் வாசவற்கு
    வெம்மை தருவன் பழிதவிர்க்க விமலன் தனையும் அம் கயல் கண்
    அம்மை தனையும் பணிந்து மீண்டு அரசன் கோயில் அடைந்து ஈன்றோர்
    தம்மை முறையால் அடிக் கமலம் தலையில் பணிந்தான் தனிக்குமரன்.
    1026 ஆனாவறு சுவை அடிசில் அயில் வோர் தம்மை அயில் வித்து
    நானா வரிசை வரன் முறையா நல்கி விடையும் நல்கிப் பின்
    வான் நாடவர்க்கும் விடைகொடுத்து மதிக்கோன் ஒழுகி வைகும் நாள்
    தேனார் கண்ணித் திரு மகனுக்கு இதனைச் செப்பி இது செய்வான்.
    1027 மைந்த கேட்டி இந்திரனும் கடலும் உனக்கு வான் பகை ஆம்
    சந்த மேருத் தருக்கு அடையும் சத வேள்விக் கோன் முடி சிதற
    இந்த வளை கொண்டு எறி கடலில் இவ் வேல் விடுதி இச் செண்டால்
    அந்த மேரு தனைப் புடை என்று எடுத்தும் கொடுத்தான் அவை மூன்றும்.
    1028 அன்ன மூன்று படைக் கலமும் தொழுது வாங்கி அடல் ஏறு
    தன்னை நேரா எதிர்நிற்கும் தனயன் தனை உக்கிர வழுதி
    என்ன ஆதி மறை முழங்க வியங்கள் ஏங்க முடி கவித்துத்
    தன்னது ஆணை அரசு உரிமை தனிச் செங் கோலும் தான் நல்கா.
    1029 சூட்சி வினையில் பொன் அனைய சுமதி தன்னைத் தொல் நூலின்
    மாட்சி அறிஞர் தமை நோக்கி வம்மின் இவனைக் கண் இமைபோல்
    காட்சி பயக்கும் கல்வியும் போல் காப்பீர் இது நும் கடன் இம் மண்
    ஆட்சி இவனது என்று இளைய அரி ஏறு அணையான் தனை நல்கா.
    1030 வெய்ய வேல் காளை அன்னான் தன்னையும் வேறு நோக்கி
    ஐய இவ்வையும் தாங்கி அளித்தன நெடு நாள் இந்த
    மை அறு மனத்தார் சொல்லும் வாய்மை ஆறு ஒழுகி நீயும்
    செய்ய கோன் முறை செய்து ஆண்டு திருவொடும் பொலிக என்றான்.
    1031 பன்னரும் கணங்கள் எல்லாம் பண்டைய வடிவம் ஆகத்
    தன் அருள் துணையாய் வந்த தடாதகைப் பிராட்டி யோடும்
    பொன் நெடும் கோயில் புக்குப் பொலிந்தனன் இச்சை தன்னால்
    இன் அருள் படிவம் கொள்ளும் ஈறு இலா இன்ப மூர்த்தி.
    1032 பின்னர் உக்கிர பெயர் தரித்த அத்
    தென்னர் கோ மகன் தெய்வ நால் மறை
    மன்னும் நல் அறம் வளர வையகம்
    தன்னது ஆணையால் தாங்கி வைகினான்.

    உக்கிர பாண்டியனுக்கு வேல் வளை செண்டு கொடுத்த படலம் சுபம்
    ----------------------


    1.13. கடல் சுவற வேல் விட்ட படலம் (1033- 1052 )

    1033 வளை யொடு செண்டு வேல் மைந்தற்கு அஞ்சுரும்
    பனைய வேம்பு அணிந்த கோன் அளித்த வாறிதத்
    தளை அவிழ் தாரினான் தனையன் வேலை மேல்
    இளையவன் என்ன வேல் எறிந்தது ஓதுவாம்.
    1034 திங்களின் உக்கிரச் செழியன் வெண் குடை
    எங்கணும் நிழற்ற வீற்று இருக்கும் நாள் வயில்
    சங்கை இல்லாத மா தரும வேள்விகள்
    புங்கவர் புடைதழீஇப் போற்ற ஆற்றும் நாள்.
    1035 அரும் பரி மகம் தொண்ணூற்று ஆறு செய்துழிச்
    சுரும்பு அரி பெரும் படைத் தோன்ற தண் அறா
    விரும்பரி முரன்று சூழ் வேம்பின் அம் குழைப்
    பொரும் பரி வீரன் மேல் பொறாது பொங்கினான்.
    1036 மன்னிய நாடு எலாம் வளம் சுரந்து வான்
    பொன்னிய நாடு போல் பொலிதலால் இந்த
    மின்னிய வேலினான் வேள்வி செய்வது என்று
    உன்னிய மனத்தன் ஓர் சூழ்ச்சி உன்னினான்.
    1037 பொரும் கடல் வேந்தனைக் கூவிப் பொன் என
    இரும் கடல் உடுத்த பார் ஏழும் ஊழிநாள்
    ஒருங்கு அடு வெள்ளம் ஒத்து உருத்துப் போய் வளைந்து
    அரும் கடி மதுரையை அழித்தியால் என்றான்.
    1038 விளைவது தெரிகிலன் வேலை வேந்தனும்
    வளவயன் மதுரையை வளைந்திட்டு இம் எனக்
    களைவது கருதினான் பேயும் கண் படை
    கொள் வரு நனந்தலைக் குருட்டுக் கங்குல் வாய்.
    1039 கொதித்தலைக் கரங்கள் அண்ட கூடம் எங்கும் ஊடு போய்
    அதிர்த்து அலைக்க ஊழி நாளில் ஆர்த்து அலைக்கும் நீத்தம் ஆய்
    மதித் தலத்தை எட்டி முட்டி வரும் ஓர் அஞ்சனப் பொருப்பு
    உதித்தல் ஒத்து மண்ணும் விண்ணும் உட்க வந்தது உத்தியே.
    1040 வங்க வேலை வெள்ளம் மாட மதுரை மீது வரு செயல்
    கங்குல் வாய திங்கள் மீது காரி வாய கார் உடல்
    வெம் கண் வாள் அரா விழுங்க வீழ்வது ஒக்கும் அலது கார்
    அம் கண் மூட வருவது ஒக்கும் அல்லது ஏது சொல்வதே.
    1041 வட்ட ஆமை பலகை வீசு வாளை வாள் கண் மகரமே
    பட்ட யானை பாய் திரைப் பரப்பு வாம் பரித்திரள்
    விட்ட தோணி இரதம் இன்ன விரவு தானை யொடு கடல்
    அட்டம் ஆக வழுதி மேல் அமர்க்கு எழுந்தது ஒக்குமே.
    1042 இன்னவாறு எழுந்த வேலை மஞ்சு உறங்கும் இஞ்சி சூழ்
    நல் நகர்க் குணக்கின் வந்து நணுகும் எல்லை அரை இரா
    மன்னவன் கனாவின் வெள்ளி மன்ற வாணர் சித்தராய்
    முன்னர் வந்து இருந்து அரும்பு முறுவல் தோன்ற மொழிகுவார்.
    1043 வழுதி உன் தன் நகர் அழிக்க வருவது ஆழி வல்லை நீ
    எழுதி போதி வென்றி வேல் எறிந்து வாகை பெறுக எனத்
    தொழுத செம் கரத்தினான் துதிக்கும் நாவினான் எழீஇக்
    கழுது உறங்கும் கங்குலில் கனா உணர்ந்து காவலான்.
    1044 கண் நிறைந்த அமளியின் கழிந்து வாயில் பல கடந்து
    உண் நிறைந்த மதி அமைச்சருடன் விரைந்து குறுகியே
    மண் இறந்தத என முழங்கி வரு தரங்க வாரி கண்டு
    எண் இறந்த அதிசயத்தன் ஆகி நிற்கும் எல்லைவாய்.
    1045 கனவில் வந்த சித்த வேடர் நனவில் வந்து காவலோன்
    நினைவு கண்டு பொழுது தாழ நிற்பது என் கொல் அப்பனே
    சினவி வேலை போல வந்த தெவ்வை மான வலிகெட
    முனைய வேல் எறிந்து ஞால முடிவு தீர்த்தி ஆல் என.
    1046 எடுத்த வேல் வலம் திரித்து எறிந்த வேலை வேல் முனை
    மடுத்த வேலை சுஃறெனவ் அறந்தும் ஆன வலி கெட
    அடுத்து வேரி வாகை இன்றி அடி வணங்கும் தெவ்வரைக்
    கடுத்த வேல் வலான் கணைக் காலின் மட்டது ஆனதே.
    1047 சந்த வேத வேள்வியைத் தடுப்பது அன்றி உலகு எலாம்
    சிந்த வேறு சூழ்ச்சி செய்த தேவர் கோவின் ஏவலால்
    வந்த வேலை வலி அழிந்த வஞ்சர்க்கு நன்றி செய்து
    இந்த வேலை வலி இழப்பது என்றும் உள்ளதே கொலாம்.
    1048 புண் இடை நுழைந்த வேலால் புணரியைப் புறம் கண்டோன் பால்
    மண் இடை நின்ற சித்தர் வான் இடை மறைந்து ஞானக்
    கண் இடை நிறைந்து தோன்றும் கருணையால் வடிவம் கொண்டு
    விண் இடை அணங்கி னோடு விடை இடை விளங்கி நின்றார்.
    1049 முக்கணும் புயங்கள் நான்கும் முளை மதிக் கண்ணி வேய்ந்த
    செக்கர் அம் சடையும் காள கண்டமும் தெரிந்து தென்னன்
    பக்கமே பணிந்து எழுந்து பரந்த பேர் அன்பும் தானும்
    தக்க அஞ்சலி செய்து ஏத்தித் தரை மிசை நடந்து செல்வான்.
    1050 துந்துபி ஐந்தும் ஆர்ப்பப் பார் இடம் தொழுது போர்ப்பத்
    தந்திர வேத கீதம் ததும்பி எண் திசையும் தாக்க
    அந்தர நாடர் ஏத்த அகல் விசும்பு ஆறது ஆக
    வந்து தன் கோயில் புக்கான் வரவு போக்கு இறந்த வள்ளல்.
    1051 அஞ்சலி முகிழ்த்துச் சேவித்து அருகு உற வந்த வேந்தன்
    இஞ்சி சூழ் கோயில் எய்தி இறைஞ்சினன் விடை கொண்டு ஏகிப்
    பஞ்சின் மெல் அடியார் அட்ட மங்கலம் பரிப்ப நோக்கி
    மஞ்சு இவர் குடுமி மாட மாளிகை புகுந்தான் மன்னோ.
    1052 வளை எயில் மதுரை மூதூர் மறி கடல் இவற்றின் நாப்பண்
    விளை வயன் நகரம் எல்லாம் வெள்ளி அம்பலத்துள் ஆடும்
    தளை அவிழ் கொன்றை வேணித் தம்பிரான் தனக்கே சேர்த்துக்
    களை கணாய் உலகுக்கு எல்லாம் இருந்தனன் காவல் வேந்தன்.

    கடல் சுவற வேல் விட்ட படலம் சுபம்
    ----------------


    1. 14. இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலம் (1053 - 1111)

    1053 பொன் அவிர் வாகை வேய்ந்த புகழ் உரை செய்தேம் நாக
    நல் நகர் ஆளி செம் பொன் கை முடி சிதற வந்த
    மன்னவன் வளை கொண்டு ஓச்சி வென்றதும் வகுத்துச் சொல்வாம்.
    1054 கோமகன் நிகழும் நாளில்கோள் நிலை பிழைத்துக் கொண்மூ
    மா மழை மறுப்பப் பைங்கூழ் வறந்து புல் தலைகள் தீந்து
    காமரு நாடு மூன்றும் கை அறவு எய்த மன்னர்
    தாம் அது தீர்வு நோக்கித் தமிழ் முனி இருக்கை சார்ந்தார்.
    1055 முனிவனை அடைந்து வேந்தர் மூவரும் தங்கள் நாட்டில்
    பனிவரு மாரி இன்றி வறந்தமை பகர மேருக்
    குனி வரு சிலையார்க்கு அன்பன் கோள் நிலை குறித்து நோக்கி
    இனி வரு மாரி இல்லை ஆதினால் என்னில் கேண்மின்.
    1056 காய் சின வெய்யோன் சேயோன் முன் செலக் கதிர்கால் வெள்ளித்
    தேசிகன் பின்பு சென்று நடக்கும் இச் செயலான் முந்நீர்
    தூசின உலகில் பன்னீராண்டு வான் சுருங்கும் என்று
    பேசின நூல்கள் மாரி பெய்விப் போன் சென்று கேண்மின்.
    1057 என்றவன் எதிர் யாம் எவ்வாறு ஏகுது என்றார் ஐந்தும்
    வென்றவன் சோம வார விரதம் நீர் நோற்று வெள்ளி
    மன்றவன் அருளைப் பெற்று வான் வழிச் செல்மின் என்ற அக்
    குன்றவன் சிலையா நோன்பின் விதியினைக் கூறு கின்றான்.
    1058 உத்தம வானோர் தம்முள் உத்தமன் ஆகும் ஈசன்
    உத்தம சத்தி மருள் உத்தமி உருத்திராணி
    உத்தம விரதம் தம்முள் உத்தமம் திங்கள் நோன்பு என்று
    உத்தம மறை நூல் ஆதி உரைக்கும் இச் சோம வாரம்.
    1059 மந்தரம் காசி ஆதிப் பதிகளில் வதிந்து நோற்கத்
    தந்திடும் பயனில் கோடி தழைத்திடும் மதுரை தன்னில்
    இந்த நல் விரதம் நோற்போர் அதிகம் யாது என்னில் சோம
    சுந்தரன் உரிய வாரம் ஆதலால் சோம வாரம்.
    1060 அங்கு அதின் அதிகப் பேறு உண்டு அருக்கனின் மதி தோய்ந்து ஒன்றித்
    தங்கிய திங்கள் நோன்பு தகுதியின் நோற்க வல்லார்க்கு
    இங்கு அதின் அதிக நீதி ஈட்டிய பொருள் கொண்டு ஆற்றும்
    மங்கல விரதப் பேர் ஒன்று அனந்தமாய் வளரும் அன்றே.
    1061 நலம் மலி விரதம் நோற்பத் தொடங்குநாள் நவில்வாம் தேளிற்
    சிலையினில் ஆதல் இன்றி இரட்டியது எரிசம் சேர்ந்து
    மல மதி ஒழித்து மற்றை மதியிலும் முந்தை பக்கத்து
    அலர் கதிர் வாரத்து அல் ஊண் அயின்றிடாது அயலில் துஞ்சா.
    1062 வை கறை எழுந்து சேல் கண் மணாளனை உள்கி அற்றைச்
    செய்கடன் நிறீஇக் காமாதி சிந்தை நீத்து அலர் பொன் கஞ்சப்
    பொய்கையை அடைந்து கையில் பவித்திரம் புனைந்து வாக்கு
    மெய் கருத்து ஒருப்பாடு எய்தச் சங்கற்பம் விதந்து கூறி.
    1063 கடம்பு அடி முளைத்த முக்கண் கருப்பினை நினைந்து ஞாலத்து
    திடம் படு தீர்த்தம் எல்லாம் ஆடிய பயனை ஈண்டுத்
    திடம் படத் தருதி என்னாத் திரைத் தடம் படிந்து வெண் நீறு
    உடம்பு அணிந்து தக்க மாலை ஒளி பெற விதியால் தாங்கி.
    1064 வெள்ளை மந்தாரம் முல்லை மல்லிகை வெடி வாய் சாதி
    கள் அவிழ் மயிலை ஆதி வெண்மலர் கவர்ந்து வேழப்
    பிள்ளையை முந்தப் பூசித்து இரந்து சங்கற்பம் பேசி
    உள் அணைந்து உச்சி மேல் பன்னிரு விரல் உயர்ச்சிக்கு உம்பர்.
    1065 சத்திய ஞான ஆனந்த தத்துவம் தன்னை உள்கி
    வைத்த தன் வடிவம் கொண்டு மண் முதல் சிவம் ஈறு ஆன
    அத்துவ லிங்கம் தன்னை ஆசன மூர்த்தி மூல
    வித்தை மற்று நாலு நூலின் விதியினால் பூசை செய்க.
    1066 ஐந்து அமுது ஆவின் ஐந்து நறும் கனி ஐந்து செம்தேன்
    சந்தன தோயம் புட்பத் தண் புனல் மணி நீராட்டிச்
    சுந்தர வெண் பட்டு ஆடை கருப்புரம் சுண்ணம் சாந்தம்
    கந்த மல்லிகை முன் ஆன வெண் மலர்க் கண்ணி சாத்தி.
    1067 காசணி பொலம் பூண் சாத்திக் கனைகழல் ஆதி அங்க
    பூசனை செய்து சேல் கண் பூரண பரையை அவ்வாறு
    ஈசன் ஐந்து எழுத்தைப் பெண் பால் இசைய உச்சரித்துப் பூசித்து
    தாசறு சுரபித் தீம்பால் அட்ட இன் அமுதினோடும்.
    1068 பண்ணிய வகை பானீய நிவேதனம் பண்ணி வாசம்
    நண்ணிய அடைக்காய் நல்கி நறு விரைத் தூபம் தீபம்
    எண்ணிய வகையால் கோட்டிக் கண்ணடி ஏனை மற்றும்
    புண்ணியன் திரு முன் காட்டி வில்வத்தால் பூசை செய்தல்.
    1069 புரகரன் இச்சா ஞானக் கிரியை ஆய்ப் போந்த வில்வ
    மர முதல் அடைந்து மூன்று வைகல் ஊண் உறக்கம் இன்றி
    அரகர முழக்கம் செய்வோர் ஐம் பெரும் பாதகங்கள்
    விரகில் செய் கொலைகள் தீரும் ஆதலால் விசேடம் வில்வம்.
    1070 மடங்கி இதழ் சுருங்கல் வாடி உலர்ந்தது மயிர் சிக்கு உண்டல்
    முடங்கு கால் சிலம்பிக் கூடு புழுக் கடி முதல் ஆம் குற்றம்
    அடங்கினும் குற்றம் இல்லை உத்தமம் ஆகும் வில்வம்
    தடம் கை கொண்டு ஈசன் நாமம் ஆயிரம் சாற்றிச் சாத்தல்.
    1071 அடியனேன் செய்யும் குற்றம் அற்றைக்கு அன்று அனந்தம் ஆகும்
    கொடிய நஞ்சு அமுதாக் கொண்டாய் குற்றமும் குணம் ஆக் கொண்டு
    படி எழுத அரிய நங்கை பங்கனே காத்தி என்று
    முடி உற அடியில் வீழ்ந்து மும் முறை வலம் செய்து ஏத்தி.
    1072 வன் மனம் கரை நின்று வேண்டிய வரங்கள் வேண்ட
    நன் மணப் பேறு மக்கள் பெறுதல் வாக்குக் கல்வி
    பொன் மனக் இனிய போகம் தெவ்வரைப் புறகு காண்டல்
    இம்மையில் அரசு மற்று எண்ணியாங்கு எய்தும் மன்னோ.
    1073 ஆதி இவ் இலிங்கம் தீண்டல் அருகர் அல்லாத வேத
    வேதியர் முதலோர் இட்ட இலிங்கத்து இவ்விதியால் அர்ச்சித்து
    ஓதிய விரதம் நோற்க அர்ச்சனைக்கு உரியர் அல்லாச்
    சாதியர் பொருள் நேர்ந்து ஆதி சைவரால் பூசை செய்தல்.
    1074 பொருவில் இவ் விரதம் ஐ வகைத்து உச்சிப் போதில் ஊண் இரவில் ஊண் இரண்டும்
    ஒருவுதல் உறங்காது இருத்தல் அர்ச்சனை நால் யாமமும் உஞற்றுதல் என்னக்
    கருதின் இவ் ஐந்தும் ஒன்றினுக்கு ஒன்று கழியவும் ஐகமாம் நோற்கும்
    வருடம் ஒன்று இரண்டு மூன்று பன்னிரண்டு வருடம் வாழ்நாள் அளவில் இவற்றுள்.
    1075 உடலளவு எண்ணி நோற்பவர் முந்த உத்தியாபனம் செய்து நோற்கக்
    கடவர் அவ் வருடக் கட்டளைக்கு இறுதி கழிப்பதுத் தாபன விதிதான்
    மடல் அவிழ் மாலை மண்டபம் குண்டம் மண்டலம் வகுத்து மா பதியைப்
    படர் ஒளி வெள்ளி முப்பது கழஞ்சில் படிமையான் நிருமிதம் செய்து.
    1076 காலையில் ஆசான் சொல்வழி நித்தக் கடன் முடித்து உச்சி தொட்டு அந்தி
    மாலையின் அளவும் புராண நூல் கேட்டு மாலை தொட்டு யாமம் ஒர் நான்கும்
    சேல் அன கண்ணாள் பங்கனைப் பூசை செய்க அப் பூசனை முடிவின்
    மூல மந்திரம் நூற்று எட்டு நூற்று எட்டு முறையினால் ஆகுதி முடித்தல்.
    1077 வில்லம் ஆயிரம் கொண்டு ஆயிரம் நாமம் விளம்பி நால் யாமமும் சாத்தல்
    நல்ல ஐந்து எழுத்தால் ஐந்து எழுத்து உருவின் நாதனுக்கு அருக்கியம் கொடுத்தல்
    எல்லை இல் மூல மந்திரத்தாலும் ஏனை மந்திரங்களினாலும்
    வில் அழல் ஓம்பிப் பூரண ஆகுதி செய்து ஈறு இலான் வேள்வியை முடித்தல்.
    1078 புலர்ந்த பின் நித்த வினை முடித்து அரம்பை பொதுளும் பாசிலை பதின் மூன்றின்
    நலம் தரு தூ வெள்ளரிசி பெய்து இனிய நறிய காய் கறியொடு பரப்பி
    அலந்தர வான் பால் நிறை குடம் பதின் மூன்று அரிசி மேல் வைத்தான் அடியில்
    கலந்த அன்பினராய்ச் சிவாஅர்ச் சனைக்கு உரிய கடவுள் வேதியர் களை வரித்து.
    1079 காது அணி கலனும் கை அணி கலனும் கவின் பெற அளித்தனர் ஆக
    ஆதரம் பெருக நினைந்து அருச்சனை செய்து அரிய தக்கிணை யொடும் பாதப்
    போதணி காப்பு விசிறி தண் கவிகை பூந்துகில் முதல் பல உடனே
    மேதகு தானம் செய்து பின் குருவைக் கற்பு உடை மின் இடை யோடும்.
    1080 ஆசனத்து இருத்திப் பொலந்துகில் காதுக்கு அணிகள் கைக்கு அணிகளும் அணிந்து
    வாச நல் மலர் இட்டு அருச்சனை செய்து மலைமகள் தலைவனை வரைந்து
    பூசனை செய்த படிமையோடு அம் பொன் பூதலம் பதாதிகள் பிறவும்
    தூசு அலர் மாலை கோட்டணி புனைந்த சுரபிமா தானமும் செய்து.
    1081 இனையவாறு உத்தாபனம் முடித்து ஆசான் ஏவலால் சிவன் அடிக்கு அன்பர்
    தனைய ரோடு ஒக்கலுடன் அமுது அருந்த தகுதி இவ்விரத முன் கண்ணன்
    அனைய தாமரை யோன் இந்திரன் முதல் வான் நாடவர் மூவறு கணத்தோர்
    அனைவரும் நோற்றார் மனிதரும் அனுட்டித்து அரும் பெறல் போகம் வீடு அடைந்தார்.
    1082 ஈது நோற்பவர் வெம் பகை மனத்துயர் தீர்ந்து ஆயிரம் பிறவியில் இயற்றும்
    திது சேர் வினை தீர்ந்து எடுத்த யாக்கையினில் சிவகதி அடைவர் இவ் விரதம்
    ஓதினோர் கேட்டோர் மனைவியர் மக்கள் ஒக்கலோடு இனிது வாழ்ந்து உம்பர்
    மேதகு பதினாலு இந்திரன் பதத்தில் வீற்று இனிது இருப்பர் என்று அறவோன்.
    1083 சொல்லிய நெறியால் சோம சுந்தரன் விரதம் நோற்பான்
    வில் இடு மணிப் பூண் வேந்தர் முனிவனை விடைகொண்டு ஏகி
    அல்லி அம் கனக கஞ்சத்து ஆடி அம் கயல் கண் வல்லி
    புல்லிய பாகன் தன்னை வழிபடீஇ போற்றி நோற்றார்.
    1084 சுந்தரன் தன்னைப் பூசைத் தொழில் செய்து வரம் பெற்று ஏகி
    அந்தரத்து ஆறு செல்வார் அஃது அறிந்து அமரர் வேந்தன்
    வந்தவர் இருக்க வேறு மடங்கல் மான் தவிசு மூன்று
    தந்திடப் பணித்தான் இட்டார் தனது அரியணையில் தாழ.
    1085 வான் வழி வந்த மூன்று மன்னரும் பொன் நாடு எய்தி
    ஊன் வழி குலிச வைவேல் உம்பர் கோன் மருங்கில் புக்கார்
    தேன் வழி போந்தின் கண்ணிச் சேரனு ஆர்த்தார் வேந்தும்
    கான் வழி தாரு நாடன் காட்டிய தவிசின் வைக.
    1086 மைக் கடல் வறப்ப வென்ற வாகை வேல் செழியன் மௌலிச்
    செக்கர் மா மணி வில் காலத் தேவர் கோன் தவிசில் ஏறி
    ஒக்க வீற்று இருந்தான் ஆக உம்பர் கோன் அழுக்காறு எய்திப்
    பக்கமே இருந்த ஏனைப் பார்த்திவர் முகத்தைப் பாரா.
    1087 முகமன் நன்கு இயம்பி நீவிர் வந்தது என் மொழிமின் என்ன
    மகபதி எங்கள் நாட்டின் மழை மறுத்து அடைந்தேம் என்றார்
    அகம் மலர்ந்து அனையார் நாட்டின் அளவும் வான் சுரக்க நல்கி
    நகை மணிக் கலன் பொன் ஆடை நல்கி நீர் போமின் என்றான்.
    1088 அன்னவர் அகன்ற பின்னை அமரர் கோன் கன்னி நாடன்
    தன் அரி அணை மேல் ஒக்கத் தருக்கினோடு இருக்கு மாறும்
    பின்னரும் மாரி வேண்டாப் பெருமித வீறும் நோக்கி
    இன்னது புலப் படாமை இனையது ஓர் வினயம் உன்னா.
    1089 பொற்பு உற வரிசை செய்வான் போல் அளவு இறந்தோர் தாங்கி
    வெற்பு உறழ் திணி தோள் ஆற்றல் மெலிவது ஓர் ஆரம் தன்னை
    அற்புற அளித்தான் வாங்கி அலர் மதுத் தார் போல் ஈசன்
    கற்பு உடை உமையாள் மைந்தன் கதும் என கழுத்தில் இட்டான்.
    1090 கண்டனன் கடவுள் நாதன் கழியவும் இறும் பூது உள்ளம்
    கொண்டனன் இன்று தொட்டுக் குரை அளி துழாவு நிம்பத்
    தண் தழை மார்ப ஆரம் தாங்கும் பாண்டியன் என்று உன்னை
    மண்டலம் மதிக்க என்றான் வான நாடு உடைய மன்னன்.
    1091 அன்னது சிறிதும் எண்ணாது அங்கு நின்று இழிந்து தென்னன்
    தன் நகர் அடைந்தான் இப்பால் சத மகன் ஆணையால் அம்
    மன்னவர் இருவர் நாடும் மழை வளம் பெருகப் பெய்த
    தென்னவன் நாடு பண்டைச் செயல் அதாய் இருந்தது அன்றே.
    1092 ஆயது ஓர் வைகல் வேட்டை ஆடுவான் அண்ணல் விண்ணந்து
    ஆயது ஓர் பொதியக் குன்றில் சந்தனச் சாரல் நண்ணி
    மேயதோர் அரிமான் ஏனம் வேங்கை எண்கு இரலை இன்ன
    தீயதோர் விலங்கு வேட்டம் செய்து உயிர் செகுக்கும் எல்லை.
    1093 பொன்றத்து மருவிக் குன்றில் புட்கலா வருத்தம் ஆதி
    மின்றத்து மேகம் நான்கும் வீழ்ந்தன மேயக் கண்டு
    குன்றத்தின் நெடிய திண் தோள் கொற்றவன் அவற்றைப் பற்றிக்
    கன்றத் திண் களிறு போலக் கடும் தளை சிக்க யாத்தான்.
    1094 வேட்டத்தில் பட்ட செம்கண் வேழம்போல் கொண்டு போகிக்
    கோட்டத்தில் இட்டான் ஆக குன்று இறகு அரிந்த வென்றி
    நாட்டத்துப் படிவத்து அண்ட நாடன் மற்று அதனைக் கேட்டுக்
    காட்டத்துக் கனல் போல் சீறிக் கடும் சமர் குறித்துச் செல்வான்.
    1095 வாங்கு நீர் வறப்ப வேலை விடுத்ததும் வலிய வாரம்
    தாங்கிய செருக்கும் காரைத் தளை இடு தருக்கு நோக்கி
    ஈங்கு ஒரு மனித யாக்கைக் இத்துணை வலியாது என்னா
    வீங்கியம் ஆன மூக்க மீனவன் மதுரை சூழ்ந்தான்.
    1096 ஓடினர் ஒற்றர் போய்ச் செழிய ஒண் கழல்
    சூடினார் நகர்ப்புறம் சுரர்கள் சேனைகள்
    மூடின என்னலும் முனிவும் மானமும்
    நீடினன் அரியணை இழிந்து நீங்குவான்.
    1097 பண்ணுக தேர் பரி பகடு வீரர் முன்
    நண்ணுக கடிது என நடத்தி யாவர் என்று
    எண்ணலன் மத மலை எருத்த மேல் கொடு
    கண்ணகன் கடி நகர்க் காப்பு நீங்கு முன்.
    1098 அடுத்தனர் வானவர் ஆர்த்துப் பல் படை
    எடுத்தனர் வீசினர் சிலையில் எய்கணை
    தொடுத்தனர் இறுதி நாள் சொரியும் மாரிபோல்
    விடுத்தனர் மதிக்குல வீரன் சேனை மேல்.
    1099 ஆர்த்தனர் மலய வெற்பு அரையன் சேனையோர்
    பார்த்தனர் வேறு பல் படைக்கலக் குவை
    தூர்த்தனர் குனிசிலை தொடுத்து வாளியால்
    போர்த்தனர் அமரர் மெய் புதைத்த என்பவே.
    1100 தறிந்தன தாள் சிரம் தகர்ந்த தோள் கரம்
    பறிந்தன குருதி நீர் கடலில் பாய்ந்தன
    செறிந்தன பாரிடம் சேனம் கூளிகள்
    முறிந்தன் வானவர் முதல்வன் சேனையே.
    1101 ஆடின குறைத்தலை அவிந்த போர்க்களம்
    பாடின பாரிடம் விந்தைப் பாவை தாள்
    சூடின கூளிகள் சோரி சோரப் பார்
    மூடின பிணக் குவை அண்டம் முட்டவே.
    1102 வெஞ்சின வலாரிதன் வீரச் சேனைகள்
    துஞ்சின கண்டு எரி சொரியும் கண்ணன் ஆய்ப்
    பஞ்சின் முன் எரி எனப் பதைத்து தெய்வத
    வஞ்சினப் படைகளான் மலைவது உன்னினான்.
    1103 வெம் கதிர்ப் படை விட்டு ஆர்த்தான் விண்ணவன் அதனைத் திங்கள்
    பைங் கதிர்ப் படை தொட்டு ஓச்சி அவித்தனன் பார் ஆள் வேந்தன்
    சிங்க வெம் படை விட்டு ஆர்த்தான் தேவர் கோன் அதனைச் சிம்புட்
    புங்கவன் படை தொட்டு ஓச்சி அடக்கினான் புணரி வென்றோன்.
    1104 தானவர் பகைவன் மோக சரம் தொடுத்து எறிந்தானாக
    மீனவன் அதனை ஞான வாளியால் விளித்து மாய்ந்து
    போனபின் மற்போர் ஆற்றிப் புக்கனர் புக்கார் தம்மில்
    வானவன் மண்ணினான் மேல் வச்சிரம் வீசி ஆர்த்தான்.
    1105 காய்சின மடங்கல் அன்னான் கை வளை சுழற்றி வல்லே
    வீசினான் குலிசம் தன்னை வீழ்த்தது விடுத்தான் சென்னித்
    தேசினன் மகுடம் தள்ளிச் சிதைத்தது சிதைத்த லோடும்
    கூசினன் அஞ்சிப் போனான் குன்று இற கரிந்த வீரன்.
    1106 இந்து இரண்டு அனைய கூர்அம்பல் இருள் வரை நெஞ்சு போழ்ந்த
    மைந்தனின் வலிய காளை வரைந்து எறி நேமி சென்னி
    சிந்திடாது ஆகி அம் பொன் மணி முடி சிதறச் சோம
    சுந்தர நாதன் பூசைத் தொழில் பயன் அளித்தது என்னா.
    1107 போரினுக்கு ஆற்றாது ஓடிப் பொன் நகர் புகுந்த வென்றித்
    தாரினுக்கு இசைந்த கூர் வேல் சதமகன் பின்பு நின் நாட்டு
    ஊரினுக்கு எல்லாம் மாரி உதவுவேன் இகள நீக்கிக்
    காரினைத் தருக என்னாக் கவுரியற்கு ஓலை விட்டான்.
    1108 முடங்கல் கொண்டு அணைந்த தூதன் முடி கெழு வேந்தன் பாதத்து
    ஓடுங்கி நின்று ஓலை நீட்ட உழை உளான் ஒருவன் வாங்கி
    மடங்கல் ஏறு அனையான் முன்னர் வாசித்துக் காட்டக் கேட்டு
    விடம் கலுழ் வேலான் விண்ணோர் வேந்து உரை தேறான் ஆகி.
    1109 இட்ட வன் சிறையை நீக்கி எழிலியை விடாது மாறு
    பட்ட சிந்தையனே ஆகப் பாக சாதனனுக்கு என்று
    நட்டவன் ஒரு வேளாளன் ஆன் பிணை என்று தாழ்ந்தான்
    மட்டு அவிழ்ந்து ஒழுகு நிம்ப மாலிகை மார்பினானும்.
    1110 இடுக்கண் வந்து உயிர்க்கு மூற்றம் எய்தினும் வாய்மை காத்து
    வடுக்களைந்து ஒழுகு நாலா மரபினான் உரையை ஆத்தன்
    எடுத்து உரை மறை போல் சூழ்ந்து சிறைக் களத்து இட்ட யாப்பு
    விடுத்தனன் பகடு போல மீண்டன மேகம் எல்லாம்.
    1111 தேவர் கோன் ஏவலாலே திங்கள் மும் மாரி பெய்து
    வாவியும் குளனும் ஆறு மடுக்களும் அடுத்துக் கள்வாய்க்
    காவி சூழ் வயலும் செய்யும் செந் நெலும் கன்னல் காடும்
    பூ விரி பொழிலும் காவும் பொலிந்தது கன்னிநாடு.

    இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலம் சுபம்
    ----------------


    15. மேருவைச் செண்டால் அடித்த படலம் (1112-1152)

    1112 அண்டர் அஞ்ச அமர் உழந்த அமரர் கோனை அரசர் கோன்
    வண்டு அலம்பு மவுலி சிந்த வளை எறிந்து வெந் புறம்
    கண்ட வண்ணம் இன்ன தன்ன கன்னி நாடன் மேருவில்
    செண்டு எறிந்து வைப்பு எடுத்த செயலு நன்கு செப்புவாம்.
    1113 மன்னவன் தனக்கு முன்னர் மலய வெற்பின் முனிவர் கோன்
    சொன்ன திங்கள் விரதம் அன்று தொட்டு நோற்று வரலும் அந்
    நன்னலம் செய் பேறு போல நங்கை காந்தி மதி வயிற்று
    உன்னரும் சயம் கொள் மைந்தன் ஒருவன் வந்து தோன்றினான்.
    1114 வயந்தனை பயந்தது என்ன மைந்தனைப் பயந்த போது
    இயந்து வைத்து நகர் களிப்ப இனிது இருந்த புரவலன்
    சயம் தழைக்க இந்திரன் சயந்தனைப் பயந்த நாள்
    வியந்து அகத்து அடைந்த இன்பம் விளை மகிழ்ச்சி எய்தினான்.
    1115 தென்னர் ஏறு சாதகாதி செய்து வீர பாண்டியன்
    என்ன நாம வினை நிரப்பி எழுத ஓணாத கலை முதல்
    பன்னு கேள்வி கரிகள் தேர்கள் பரி படை கலம பயின்று
    அன்ன காதலான் விளங்க அகம்மகிழ்ச்சி அடையும நாள்.
    1116 மல்கு மாறுஇல் கோள் திரிந்து மழை சுருங்கி நதியும் நீர்
    ஒல்கு மாறு பருவம் மாறி உணவு மாறி உயிர் எலாம்
    மெல்குமாறு பசி உழந்து வேந்தனுக்கு விளைபொருள்
    நல்கு மாறி இலமை இன்னல் நலிய வந்த நாடு எலாம்.
    1117 மழை வறந்தது என் கொல் என்று வழுதிகூற முழுது உணர்ந்து
    அழிவு இலாத பிரம கற்பம் அளவு எல்லை கண்ட நூல்
    உழவர் கோள்கள் இரவி தன்னை உற்று நோக்கி நிற்றலால்
    தழையும் மாரி வருடியாது ஓர் வருடம் என்று சாற்றினார்.
    1118 மகவு உறு நோயை நோக்கி வருந்து உறு தாய்போல் மன்னன்
    பக உறு மதியம் சூடும் பரம் சுடர் முன் போய் தாழ்ந்து
    மிக உறு பசியால் வையம் மெலிவதை ஐய என்னாத்
    தகவு உற இரங்கி கண்ணீர் ததும்ப நின்று இரந்து வேண்ட.
    1119 திரைக்கடல் விடம் சேர் கண்டர் காலத்தின் செவ்விநோக்கி
    இரக்கம் இல்லாதவர் போல் வாளா இருத்தலும் மருத்தார் மார்பன்
    கரைக்கு அரிது ஆய துன்பக் கடலில் வீழ்ந்து இருக்கைபுக்கான்
    அரக்கர் போல் கடலில் நீந்தி அருக்கன் நீர்க் கடலில் வீழ்ந்தான்.
    1120 வள்ளல் தன் குடைக் கீழ் தங்கும் உயிர்ப்பசி வருத்தம் வருத்தம் எல்லாம்
    கொள்ளை கொண்டு இருந்த நெஞ்சில் குளிர் முகச் செவ்விகுன்றத்
    தள் உரும் துயரின் மூழ்கித் தரை இடைத் துயின்றான் ஆக
    வெள்ளி மன்று உடையார் சித்த வேடராய்க் கனவில் வந்தார்.
    1121 அடல் கதிர் வேலோய் மாரி அரிதி இப்போது அதனை வேண்டி
    இடப் படல் வரைக்கு வேந்தாய் இருக்கின்ற எரி பொன் மேருத்
    தடப் பெரு வரையின் மாடு ஓர் தனிப் பெரு முழையில் இட்டுக்
    கிடப்பது ஒர் எல்லை இல்லாக் கேடு இலாச் சேம வைப்பு.
    1122 கிடைத்து மற்று அனைய மேரு கிரி செருக்கு அடங்கச் செண்டால்
    புடைத்து நின் ஆணைத் தாக்கிப் பொன் அறை பொதிந்த பாறை
    உடைத்து நீ வேண்டும் காறும் தொட்டு எடுத்து அதனை மீள
    அடைத்து நின் குறி இட்டு ஐய வருதி என்று அடிகள் கூற.
    1123 விழித்தன எழு மான் தேரோன் விழிக்கும் முன் கடன்கள் எல்லாம்
    கழித்தனன் மீன நோக்கி கணவனை வலமாப் போந்து
    கழித்து எறி கடல் அனீகத் தொகை புறம் சூழக் கொண்டல்
    கிழித்து எழு வாயின் நீங்கிக் கீழ்த் திசை நோக்கிச் செல்வான்.
    1124 அதிர்ந்தன முரசம் சங்கம் அதிர்ந்தன வியங்கள் அண்டம்
    பிதிர்ந்தன என்ன ஆர்ப்பப் பெயர்ந்து வெண் கவரி துள்ள
    முதிர்ந்த நான் மறையோர் ஆசி மொழிய நா வல்லோர் ஏத்தப்
    பதிந்து பார் கிழியத் திண்தேர் பாகுமுன் செலுத்த ஊர்ந்தான்.
    1125 பவளக்கால் பிச்சம் பொன் கால் பல் மனிக் கவிகை முத்தக்
    தவளக்கால் பதாகைக் காதும் தான வான் அருவி தூங்கும்
    கவளக்கால் பொருப்பும் பாய்மாக் கடலும் மண் மடந்தை ஆகம்
    துவளக் கால் வயவர் மான் தேர் தொகுதியும் சூழல் போக.
    1126 கோழ் இணர் ஞாழல் அன்ன கோட்டு உகிர்ப் புலவுப் பேழ் வாய்த்
    தாழ்சின உழுவை ஒற்றைத் தனிப் பெரும் கொடியும் கூனல்
    காழ் சிலைக் கொடியும் சூழக் கயல் கொடி நிலம் துழாங்கை
    ஏழ் உயர் வரை மேல் தோன்றி இரும் விசும்பு அகடுகீற.
    1127 தென் கடல் வடபால் நோக்கிச் செல்வது போலத் தென்னன்
    தன் கடல் அணிகம் கன்னித் தண் தமிழ் நாடு நீந்தி
    வன் கட நெறிக் கொண்டு ஏகி வளவர் கோன் எதிர் கொண்டு ஆற்றும்
    நன் கடன் முகமன் ஏற்று நளிர் புனல் நாடு நீந்தி.
    1128 தண்டக நாடு தள்ளித் தெலுங்க நாடு அகன்று சாய் தாள்
    கண்டகக் கைதை வேலிக் கரு நடம் கடந்து காடும்
    தொண்டகம் துவைக்கும் குன்று நதிகளும் துறந்து கள்வாய்
    வண்டக மலர்க்கா வேலி மாளவ தேசம் நண்ணி.
    1129 அங்கு நின்று எழுந்து தீவா அரும் சுர நெறிப் பட்டு ஏகி
    அங்கு நின்று அதிரும் செம்பொன் மாட நீள் விராட நண்ணிக்
    கொங்கு நின்று அவிழும் கானம் குன்று ஒரீஇ வாளை பாயத்
    தெங்கு நின்று இளநிர் சிந்து மத்திய தேயத்து எய்தி.
    1130 அங்கு நின்று எழுந்து தீவா அரும் சுர நெறிப் பட்டு ஏகி
    அங்கு நின்று அதிரும் செம்பொன் மாட நீள் விராட நண்ணிக்
    கொங்கு நின்று அவிழும் கானம் குன்று ஒரீஇ வாளை பாயத்
    தெங்கு நின்று இளநிர் சிந்து மத்திய தேயத்து எய்தி.
    1131 மடம்கல் மா நாகம் யாளி வழங்கலான் மனிதர் செல்லா
    இடம் கடந்தாக வைஞ்நூற்று இரட்டி யோசனைத்தாம் எல்லைக்
    கடம் கெழு குமரி கண்டம் கடந்து மற்று அது போல் எட்டுத்
    தடம் கெழு கண்டம் கொண்ட பாரத வருடம் தள்ளி.
    1132 யாவையும் ஈன்றாள் தன்னை ஈன்ற பொன் இமயம் தன்னைத்
    தாவி அப் புறம் போய்ப் போகம் ததும்பு கிம்புருடக் கண்டம்
    மேவி அங்கு அது நீத்து ஏம வெற்பு அடைந்து அது பின் ஆக
    ஓவியப் புறத்துத் தோன்றும் அரி வருடத்தை உற்று.
    1133 உற்றது கழிந்து அப்பால் போய் நிடத வெற்பு ஒழிந்து சம்புப்
    பொன் தருக் கனி கால் யாறு போகி இளா விருத கண்டத்து
    உற்றனன் கண்டான் மூன்று ஊர் ஒருங்கடு ஞான்று கூனி
    வெற்றி வெஞ் சிலையாய் நின்ற வெற்பினை மலய வெற்பன்.
    1134 வெம் படை மறவர் சேனை வெள்ளம் நீத்து ஏகித் தென்பால்
    சம்புவின் கனியின் சாறு வலம் படத் தழுவி ஓடும்
    அம் பொன் ஈர் ஆறு ஆற்றின் அருகு பொன் மயமாய் நிற்கும்
    பைம்புனம் கானம் நோக்கி வளைந்து தென்பால் வந்து எய்தா.
    1135 அவ் வரை அரசை நோக்கி வரைகளுக்கு அரசே எந்தை
    கைவரி சிலையே பாரின் களைகணே அளவில் வானம்
    தை வரு சுடரும் கோளும் நான்களும் தழுவிச் சூழும்
    தெய்வத வரையே மேலைத் தேவர் ஆலயமே என்னா.
    1136 மாணிக்கம் இமைக்கும் பூணான் விளித்தலும் வரைக்கு வேந்தன்
    பாணித்து வரவு தாழ்ப்பப் பாக சாதனனை வென்றோன்
    நாணித் தன் சினமும் மேரு நகை வரைச் செருக்கு மாறச்
    சேண் உற்ற சிகரம் தன்னில் செண்டினால் அடித்து நின்றான்.
    1137 அடித்தலும் அசையா மேரு அசைந்து பொன் பந்து போலத்
    துடித்தது சிகர பந்தி சுரர் பயில் மாடப் பந்தி
    வெடித்தன தருண பானு மண்டலம் விண்டு தூளாய்ப்
    படித்தலை தெறித்தால் என்னப் பல் மணி உதிர்ந்த அன்றே.
    1138 புடை வரைக் குலங்கள் எட்டும் புறம் தழீஇக் கிடக்கும் செம் பொன்
    அடைகல் ஓர் நான்கு கிடங்கரும் மலர்ந்த நான்கு
    தட மலர்ப் பொழிலும் நான்கு தருக்களும் சலித்த அம்மா
    உடையவன் இடையூறு உற்றால் அடுத்த வர்க்கு உவகை உண்டோ.
    1139 புடைத்த பின் மேருத் தெய்வம் புடைக்குல வரை எட்டு என்னப்
    படைத்த எண் தோளும் நான்கு முடியும் மேல் படு வெண் சோதி
    உடைத் தனிக் குடையும் கொண்ட உருவினோடு எழுந்து நாணிக்
    கிடைத்தது கருணை வேந்தன் கிளர் சினம் தணிந்து நோக்கா.
    1140 இத்தனை வரவு தாழ்த்தது என் என மேருத் தெய்வம்
    வித்தக நம்பி கேட்டி மீனெடும் கண்ணியோடும்
    பைத்தலை அரவம் பூண்டபரனை இப் படிவம் கொண்டு
    நித்தலும் போகிப் போகி வழிபடு நியமம் பூண்டேன்.
    1141 இன்று கேட்டிலையோ ஐயா ஏந்திழை ஒருத்தி காமம்
    துன்று மா கடலின் மோகச் சுழித்தலைப் பட்டு வெள்ளி
    மன்றுள் ஆடிய பொன் பாதம் வழிபடல் மறந்து தாழ்ந்து
    நின்றுளேன் இனைய தீங்கின் இமித்தினால் அடியும் பட்டேன்.
    1142 திருவடி பிழைத்த தீங்கு தீர்த்தனை இதனில் ஐயன்
    தருவது ஓர் உறுதி தானும் தக்கது ஒர் கைம்மாறு என்னால்
    வருவது உண்டாம் கொல்லோ மற்று அது நிற்க மன்றல்
    பருவரை மார்ப வந்த பரிசு என் கொல் பகர்தி என்ன.
    1143 மன்னவன் வெறுக்கை வேண்டி வந்தனன் என்றான் ஐய
    உன்னது புலத்து ஓர்க் ஏற்ப உரைபடு மாற்றது ஆய
    பொன் அவிர் தேமா நீழல் புதை படக் கிடக்கும் செம் பொன்
    என்ன அம் கையால் சுட்டிக் காட்டிய தெரி பொன குன்றம்.
    1144 மின் நகு வேலான் முந்நீர் வேலையை வணக்கம் கண்டோன்
    பொன்னறை மருங்கில் போகிப் பொத்திய பாறை நீக்கித்
    தன் அவா அளவிற்று ஆய தபனிய முகந்து மூடிப்
    பின்னதும் தன்னது ஆகப் பெயர் இலச்சனையும் தீட்டா.
    1145 மின் திகழ் மணிப் பூண் மார்பன் மீண்டு தன் தானை யோடும்
    தென் திசை நோக்கிப் பாகன் செலுத்த மான் தடம்தேர் ஊர்ந்து
    பொன் திகழ் வரையும் போக பூமியும் பிறவும் நீத்து
    நன்றி கொள் மனிதர் வைப்பின் நண்ணுவான் நண்ணும் எல்லை.
    1146 மாத்திமர் விராட மன்னர் மாளவர் தெலுங்க தேயப்
    பார்த்திபர் பிறரும் தத்தம் பதிதொறும் வரவு நோக்கித்
    தேர்த்திகழ் அனிகத் தோடும் சென்று எதிர் முகமன் செய்யத்
    தார்த் திரு மார்பன் கன்னித் தண் தமிழ் நாடு சார்ந்தான்.
    1147 கன்னிப் பொன் எயில் சூழ் செம் பொன் கடி நகர்க்கு அணியன் ஆகிப்
    பொன்னில் செய்து இழைத்த நீள் கோபுரத்தினைக் கண்டு தாழ
    உன்னித் தேர் இழிந்து எட்டோடு ஐந்து உறுப்பினால் பணிந்து எழுந்து
    வன்னிச் செம் சுடர்க் கண் நெற்றி மன்னவன் மதுரை சார்ந்தான்.
    1148 அறத்துறை அந்தணாளர் துறந்தவர் அரன் தாள் பற்றிப்
    புறத்துறை அகன்ற சைவபூதியர் புனிதன் கோயில்
    நிறத்துறை அகத்துத் தொண்டர் திரண்டு எதிர் கொள்ள முத்தின்
    நிறத்துறை வைகை நீத்து நெடு மதில் வாயில் புக்கான்.
    1149 கொங்கு அலர் கோதை மாதர் குங்குமம் பனிப்பச் சிந்தும்
    மங்கல மறுகின் ஏகி மறைகள் சூழ் கோயில் எய்தித்
    தங்கள் நாயகனைச் சூழ்ந்து தாழ்ந்து எழுந்து ஏத்திப் போந்து
    திங்கள் சூழ் குடுமிச் செல்வத் திருமணிக் கோயில் புக்கான்.
    1150 பொன் மலைக் கடவுள் ஈந்த புண்ணிய நிதியை அந்த
    நல் மலை மானக் கூப்பி நல்கிப்பல் குடியும் ஓம்பித்
    தென்மலைக் கிழவன் தெய்வம் தென் புல வாணர் ஒக்கல்
    தன் மனை விருந்து காத்துத் தருக்கினான் இருக்கும் நாளில்.
    1151 ஐ வினை நடாத்தும் ஈசன் ஆணையால் நடக்கும் கோளும்
    செய்வினைத் திரிவும் மாறத் தென்னன் நாடு எங்கும் மாரி
    பெய் வினை உடையது ஆகிப் பெருவளம் பகிர்ந்து நல்க
    உய் வினை உடைய ஆகி உயிர் எலாம் தழைத்த அன்றே.
    1140 புவனி இம் முறையால் புரந்து அளித்து ஆரம்பூண்ட பாண்டியன் திரு மகனுக்கு
    அவனி ஏழ் அறிய வீரபாண்டியன் என்று அணிமுடி கவித்து அரசளித்து
    நவ நிரதிசய பூரண இன்ப ஞான நோக்கு அருளிய மதுரைச்
    சிவனடி நிழலில் பிளப்பு அற பழைய தேசு ஒடு நிறைந்து வீற்று இருந்தான்.

    மேருவைச் செண்டால்அடித்த படலம் சுபம்
    ------------------


    1. 16. வேதத்துக்குப் பொருள்அருளிச் செய்த படலம் (1153 - 1194)

    1153 உலம் பொரு தடம் தோள் உக்கிரச் செழியன் உயரிய மேரு மால் வரையைப்
    பொலம் புரி செண்டால் புடைத்து வைப் பெடுத்துப் பேந்துஅருள் அடைந்த வா புகன்றும்
    வலம் படு திணிதோள் வீரபாண்டியன் கோல் வழங்கும் நாள் மதுரை எம் பெருமான்
    புலம் பொரு முனிவர் தேற நால் வேதப் பொருள் உணர்த்திய திறம் புகல்வாம்.
    1154 ஐம் பெரும் பூத நிலை திரிந்து ஈர் ஏழ் அடுக்கிய உலகொடு மயன் மால்
    உம்பர் வான் பதமும் உதித்தவாறு ஒடுங்க உருத்தது ஓர் ஊழி வந்து எய்தச்
    செம் பொருள் மறையும் ஒடுங்கிய வழி நாள் செம் சுடர் கடவுள் முன் மலரும்
    வம்பு அவிழ் கமலம் என அரன் திருமுன் மலர்ந்ததால் அகிலமும் மாதோ.
    1155 பண்டுபோல் பின்னும் முத் தொழில் நடாத்தப் பரா பரஞ்சுடர் திரு உள்ளம்
    கொண்டு போர்த் திகிரி வலவனைத் தாவிக் குரி சிறன் நாபி முண்டகத்தில்
    வண்டு போல் பிரமன் உதித்து மூ உலகும் வரன் முறை படைக்கும் நாள் நஞ்சம்
    உண்டு போற்றிய வானவர்க்கு உயிர் அளித்த உம்பர் நாயகன் திருவாக்கில
    1156 பிரணவம் உதித்தது அதன் இடை வேதம் பிறந்தன நைமி சாரணியத்து
    அருள் நிறை முனிவர் கண்ணுவர் கருக்கர் ஆதியோர் அதிகரித்து அவற்றின்
    பொருள் நிலை தெரியாது உள்ளமும் முகமும் புலர்ந்தனர் இருப்பவர் போதத்
    இருள் மல வலி வென்றவன் அரபத்தன் என்று ஒரு வேதியன் வந்தான்.
    1157 வந்த வேதியனை இருந்த வேதியர்கள் வர எதிர்ந்து இறைஞ்சி வேறு இருக்கை
    தந்த வேலையில் அம் மறையவன் முனிவர் தமை முகம் நோக்கி ஈது உரைப்பான்
    பந்த வேதனை சாலவா வெறுப்பு இகந்த பண்பினன் ஆயினிர் நீவிர்
    சிந்தை வேறு ஆகி முகம் புலர்ந்து இருக்கும் செய்தி யாது என அவர் சொல்வார்.
    1158 மருள் படு மாயை கழிந்தவன் மொழிந்த மறை பயின்று உரை செய்தே சிகனன்
    இருள் படு மனத்தேம் இருத்து மாலைய யாது சூழ் இதற்கு எனக் கேட்ட
    தெருள் படு மனத்தோன் செப்புவான் வேதம் செப்பிய சிவபரம் சுடரே
    அருள் படி எடுத்துப் பொருளையும் உணர்த்தும் அல்லது சூழ்ச்சி யாது அறைவீர்.
    1159 பண்ணிய தவத்தால் அன்றி யாதானும் படுபொருள் பிறிது இலை தவமும்
    புண்ணிய தவத்தின் அல்லது பலியா புண்ணிய தவத்தினும் விழுப்பம்
    நண்ணிய சைவ தலத்தினில் இயற்றின் நல்கும் அச் சிவ தலங்களினும்
    எண்ணிய அதிக தலத்தினில் இயற்றின் இரும் தவம் எளிது உடன் பயக்கும்.
    1160 அத்தகு தலம் மற்று யாது எனில் உலக அகிலமும் தன் உடம்பு ஆன
    வித்தகன் சென்னிப் பன்னிரு விரல் மேல் விளங்கிய தலம் அது சீவன்
    முத்தராய் எண்ணில் வானவர் முனிவோர் முயன்று மா தவப் பயன் அடைந்து
    சித்தம் மாசு அகன்று வதிவது என்று அற நூல் செப்பிய மதுரை அந் நகரில்.
    1161 தௌ¤ தரு விசும்பின் இழிந்தது ஓர் விமான சிகாமணி அருகு தென் மருங்கின்
    முனிதரு பராரை வட நிழல் பிரியா முழுமுதல் வழி படும் அறவோர்க்கு
    களிதரு கருணை முகம் மலர்ந்து அளவா வரும் கலை அனைத்தையும் தௌ¤வித்து
    ஒளிதரும் அனைய மூர்த்தியே நுங்கட்கு ஓதிய மறைப் பொருள் உணர்த்தும்.
    1162 அங்கு அவன் திருமுன் அரும் தவ விரதம் ஆற்றுவான் செல்லுமின் என அப்
    புங்கவன் அருள் போல் வந்த மாதவன் பின் புனித மா முனிவரும் நங்கை
    பங்கவன் மதுரைப் பதி புகுந்து அம் பொன் பல் மணிக் கோயில் புக்கு ஆழிச்
    சங்கவன் கை போல் வளை செறி செம் பொன் தாமரைத் தடாக நீர் ஆடி.
    1163 கரை கடந்து உள்ளம் கடந்த அன்பு உந்தக் கடிது போய் நான்கு இரு வெள்ளி
    வரை கள் தம் பிடரில் கிடந்த ஓர் மேரு வரை புரை விமானம் மேல் காணா
    உகைகள் தம் பொருளைக் கண்களால் கண்டு ஆங்கு உம்பர் தம் பிரானை நேர்கண்டு
    திரை கடந்திடும் பேர் இன்ப வாரியிலும் சேண் நிலத்திலும் விழுந்து எழுந்தார்.
    1164 கை தலை முகிழ்த்துக் கரசரணங்கள் கம்பிதம் செய்து கண் அருவி
    பெய் தலை வெள்ளத்து ஆழ்ந்து வாய் குழறிப் பிரமன் மால் இன்னமும் தேறா
    மை தழை கண்ட வெள்ளி மன்று ஆடும் வானவர் நாயக வானோர்
    உய்தர விடம் உண்டு அமுது அருள் புரிந்த உத்தம போற்றி என்று ஏத்தா.
    1165 மறை பொருள் காணா உள்ளம் மால் உழந்து வாதிய எமக்கு நீயே அந்
    நிறை பொருளாகி நின்றனை அதற்கு நீ அலால் பொருள் பிறிதி யாது என்று
    இறைவனை இறைவன் பங்கில் அம் கயல் கண் இறைவியை அம் முறை ஏத்தி
    முறைவலம் செய்து வடநிழல் அமர்ந்த மூர்த்தி முன் எய்தினார் முனி வோர்.
    1166 சீதளப் பளிக்கு மேனியும் பளிக்குச் செழுமலை பதித்துப் பன்ன
    பாதமும் செவ்வாய் மலரும் முக்கண்ணும் பங்கயச் செம் கரம் நான்கும்
    வேத புத்தகமும் அமுத கும்பமும் தன் விழி மணி வடமும் மெய்ஞ்ஞான
    போதமும் திரையும் தரித்தது ஓர் தனிமைப் போதன் முன் தாழ்ந்து எழுந்து ஏத்தா.
    1167 வடநிழல் அமர்ந்த மறை முதல் மேதா மனு எழுத்து இருபதும் இரண்டும்
    திடம் உற வரபத்தன் தன்னால் தௌ¤ந்து தேள் நிறை மதி முதல் அடைவில்
    படுமதி அளவும் தருப்பணம் ஓமம் பார்ப்பன உண்டி முப் போதும்
    அடைவுற நுவன்று நோற்கும் மாதவர் முன் அரு மறைப் பொருள் வெளிவரும் ஆல்.
    1168 மான முனிவோர் அதிசயிப்ப வட நீழல்
    மோன வடிவு ஆகிய முதல் குரவன் எண் நான்கு
    ஊனம் இல் இலக்கண உறுப்பு அகவை நான் நான்
    கான ஒரு காளை மறையோன் வடிவம் ஆகி.
    1169 நீண்ட திரிமுண்டம் அழல் நெற்றி விழி பொத்தக்
    காண் தகைய கண்டிகை வளைந்து ஒழுகு காதில்
    பூண்ட குழை கௌவிய பொலன் செய் பல காசு
    சேண் தவழ் இளம் கதிர் சிரித்து அருள் சிதைப்ப.
    1170 உத்தரிய வெண் படம் வலம் பட ஒதுங்க
    முத்த வள நூலினொடு முத்தம் இடை இட்டு
    வைத்து அணியும் அக்க வடம் மாலை எறி வாளால்
    பத்தரை மறைத்த மல பந்த இருள் சிந்த.
    1171 கண்டிகை தொடுத்து இரு கரத்தினொடு வாகு
    தண்டின் இடு மாலை விட வாள் அரவு தள்ள
    வெண் துகிலின் ஆன விரி கோவண மருங்கில்
    தண்டரிய பட்டிகை வளைந்து ஒளி தழைப்ப.
    1172 வண்டு வரி பாடுவன போல மலர் பாத
    புண்டரிக மேல் உழல் சிலம்புகள் புலம்பத்
    தொண்டர் அக மாசு இருள் துணித்து முடி சூட்டும்
    முண்டக மலர்ப்புறம் விறல் கழல் முழங்க.
    1173 ஏதம் இல் பவித்திரம் வலக்கரன் இமைப்பப்
    போதம் வரை புத்தகம் இடக்கையது பொற்ப
    ஒதி உணராதல் அறி ஓலம் இடும் வேதம்
    பாது கைகள் ஆகி இரு பாத மலர் சூட.
    1174 கன்ன முளரிக் குள் முரல் கானை அறு கால
    புள் ஒலியின் நாவும் இதமும் புடை பெயர்ந்து
    துள்ள எழு வேத ஒலி தொண்டர் செவி ஆற்றால்
    உள்ள வயல்புக்கு வகை ஒண் பயிர் வளர்ப்ப.
    1175 சீதமணி மூரல் திரு வாய் சிறிது அரும்ப
    மாதவர்கள் காண வெளி வந்து வெளி நின்றான்
    நாத முடிவாய் அளவினான் மறையின் அந்த
    போத வடிவாகி நிறை பூரண புராணன்.
    1176 வட்ட வாண்மதி கண்டு ஆர்க்கும் மூவாக் கடல் மான மாண்ட
    சிட்டர் ஆம் முனிவர் காளைத் தேசிக வடிவம் நோக்கி
    ஒட்டு அறா உவகை வெள்ளம் மேற் கொள உருத்த கூற்றை
    அட்டதாமரை தம் சென்னிக்கு அணி மலர் ஆகத் தாழ்ந்தார்.
    1177 அள வறு கலைகட்கு எல்லாம் உறைவிடம் ஆகி வேத
    விளை பொருள் ஆகி நின்ற வேதிய சரணம் என்ற
    வளை உறு மனத்தினாரைத் தேசிக வள்ளல் நோக்கிப்
    பளகறு தவத்தீர் வேட்கை யாது எனப் பணிந்து சொல்வார்.
    1178 அடியரே உய்யும் ஆறு உலகு எலாம் அளிக்கும் ஆறும்
    படியிலா வரத்த வேதப் பயன் அருள் செய்தி என்னக்
    கொடிய மா பாசம் தீர்ப்பான் குரவன் நம் முனிவரோடு
    முடிவுஇலா இலிங்கம் முன்போய் மறைப் பொருள் மொழிவது ஆனான்.
    1179 அந்தணிர் கேண்மின் சால அருமறைப் பொருள்கள் எல்லாம்
    மந்தணம் ஆகும் இந்த மறைப் பொருள் அறிதல் தானே
    நந்தல் இல்லாத போகப் பயனுக்கு நலியும் பாச
    பந்தனை கழிக்கும் வீட்டின் பயனுக்கும் கருவி ஆகும்.
    1180 உத்தம சயம்புக்கு உள்ளும் உத்தம தரமாய் மேலாம்
    தத்துவம் ஆகும் இந்த சுந்தர சயம்பு லிங்கம்
    நித்தம் ஆய் மறைகட்கு எல்லாம் நிதானம் ஆம் பொருளாய் உண்மைச்
    சுத்த அத்து விதம் ஆன சுயம் பிரகாசம் ஆகும்.
    1181 நிறை பாரற் பரம் விஞ்ஞான நிராமயம் என்று நூல்கள்
    அறை பரம் பிரமம் ஆகும் இதன் உரு ஆகும் ஏக
    மறை இதன் பொருளே இந்தச் சுந்தர வடிவாய் இங்ஙன்
    உறைசிவ லிங்கம் ஒன்றெ என்பர் நூல் உணர்ந்த நல்லோர்.
    1182 ஆகையால் மறையும் ஒன்றே அருமறைப் பெருளும் ஒன்றே
    சாகையால் அந்தம் ஆகித் தழைத்த அச் சாகை எல்லாம்
    ஓகையால் இவனை ஏத்தும் உலகு தாயாதிக்கு ஈந்த
    ஏகன் ஆணையின் ஆன் மூன்று மூர்த்தியாய் இருந்தான் அன்றே.
    1183 மலர் மகனாகி மூன்று வையமும் படைத்து மாலாய்
    அலைவற நிறுத்தி முக்கண் ஆதியாய் ஆழித்தம் மூவர்
    தலைவனாய் பரமாகாச சரீரியாய் முதல் ஈறு இன்றித்
    தொலை வரும் சோதி ஆம் இச் சுந்தர இலிங்கம் தன்னில்.
    1184 ஆதி இலான் மதத்துவம் ஆன அலர் மகன் பாகமும் நடுவில்
    நீதியில் விச்சா தத்துவம் ஆன நெடியவன் பாகமும் முடிவில்
    ஓதிய சிவத் தத்துவம் எனலாம் ஆன உருத்திர பாகமும் உதிக்கும்
    பேதி இம் முன்றில் எண்ணில் தத்துவங்கள் பிறக்கும் இம் மூன்றினும் முறையால்.
    1185 ஓத அரும் அகார உகாரமே மகாரம் உதித்திடும் பிரணவம் விந்து
    நாதமோடு உதிக்கும் வியத்த தாரகத்தின் அல்ல காயத்திரி மூன்று
    பேதம் ஆம் பதத்தால் பிறக்கும் இக் காயத்திரி இருபேதம் ஆம் பேதம்
    யாது எனில் சமட்டி வியட்டி என்று இரண்டும் ஏது ஆம் வேட்டவை எல்லாம்.
    1186 இன்னவை இரண்டும் இவன் அருள் வலியால் ஈன்ற நான் மறையை அந் நான்கும்
    பின்னவன் அருளால் அளவு இல ஆன பிரணவம் ஆதி மந்திரமும்
    அன்னவாறு ஆன தாரகத் தகாரம் ஆதி அக்கரங்களும் உதித்த
    சொன்ன அக் கரத்தில் சிவாகம நூல் இச் சுரவன் நடுமுகத்தில் உதித்த.
    1187 கீட்டிசை முகத்து ஒன்று அடுத்த நால் ஐந்தில் கிளைத்தது ஆல் இருக்க அது தென்பால்
    ஈட்டிய இரண்டாம் வேத நூறு உருவோடு எழுந்தது வடதிசை முகத்தில்
    நீட்டிய சாமம் ஆயிரம் முகத்தான் நிமிர்ந்தது குடதிசை முகத்தில்
    நாட்டிய ஒன்பது உருவொடு கிளைத்து நடந்தது நான்கு அதாம் மறையே.
    1188 அருமறை நால் வேறு ஆகையால் வருண ஆச்சிரமங்களும் நான்காம்
    தருமம் ஆகதி கருமமும் மறையின் தோன்றின மறையும்
    கரும நூல் ஞான நூல் என இரண்டாம் கரும நூல் இவன் அருச்சனைக்கு
    வரும் வினை உணர்த்து ஞான நூல் இவன் தன் வடிவு இலா வடிவினை உணர்த்தும்.
    1189 முதல் நுகர் நீரால் சினை குழைத் தாங்கி இம் முழு முதல் கருத்து நல் அவியின்
    பதம் இவன் வடிவப் பண்ணவர் பிறர்க்கும் திருத்தி யாம் பரன் இவன் முகத்தின்
    விதம்உறு நித்தம் ஆதி மூவினைக்கும் வேண்டி ஆங்கு உலகவர் போகம்
    கதி பெற இயற்றும் சிவார்ச்சனை வினைக்கும் காரணம் இச் சிவ கோசம்.
    1190 மறைபல முகம் கொண்ட அறிவாய் இளைத்து மயங்க வேறு அகண்ட பூரணமாய்
    நிறை பரம் பிரமம் ஆகும் இக் குறியைக் கரும நன்னெறி வழாப் பூசை
    முறையினும் ஞான நெறி இனிப் பொருளை அருளினான் முயக்குஅற முயங்கும்
    அறி வினும் தௌ¤வது உமக்கு நாம் உரைத்த அருமறைப் பொருள் பிறர்க்கு அரிது ஆல்.
    1191 கருமத்தான் ஞானம் உண்டாம் கருமத்தைச் சித்த சுத்தி
    தருமத்தால் இகந்த சித்த சுத்தியைத் தருமம் நல்கும்
    அருமைத்து ஆம் தருமத்தாலே சாந்தி உண்டகும் ஆண்ட
    பெருமைத்து ஆம் சாந்தியாலே பிறப்பது அட்டாங்க யோகம்.
    1192 கிரியையான் ஞானம் தன்னால் கிளர் சிவ பத்தி பூசை
    தரிசனம் சைவ லிங்க தாபனம் செய்தல் ஈசற்கு
    உரிய மெய் அன்பர் பூசை உருத்திர சின்னம் தாங்கல்
    அரிய தேசிகன் பால் பத்தி அனைத்தையும் தெரியல் ஆகும்.
    1193 மறைவழி மதங்கட்கு எல்லாம் மறை பிரமாணம் பின்சென்ற
    அறைதரு மிருதி எல்லாம் அவைக்கனு குணம் ஆம் இன்ன
    முறையின் ஆன் மார்த்தம் என்று மொழிவ தம்மார்த்தம் சேர்ந்த
    துறைகள் வைதிகம் ஆம் ஏலாச் சொல்வது இச் சுத்த மார்க்கம்.
    1194 தெருள் பெறு போகம் வீடு காரணமாய் சிவமயம் ஆம் மறைப் பொருளை
    இருள்கெட உரைத்தேம் இப் பொருட்கு அதிகம் இல்லை இப் பொருள் எலாம் உமக்கு
    மருள் கெடத் தெளிவதாக என வினைய வழி வழா மாதவர் புறத்தை
    அருள் கையால் தடவி இலிங்கத்துள் புகுந்தான் அருள் பழுத்தன்ன தேசிகனே.

    வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த படலம் சுபம்
    --------------------


    1.17. மாணிக்கம் விற்ற படலம் (1195 - 1287)

    1195 சுகந்த வார் பொழில் மதுரை எம் பிரான் தனது துணைத்தாள்
    உகந்த வாவறு கண்ணுவ முனி முதல் ஓதும்
    அகந்த வாத பேர் அன்பருக்கு அருமறைப் பொருளைப்
    பகர்ந்த வாறு இது மாணிக்கம் பகர்ந்த வா பகர்வாம்.
    1196 அன்ன நாள் வயின் வீரபாண்டியற்கு அணங்கு அனைய
    மின் அனார் உளைம் போகமும் விளைநிலம் அனைய
    பொன் அனார் பெறு காளையர் ஐங்கணைப் புத்தேள்
    என்ன வீறினார் வான் பயிர்க்கு எழுகளை என்ன.
    1197 பின்னரும் பெறல் குமரனைப் பெறுவது கருதி
    மன்னனும் குலத்தேவியும் கயல் கணி மணாளன்
    தன்னை நோக்கி அட்டமி சதுர்த்தசி மதிவாரம்
    இன்ன நோன்பு நோற்று ஒழுகுவார் இறை வனின் அருளால்.
    1198 சிறிது நாள் கழிந்து அகன்ற பின் கங்கையில் சிறந்த
    மறுவிலா வடமீன் புரை கற்பினாள் வயிற்றில்
    குறிய ஆல வித்து அங்குரம் போன்று ஒரு குமரன்
    நிறையும் நீர் உலகு உருட்டு குடை நிழற்ற வந்து உதித்தான்.
    1199 அத்தன் இச்சிறு குமரனுக்கு அகம் களி சிறப்ப
    மெய்த்த நூல் முறை சாதக வினை முதல் வினையும்
    வைத்த நான் பொலிவுஎய்து நாள் மன்னவன் ஊழ் வந்து
    ஒத்த நாள் வர வேட்டைபுக்கு உழுவை கோள் பட்டாள்.
    1200 வேங்கை வயப்பட்டு மீனவன் விண் விருந்து ஆக
    வாங்குநூல் மருங்கு இறக்கரம் மார்பு எறிந்து ஆரம்
    தாங்கு கொங்கை சாந்து அழிந்திட தடம் கண் முத்து இறைப்ப
    ஏங்க மாதர் பொன் நகர் உளார் யாவரும் இரங்க.
    1201 மற்ற வேலைக் காமக் கிழத்தியர் பெறு மைந்தர்
    அற்றம் நோக்கி ஈது அமயம் என்று ஆனை மா ஆதி
    உற்ற பல் பிற பொருள் நிதி ஒண் கலனோடும்
    கொற்ற மோலியும் கவர்ந்தனர் கொண்டு போய் மறைந்தார்.
    1202 மன்னன் ஆணை ஆறு ஒழுகிய மந்திரக் கிழவர்
    மின்னு வேல் இளம் குமரனைக் கொண்டு விண் அடைந்த
    தென்னர் கோமகற்கு இறுதியில் செய்வினை நிரப்பி
    அன்ன காதலற்கு அணி முடி சூட்டுவான் அமைந்தார்.
    1203 நாடிப் பொன் அறை திறந்தனர் நவமணி மகுடம்
    தேடிக் கண்டிலர் நிதி சில கண்டிலர் திகைத்து
    வாடிச் சிந்தை நோய் உழந்து இது மாற்றலர் கூட்டு உண்டு
    ஓடிப் போயினது ஆகும் என்று உணர்ந்து இது நினைவார்.
    1204 வேறு மா முடி செய்தும் ஆல் என்னினோ விலை மிக்கு
    ஏறுமா மணி இலை அரசு இருக்கையின்றி இன்றேல்
    ஏறு நீர் உல கலையும் என் செய்தது இங்கு என்னா
    ஆறு சேர் சடையார் அருள் காண்டும் என்று அமைச்சர்.
    1205 கரை செயாப் பெரும் கவலை சூழ் மனத்தராய்க் கறங்கும்
    முரசு கண் படாக் கடிமனை முற்ற நீத்து அருமை
    அரசு இளம் தனிக் கொழுந்தினைக் கொண்டு போய் அம்பொன்
    வரை செய் கோபுர வாயின் முன் வருகுவார் வருமுன்.
    1206 எற்ற தும்பு கோவண உடை இடம்படக் பிறங்கத்து
    உற்ற பல் கதிர் மணிப் பொதி சுவன் மிசைத் தூங்க
    மல் தடம் புய வரை மிசை வரம்பு இலா விலைகள்
    பெற்ற வங்க தம் பரிதியில் பேர்ந்து பேர்ந்து இமைப்ப
    1207 மந்திரப் புரி நூலது வலம்படப் பிறழ
    இந்திரத் திரு வில் என ஆரம் மார்பு இலங்கச்
    சுந்தரக்குழை குண்டலம் தோள் புரண்டு ஆடத்
    தந்திரம் தரு மறை கழி தாள் நிலம் தோய.
    1208 பொன் அவிர்ந்து இலங்கு கோபுரம் முன் போதுவார்
    முன்னவர் துனிவு கூர் முன்ன நீக்கிய
    தென்னவர் குலப் பெரும் தெய்வம் ஆகிய
    மன்னவர் வணிகராய் வந்து தோன்றினார்.
    1209 வந்தவர் எதிர்வருவாரை மம்மர் கொள்
    சிந்தையர் ஆய் வரு செய்தி யாது என
    முந்தை இல் விளைவு எலாம் முறையில் கூறினார்க்கு
    எந்தை ஆம் வணிகர் ஈது இயம்புவார் அரோ.
    1210 என் படர் எய்து கின்றீர்கள் என் வயின்
    ஒன்பது மணிகளும் உள்ள ஆல் அவை
    பொன் பதினாயிரம் கோடி போன என்று
    அன்புற மணி எலாம் அடைவில் காட்டுவார்.
    1211 இருந்தனர் கீழ்த்திசை நோக்கி இட்டது ஓர்
    கரும் துகின் நடுவும் இந்திராதி காவலர்
    அரும் திசை எட்டினும் அடைவு இல் செம்மணி
    பெரும் தண் முத்து ஆதி எண் மணியும் பெய்தரோ.
    1212 இம் மணி வலன் உடல் சின்னம் என்ன அக்
    கைம் மறி கரந்தவர் கூறக் கற்றநூல்
    செம் மதி அமைச்சர் அச் செம்மல் யார் அவன்
    மெய்ம் மணி ஆயது என் விளம்புக என்னவே.
    1213 மேவரும் வலன் எனும் அவுணன் மேலை நாள்
    மூவரின் விளங்கிய முக்கண் மூர்த்தி செம்
    சேவடி அருச்சனைத் தவத்தின் செய்தி ஆல்
    ஆவது வேண்டும் என்று இறைவன் கூறலும்.
    1214 தாழ்ந்து நின்று இயம்பும் யான் சமரில் யாரினும்
    போழ்ந்து இறவா வரம் புரிதி ஊழ்வினை
    சூழ்ந்து இறந்தால் என் மெய் துறந்த மாந்தரும்
    வீழ்ந்திட நவமணி ஆதல் வேண்டும் ஆல்.
    1215 என்று வேண்டலும் வரம் ஈசன் நல்கினான்
    அன்று போய் அமர் குறித்து அமரர் கோனொடு
    சென்று போர் ஆற்றலும் தேவர் கோன் எதிர்
    நின்று போர் ஆற்றலன் நீங்கிப் போயினான்.
    1216 தோற்று வான் நாடவன் மீண்டு சூழ்ந்து அமர்
    ஆற்றினும் வெல்லரி அழிவு இலா வரம்
    ஏற்றவன் ஆதலால் இவனைச் சூழ்ச்சியால்
    கூற்றின் ஊர் ஏற்றுதல் குறிப்பு என்று உன்னியே.
    1217 விடம் கலுழ் படைக்கலன் இன்றி விண்ணவர்
    அடங்கலும் தழீஇக் கொள அடுத்துத் தானவ
    மடங்கலை வருக என நோக்கி வானவக்
    கடம் கலுழ் யானை போல் கரைந்து கூறுவான்.
    1218 விசைய நின் தோள் வலி வென்றி வீக்கம் எத்
    திசையினும் பரந்த அச்சீர்த்தி நோக்கி உண்
    நசை அறா மகிழ்ச்சியால் நல்குவேன் உனக்கு
    இசைய வேண்டிய வரம் யாது கேள் என.
    1219 கடிபடு கற்பக நாடு காவலோன்
    நொடி உரை செவித்துளை நுழைத் தானவன்
    நெடிய கை புடைத்து உடன் நிமிர்ந்து கார்படும்
    இடி என நகைத்து இகழ்ந்து இனைய கூறுவான்.
    1220 நன்று இது மொழிந்தார் யாரும் நகைக்க நீ எனை வெம் கண்ட
    வென்றியும் அதனால் பெற்ற புகழும் நின் வீறு பாடும்
    இன்று நின் போரில் காணப்பட்ட வேய் இசை போய் எங்கும்
    நின்றதே இது போல் நின்கை வண்மையும் நிற்பது அன்றோ.
    1221 ஈறு இலான் அளித்த நல்ல வரம் எனக்கு இருக்க நின்பால்
    வேறு நான் பெறுவது உண்டோ வேண்டுவது உனக்குயாது என்பால்
    கூறு நீ அதனை இன்னே கொடுக்கலேன் ஆகி நின் போல்
    பாறு வீழ் கனத்தில் தோற்ற பழிப்புகழ் பெறுவன் என்றான்.
    1222 மாதண்ட அவுணன் மாற்றம் மகபதி கேட்டு வந்து
    கோதண்ட மேருக் கோட்டிக் கொடும் புரம் பொடித்தான் வெள்ளி
    வேதண்டம் எய்தி ஆங்கு ஓர் வேள்வி யான் புரிவன் நீ அப்போது
    அண்டர்க் கூட்ட வா வாய்ப் போது வாய் வல்லை என்றான்.
    1223 அன்று ஒரு தவத்தோன் என்பு வச்சிரம் ஒன்றெ ஆக
    ஒன்றிய கொடையால் பெற்ற புகழ் உடம்பு ஒன்றெ என்போல்
    வென்றியினாலும் ஈயா மெய் எலாம் மணிகள் ஆகப்
    பொன்றிய கொடையினாலும் புகழ் உடம்பு இரண்டு உண்டாமே.
    1224 மேலவன் அல்லை நீயே நட்டவன் மேலை வானோர்
    யாவரும் அருந்தும் ஆற்றால் அறம் புகழ் எனக்கே ஆக
    ஆ உரு ஆதி என்றாய் அன்னதே செய்வேன் என்றான்
    ஈவதே பெருமை அன்றி இரக்கின்றது இழிபே அன்றோ.
    1225 அதற்கு இசைந்து அவுணர் வேந்தன் அமரர் வேந்து அதனை முன்போக்கி
    மதர்க் கடும் குருதிச் செம்கண் மைந்தனுக்கு இறைமை ஈந்து
    முதல் பெரும் கலை ஆம் வேத மொழி மரபு அமைந்த வானாய்ப்
    புதர்க்கடு வேள்விச் சாலை புறத்து வந்து இறுத்து நின்றான்.
    1226 வாய்மையான் மாண்ட நின்போல் வள்ளல் யார் என்று தேவர்
    கோமகன் வியந்து கூறத் தருக்கு மேல் கொண்டு மேரு
    நேமியோடு இகலும் இந்த வரை என நிமிர்ந்து வேள்விக்கு
    ஆம் எனை யூபத்தோடும் யாம் இன்று எடுத்து நின்றான்.
    1227 யாத்தனர் தருப்பைத் தாம்பால் ஊர்ணையால் யாத்த சிங்கப்
    போத்து என நின்றான் வாயைப் புதைத்து உயிர்ப்பு அடங்க வீட்டி
    மாய்த்தனர் மாய்ந்த வள்ளல் வலனும் மந்தார மாரி
    தூர்த்திட விமானம் ஏறித் தொல் விதி உலகம் சேர்ந்தான்.
    1228 மணித்தலை மலையின் பக்கம் மாய்த்தவன் வயிர வேலால்
    பிணித்து உயிர் செகுத்த வள்ளல் பெரும் தகை ஆவாய் வேதம்
    பணித்திடும் வபையை வாங்கிப் படர் எரி சுவை முன் பார்க்கக்
    குணித்த வான் நாடார் கூட்டிக் கோது இலா வேள்வி செய்தான்
    1229 அத்தகை ஆவின் சோரி மாணிக்கம் ஆம் பல் முத்தம்
    பித்தை வைடூயம் என்பு வச்சிரம் பித்தம் பச்சை
    நெய்த்த வெண் நிணம் கோமேதந் தசை துகிர் நெடும் கண் நீலம்
    எய்த்தவை புருடராகம் இவை நவ மணியின் தோற்றம்.
    1230 இவ் வடிவு எடுத்துத் தோன்றி இருள் முகம் பிளப்பக் காந்தி
    தைவரு மணி ஒன்பானும் சார்விட நிறங்கள் சாதி
    தெய்வத ஒளி மாசு எண்ணி சோதனை செய்து தேசும்
    மெய்வர அணிவோர் எய்தும் பயன் இவை விதியால் கேண்மின்.
    1231 வாள் அவர் மாணிக்கம் கிரேத உகம் நான்கும் வழியே மக்கம்
    காளபுரம் தும்புரம் சிங்களம் இந் நான்கு இடைப் படும் அக்கமல ராகம்
    ஆளுநிற ஒன்பது அரவிந்த மாதுளம் பூ இத் தழல் கல் ஆரம்
    கோள் அரிய அச் சோத நரந்த நறும் பலம் தீபம் கோபம் என்ன.
    1232 இந்நிறத்த பொது வாய மாணிக்கம் மறையவர் முன்னிய நால் சாதி
    தன் இயல்பால் சாதரங்கம் குருவிந்தம் சௌகந்தி கங்கோ வாங்கம்
    என்னும் இவற்றால் சிறந்து நான்கு ஆகும் இவ் அடைவே இந் நான்கிற்கும்
    சொன்ன ஒளி பத்து இரு நான்கு இரு முன்று நான்கு அவையும் சொல்லக் கேண்மின்
    1233 சாதரங்க நிறம் கமலம் கரு நெய்தல் இரவி ஒளி தழல் அச் சோதம்
    மாதுளம் போது அதன் வித்துக் கார் விளக்குக் கோபம் என வகுத்த பத்தும்
    மேதகைய குருவிந்த நிறம் குன்றி முயல் குருதி வெள்ளம் ஓத்தம்
    போது பலா சலர் திலகம் செவ் அரத்தம் விதார மெரி பொன் போல் எட்டு.
    1234 களி தரு சௌகந்திகத்தின் இற இலவம் போது குயில் கண் அசோகம்
    தளிர் அவிர் பொன் செம்பஞ்சியை வண்ணம் என ஆறு தகுதோ வாங்க
    ஒளி குரவு குசும்பை மலர் செங்கல் கொவ்வைக் கனி என ஒருநான்கு அந்த
    மிளிர் பதும ராகத்தைப் பொதுமையினால் சோதிக்க வேண்டும் எல்லை.
    1235 திண்ணிய தாய் மேல் கீழ் சூழ் பக்கம் உற ஒளிவிடுதல் செய்தால் செவ்வே
    அண்ணிய உத்தமம் முதல் மூன்று ஆம் என்பர் சாதரங்கம் அணிவோர் விச்சை
    புண்ணியவான் கன்னி அறுசுவை அன்ன முதலான புனித தானம்
    பண்ணியதும் பரிமேத யாகம் முதல் மகம் புரிந்த பயனும் சேர்வர்.
    1236 குருவிந்தம் தரிப்பவர் பார் முழுதும் ஒரு குடை நிழலில் குளிப்ப ஆண்டு
    திருவிந்தை உடன் இருப்பர் சௌகந்திகம் தரிப்போர் செல்வம் கீர்த்தி
    மருவிந்தப் பயன் அடைவர் கோவங்கம் தரிப்போர் தம் மனையில் பாலும்
    பெரு விந்தம் எனச் சாலி முதல் பண்டம் உடன் செல்வப் பெருக்கும் உண்டாம்.
    1237 எள்ளி இடும் குற்றம் எலாம் இகந்து குணன் ஏற்று ஒளிவிட்டு இருள் கால் சீத்துத்
    தள்ளிய இச் செம்பது மராகம் அது புனை தக்கோர் தம்பால் ஏனைத்
    தௌ¢ளிய முத்து உள்ளிட்ட பன் மணியும் வந்து ஓங்கும் செய்யா ளோடும்
    ஒள்ளிய நல் செல்வம் அதற்கு ஒப்ப நெடு பால் கடலின் ஓங்கும் மாலோ.
    1238 பிற நிறச் சார்பு உள்ளி புள்ளடி பிறங்கு கீற்று
    மறு அறு தராசம் என்ன வகுத்த ஐம் குற்றம் தள்ளி
    அறை தரு பண்பு சான்ற அரதன மணியும் வேந்தன்
    செறுநர் வாள் ஊற்றம் இன்றிச் செரு மகட்கு அன்பன் ஆவான்.
    1239 குறுநிலக் கிழவனேனும் அவன் பெரும் குடைக்கீழ்த் தங்கி
    மறுகுநீர் ஞாலம் எல்லாம் வாழும் மற்று அவனைப் பாம்பு
    தெறு விலங்கு அலகை பூதம் சிறு தெய்வம் வறுமை நோய் தீக்
    கருவு கொள் கூற்றச் சீற்றம் கலங்கிட ஆதி ஆவாம்.
    1240 முன்னவர் என்ப கற்றோர் வச்சிர முந்நீர் முத்தம்
    மன்னவர் என்ப துப்பு மாணிக்கம் வணிகர் என்ப
    மின் அவிர் புருடராகம் வயிடூரியம் வெயில் கோ மேதம்
    பின்னவர் என்ப நீல மரகதம் பெற்ற சாதி.
    1241 பார்த்திபர் மதிக்கும் முத்தம் பளிங்கு அன்றி பச்சை தானும்
    சாத்திகம் துகிர் மாணிக்கம் கோமேதம் தாமே அன்றி
    மாத் திகழ் புருடராகம் வயிடூயம் வயிரம் தாமும்
    ஏத்திரா சதமா நீலம் தாமதம் என்பர் ஆய்ந்தோர்.
    1242 1242
    இனையவை அளந்து கண்டு மதிக்கும் நாள் எழு மான் பொன்தேர்
    முனைவ நாள் முதல் ஏழின் முறையினால் பதுமராகம்
    கனை கதிர் முத்தம் துப்புக் காருடம் புருடராகம்
    புனை ஒளி வயிரம் நீலம் என் மனார் புலமை சான்றோர்.
    1243 வெய்யவன் கிழமை தானே மேதக மணிக்கும் ஆகும்
    மையறு திங்கள் தானே வயிடூரிய மணிக்கும் ஆகும்
    ஐயற இவை ஒன்பானும் ஆய்பவர் அகம் புறம்பு
    துய்யராய் அறவோராய் முன் சொன்ன நாள் அடைவே ஆய்வர்.
    1244 1244
    அல்லி அம் பதுமம் சாதி அரத்தவாய் ஆம்பல் கோடல்
    வல்லி சேர் மௌவல் போது நூற்று இதழ் மரை கால் ஏயம்
    மெல் இதழ்க் கழுநீர் பேழ்வாய் வெள்ளை மந்தாரம் இன்ன
    சொல்லிய முறையால் வண்டு சூழத்தன் முடிமேல் சூடி.
    1245 தலத்தினைச் சுத்தி செய்து தவிசினை இட்டுத் தூய
    நலத்துகில் விரித்துத் தெய்வ மாணிக்கம் நடுவே வைத்துக்
    குலத்த முத்து ஆதி எட்டும் குணதிசை முதல் எண் திக்கும்
    வலப்பட முறையே பானு மண்டலம் ஆக வைத்து.
    1246 அன்பு உறு பதுமராகம் ஆதி ஆம் அரதனங்கள்
    ஒன்பதும் கதிரோன் ஆதி ஒன்பது கோளும் ஏற்றி
    முன்புரை கமலப் போது முதல் ஒன்பான் மலரும் சாத்தி
    இன்புற நினைந்து பூசை இயல் முறை வழாது செய்தல்.
    1247 தக்க முத்து இரண்டு வேறு தலசமே சலசம் என்ன
    இக் கதிர் முத்தம் தோன்றும் இடம் பதின் மூன்று சங்கம்
    மைக் கரு முகில் வேய் பாம்பின் மத்தகம் பன்றிக்கோடு
    மிக்க வெண் சாலி இப்பி மீன் தலை வேழக் கன்னல்.
    1248 கரி மருப்பு பைவாய் மான்கை கற்பு உடை மடவார கண்டம்
    இரு சிறைக் கொக்கின் கண்டம் எனக் கடை கிடந்த மூன்றும்
    அரியன ஆதிப்பத்து நிறங்களும் அணங்கும் தங்கட்கு
    உரியன நிறுத்தவாறே ஏனவும் உரைப்பக் கேண்மின்.
    1249 மாட வெண் புறவின் முட்டை வடிவு எனத் திரண்ட பேழ் வாய்
    கோடு கான் முத்தம் வெள்ளை நிறத்தன கொண்மூ முத்தம்
    நீடு செம் பரிதி அன்ன நிறத்தது கிளை முத்து ஆலிப்
    பீடு சால் நிறத்த அராவின் பெரு முத்தம் நீலத்து ஆம் ஆல்.
    1250 ஏனமா வாரம் சோரி ஈர்ஞ் சுவை சாலி முத்தம்
    ஆனது பசுமைத்து ஆகும் பாதிரி அனையது ஆகும்
    மீனது தரளம் வேழம் இரண்டினும் விளையும் முத்தம்
    தான் அது பொன்னின் சோதி தெய்வதம் சாற்றக் கேண்மின்.
    1251 பால் முத்தம் வருணன் முத்தம் பகன் முத்தம் பகலோன் முத்தம்
    மான் முத்தம் நீல முத்தம் மாசு அறுகுருதி முத்தம்
    கான் முத்தம் பசிய முத்தம் காலன்தன் முத்தம் தேவர்
    கோன் முத்தம் பொன் போல் முத்தம் குணங்களும் பயனும் சொல்வாம்.
    1252 உடுத்திரள் அனைய காட்சி உருட்சி மாசு இன்மை கையால்
    எடுத்திடில் திண்மை பார்வைக்கு இன்புறல் புடிதம் என்ன
    அடுத்திடு குணம் ஆறு இன்ன அணியின் மூது அணங்கோடு இன்மை
    விடுத்திடும் திருவந்து எய்தும் விளைந்திடும் செல்வம் வாழ்நாள்.
    1253 மாசு அறு தவத்தோன் என்பும் வலாசுரன் என்பும் வீழ்ந்த
    கோசலம் ஆதி நாட்டில் பட்டது குணத்தான் மாண்ட
    தேசதாய் இலேசது ஆகித் தௌ¢ளிதாய் அளக்கின் எல்லை
    வீசிய விலையது ஆகி மேம்படு வயிரம் தன்னை.
    1254 குறுநிலத்து அரசும் தாங்கில் குறைவுதிர் செல்வம் எய்தி
    உறுபகை எறிந்து தம் கோன் முழுது உலகு ஓச்சிக் காக்கும்
    வருமை நோய் விலங்கு சாரா வரைந்த நாள் அன்றிச் செல்லும்
    கறுவு கொள் குற்றம் பூதம் கணங்களும் அணங்கும் செய்யா.
    1255 மா மணி மரபுக்கு எல்லாம் வயிரமே முதன்மைச் சாதி
    ஆம் என உரைப்பர் நூலோர் அதிகம் யாது என்னின் ஏனைக்
    காமரு மணிகட்கு எல்லாம் தமர் இடு கருவி ஆம் அத்
    தூமணி தனக்குத் தானே துளை இடும் கருவி ஆகும்.
    1256 மரகதத் தோற்றம் கேண்மின் வலாசுரன் பித்தம் தன்னை
    இரை தமக்கு ஆகக் கௌவிப் பறந்தபுள் ஈர்ந்த தண் டில்லித்
    தரை தனில் சிதற வீழ்ந்த தங்கிய தோற்றம் ஆகும்
    உரைதரு தோற்றம் இன்னும் வேறு வேறு உள்ள கேண்மின்.
    1257 விதித்த வேல் அனைய வாள்கண் வினதை மாது அருணச் செல்வன்
    உதித்தவான் முட்டை ஓட்டை உவண வேல் தரையில் யாப்பக்
    கதிர்த்தவோடு அரையில் தப்பி வீழ்ந்து ஒரு கடல் சூழ் வைப்பில்
    உதித்தவாறு ஆகும் இன்னும் உண்டு ஒரு வகையால் தோற்றம்.
    1258 முள்ளரை முளரிக் கண்ணன் மோகினி அணங்காய் ஓட
    வள்ளரை மதியம் சூடி மந்தர வரை மட்டாகத்
    துள் இள அரி ஏறு போலத் தொடர்ந்து ஒரு விளையாட்டாலே
    எள் அரிதாய செந்தி இந்தியக் கலனம் செய்தன்.
    1259 அப் பொழுது அமலன் வித்தில் அரிகரகுமரன் கான
    வைப்புரை தெய்வத் தோடும் வந்தனன் அந்த விந்து
    துப்புரு கருடன் கௌவிக் கடலினும் துருக்க நாட்டும்
    பப்புற விடுத்தவாறே பட்டது கலுழப் பச்சை.
    1260 காடமே சுப்பிரமே காளம் எனக் குணம் மூன்றாம் கருடப் பச்சைக்
    கீட அறுகின் இதழ் நிறத்த காடம் அது சாதியினால் இரு வேறு ஆகும்
    சாடரிய சகுணம் எனச் சதோடம் என அவை இரண்டில் சகுணம் ஆறாம்
    பீடுபெறு காடமொடு முல்ல சிதம் பேசல் அம்பித் தகமே முத்தம்.
    1261 புல்லரிய பிதுகம் என இவை ஆறில் காடமது புல்லின் வண்ணம்
    உல்லசித மெலிதாகும் பேசலமே குளச் செந்நெல் ஒண்தரளம் போலும்
    அல் அடரும் பித்தகாம பசுங்கிளியின் சிறை நிறத்தது ஆகும் முத்தம்
    குல்லை நிறம் பிதுகம் மரை இலையின் நிறம் சதோடத்தின் குணன் ஐந்தாகும்.
    1262 தோடலே சாஞ்சிதமே துட்டமே தோட மூர்ச்சிதமே சிதமே வெய்ய
    தோடலே சத்தினொடு சூழ் மந்த தோடம் எனத் தொகுத்த ஐந்தில்
    தோடலே சாஞ்சி தஞ்சம் பிரவிலையா மலரி இலை துட்ட நீலத்
    தோடதாம் புல்லின் நிறம் தோட மூர்ச்சித முளரி தோடலேசம்.
    1263 மந்த தோடம் கலப மயில் இறகின் நிறமாம் இவ் வகுத்த தோடம்
    சிந்த வான் ஆதகுண மணி அணிவோர் நால் கருவிச் சேனைவாழ்நாள்
    உந்த வாழ் ஆர்வலன் கண் நீலம் இரண்டு அரன் கண்டத்து ஒளிவிட்டு ஓங்கும்
    இந்திர நீலம் தான் மா நீலம் என வேறு இரண்டு உண்டு இன் நீலம்.
    1264 முந்தியவிந்திர நீலம் விச்சுவ ரூபனை மகவான் முடித்த நாளின்
    நந்தி அடு பழி தவிர்ப்பான் புரியும் மகப் பரிமகத்தின் அறிய தூமம்
    உந்தி அரும் பரி இமையா நாட்ட நுழைந்து அளி சேற்றின் ஒழுகும் பீளை
    சிந்திய ஆற்றிடைப் படும் ஒன்றி இந்திர வில் நிலம் எனத் திகழும் நீலம்.
    1265 சஞ்சை ஆம் பகல் கடவுள் மனைவி அவள் கனல் உடலம் தழுவல் ஆற்றா
    அஞ்சுவாள் தன் நிழலைத் தன் உருவா நிறுவி வனம் அடைந்து நோற்க
    விஞ்சையால் அறிந்து இரவி பின்தொடர மாப் பரியா மின்னைத் தானும்
    செஞ்செவே வயப்பரியாய் மையல் பொறாது இந்தியத்தைச் சிந்தினானே.
    1266 அவை சிதறும் புலம்தோன்று நீலமா நீலம் இவை அணிவோர் வானோர்
    நவை அறு சீர் மானவர் இந் நகை நீலம் சாதியில் நால் வேறு அந்தக்
    கவல் அரிய வெள்ளை சிவப்பு எரி பொன்மை கலந்து இருக்கில் அரிதாய் முற்றும்
    தவலரிதாய் இருக்கில் இரு பிறப்பாளர் முதல் முதல் நால் சாதிக்கு ஆகும்.
    1267 இலங்கு ஒளிய இந் நீலம் மெய்ப் படுப்போர் மங்கலம் சேர்ந்து இருப்பர் ஏனை
    அலங்கு கதிர் நீலத்தில் பெருவிலை ஆயிரப் பத்தின் அளவைத்து ஆகித்
    துலங்குவதான் பால் கடத்தின் நூறு குணச்சிறப்பு அடைந்து தோற்றும் சோதி
    கலங்கு கடல் உடைவைப்பில் அரிது இந்த இந்திரன் பேர்க் கரிய நீலம்.
    1268 மைந்துறு செம் மணி முத்து வாள் வயிரம் பச்சை ஒளி வழங்கும் நீலம்
    ஐந்து இவை மேல் கோமேதக முதல் பவளம் ஈறாக வறைந்த நான்கும்
    நந்து ஒளிய வேனும் அவை சிறு வேட்கை பயப் பவழ நகு செம் குஞ்சி
    வெம் தறுகண் வலன் நிணங்கள் சிதறும் இடைப் படுவன கோ மேதம் என்ப.
    1269 உருக்கு நறு நெய்த் துளி தேன் துளி நல் ஆன் புண்ணிய நீர் ஒத்துச் சேந்து
    செருக்கு பசும் பொன் நிறமும் பெற்று மெலிதாய்த் தூய்தாய்த் திண்ணிதாகி
    இருக்கும் அது தரிக்கின் இருள் பாவம் போம் பரிசுத்தி எய்தும் வென்றித்
    தருக்கு வலன் கபம் விழுந்த விடைப் புருடராகம் ஒளி தழையத் தோன்றும்.
    1270 தாழ்ந்த பிலத்து இழிந்து எரிபொன் கண் அவுணன் உயிர் குடிக்கும் தறுகண் பன்றி
    போழ்ந்த முழை வாய் திறந்து திசை செவிடு பட நகைத்துப் பொன் போல் கக்கி
    வீழ்ந்த கபம் படுதவில் படும் உச்சி வட்டமாய் மெலிதாய்ப் பொன் போல்
    சூழ்ந்து ஒளி விட்டு அவிர் தழல் போல் தௌ¤வு எய்தி மனம் கவர்ந்து தோற்றம் செய்யும்.
    1271 இந்த மணி பாரியாத் திரகிரியில் கொடு முடியாய் இலங்கும் தெய்வ
    மந்தர மால் வரைப் புறம் சூழ் மேகலையாம் மயன் இந்த மணியினாலே
    அந்தர நாடவன் நகரும் அரசு இருப்பும் மண்டபமும் அமைத்தான் இந்தச்
    சந்த மணி தரிப்பவரே தரியார் வெந் நிட வாகை தரிக்க வல்லார்.
    1272 வலன் மயிராம் வயிடூரியம் இளாவிருத கண்டத்தில் வந்து தோன்றிப்
    பலர் புகழும் கோரக்க மகதம் சிங்களம் மலயம் பாரசீகம்
    இலகு திரி கூடாதி தேயங்கள் பிற தீபம் எங்கும் தோற்றும்
    அலை கடலும் படும் இறுதிக் கார் இடிக்கும் போது நிறம் அதற்குயாது என்னில்.
    1273 கழை இலை கார் மயில் எருத்தம் வெருகின் கண் நிறத்தது ஆய்க் கனத்தது ஆகி
    விழைவு தரு தௌ¤தாகித் திண்ணிதாய் மெலிதாகி விளங்கும் ஈதில்
    அழகு பெற வலம் இடம் மேல் கீழ் ஒளி விட்டன முறையோர் அறவோர் ஆதித்
    தழை உறு நால் சாதி களாம் தினம் இதனைப் பூசித்துத் தரிக்க சான்றோர்.
    1274 வலத்து அவுணன் தசை வீழ்ந்த வழிபடுதுப்பு அயன் சந்தி வடிவ மாத்து என்
    புலத்தவரை விதிக்கும் இடத்தவனுடன் மாசி இழிபுலத்தும் புயல் போல் வண்ணள்
    வலத்த மது கைடவரைக் குறை குருதி வழிநிலத்தும் மகவான் வெற்பின்
    குலத்தை இற கரி சோரி சிதறிடத்தும் வந்து குடி கொண்டு தோன்றும்.
    1275 அவ் வழியில் பகு பவள முருக்கம் பூ பசுங்கிளி மூங்கு அலர்ந்த செவ்வி
    செவ்வரத்த மலர் கொவ்வைக் கனி போலும் குணம்குற்றம் திருகிக் கோடல்
    எவ்வம் உறப் புழு அரித்தல் தன் முகம் ஒடிதல் பெரும் பாலும் இப் பூண் ஏந்தல்
    பெய் வளையார் தமக்கே ஆம் தரிக்கின் மகப்பேறு முதல் பேறு உண்டாகும்.
    1276 இரவி எதிர் எரி இறைக்கும் கல்லும் மதி எதிர் செழு நிர் இறைக்கும் கல்லும்
    உரை இடு ஒன்பதில் ஒன்றில் உள் கிடையாய்க் கிடக்கும் என ஒன்பான் வேறு
    மரபு உரைத்து வணிகர் ஏறு ஆகிய வானவர் ஏறு வடபால் நோக்கி
    பரவி இருந்து அருச்சித்து மணிக் கைக் கொண்டு எதிர் மதுரை பரனை நோக்கா.
    1277 அஞ்சலி செய்து அக நோக்கால் இக்கு மரற்கு அளவிறந்த ஆயுள் செல்வம்
    விஞ்சுக என்று அளித்து அருள் இறை மகனும் விண் இழிந்த விமானம் நோக்கிச்
    செம் சரணம் பணிந்து இருக்கைத் தாமரையும் விரித்து ஏற்றான் செல்வ நாய்கர்
    மஞ்சனையும் புடைநின்ற அமைச்சரையும் நோக்கி முகம் மலர்ந்து சொல்வார்.
    1278 இம் மணியால் இழைத்து நவ முடி சூட்டி இச் சிங்க இள ஏறு அன்ன
    செம் மறனை அபிடேக பாண்டியன் என்று இயம்பும் எனச் செம் பொன் தூக்கிக்
    கைம் மறியில் வணிகருக்கு விலை கொடுப்பான் வருவார் முன் கருணை நாட்டாம்
    அம் மகன் மேல் நிரப்பி இள நகை அரும்பி நின்றாரை அங்குக் காணார்.
    1279 ஓர் உருவாய் தேர் நின்ற வணி கேசர் விடையின் மேல் உமையா ளோடும்
    ஈர் உருவாய் முக்கண்ணும் நால்கரமும் அஞ்சாமல் இறவாவாறு
    கார் உருவாய் எழு மிடரும் காட்டித் தம் கோயில் புகக் கண்டார் இன்று
    பார் உருவாய் நின்ற அணி கேசவர் எனவே பின் பற்றிப் போவார்.
    1280 தேன் செய்த கொன்றை நெடும் சடையார் முன் தாழ்ந்து எழுந்து செம் கை கூப்பி
    யான் செய்யும் கைம் மாறாய் எம்பிராற்கு ஒன்று உண்டோ யானும் என்ன
    ஊன் செய் உடலும் பொருளும் உயிரும் எனின் அவையாவும் உனவே ஐயா
    வான் செய்யும் நன்றிக்கு வையகத்தோர் செய்யும் கைம்மாறு உண்டேயோ.
    1281 என்னா முன் வழுத்தல் உறும் விறன் மாறன் கோக கொழுந்தை இகல் வேல் விந்தை
    மன் ஆகும் இவற்கு மனம் வாக்கு இறந்த பூரணமாம் மதுரை நாதன்
    பொன்னாரு மணி மகுடம் சூட மணி நல்குதலால் புவியநேகம்
    பன்னாளும் முறை புரியத் தக்கது என வாழ்த்தினார் பல் சான் றோரும்.
    1282 ஏத்தி வலம் கொண்டு நான்கு இபம் தழுவப் பெற்று ஓங்கி இருக்கும் அட்ட
    மூர்த்தி விடை அருள் பெற்று மூவ நன் மலையாகி முனிவர் கூறப்
    பார்த்திவன் தன் பொலன் மாட மனைபுகுந்தான் இறை மணிப் பண் பயும் கேள்விச்
    சத்திரரும் மந்திரரும் மணி நோக்கி வியப்பு அடைந்தார் சங்கை கூர்ந்தார்.
    1283 வேள் என வந்த நாய்கர் சுந்தர விடங்கர் ஆனால்
    நாள்களும் கோளும் பற்றி நவமணி ஆக்கினாரோ
    தாள்களும் தோளும் மார்பும் தரித்த நீள் நாகம் ஈன்ற
    வாள் விடு மணியோ ஈந்தார் யாது என மதிக்கற் பாலேம்.
    1284 இந்திரக் கடவுள் நாட்கும் இம் மணி அரிய என்னா
    மந்திரக் கிழவர் நல்கி மயனினு மாண்ட கேள்வித்
    தந்திரக் கனகக் கொல்லர்க்கு உவப்பன ததும்ப வீசிச்
    செம் திரு மார்பினார்க்கு திருமணி மகுடம் செய்தார்.
    1285 மங்கல மரபன் மாலை மணி முடி சூட்டி நாமம்
    செம்கண் ஏறு உயர்த்த நாய்கர் செப்பிய முறையால் வேத
    புங்கவர் இசைப்ப வீதி வலம் செய்து புனிதன் பாத
    பங்கயம் இறைஞ்சி வேந்தன் பன் மணிக் கோயில் எய்தா.
    1286 1286
    போர் மகள் உறையுள் ஆன புயத்து அபிடேகத் தென்னன்
    தேர் முதல் கருவித் தானைத் தெவ்வர் நீள் முடி எலாம் தன்
    வார் கழல் கமலம் சூட மனு முறை பைம் கூழ் காக்கும்
    கார் எனக் கருணை பெய்து வையகம் காக்கும் நாளில்.
    1287 தந்தை தன் காமக் கிழத்தியர் ஈன்ற தனயராய் தனக்கு முன்னவராய்
    முந்தை நாள் அரசன் பொன்னறை முரித்து முடி முதல் பொருள் கவர்ந்து உட்கும்
    சிந்தையர் ஆகி மறு புலத்து ஒளித்த தெவ்வரைச் சிலர் கொடு விடுப்ப
    வந்தவர் கவர்ந்த தனம் எலாம் மீள வாங்கினார் ஈர்ங்கதிர் மருமான்.

    மாணிக்கம் விற்ற படலம் சுபம்
    -----------------------


    1. 18. வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் (1288 -1306)

    1288 காழ் கெழு கண்டத்து அண்ணல் கௌரியன் மகுடம் சூட
    வீழ்கதிர் மணிகள் ஈந்த வியப்பு இது விடையோன் சென்னி
    வாழ் கரு முகிலைப் போக்கி மதுரை மேல் வருணன் விட்ட
    ஆழ் கடல் வறப்பக் கண்ட ஆடலைப் பாடல் செய்வாம்.
    1289 சித்திரை மதியில் சேர்ந்த சித்திரை நாளில் தென்னன்
    மைத்திரள் மிடற்று வெள்ளி மன்று உளாற்கு களவு மாண்ட
    பத்திமை விதியில் பண்டம் பலபல சிறப்ப நல்கிப்
    புத்தியும் வீடு நல்கும் பூசனை நடத்தல் உற்றான்.
    1290 நறிய நெய் ஆதி ஆர நறும் குழம்பு ஈறா ஆட்டி
    வெறிய கர்ப்புர நீர் ஆட்டி அற்புத வெள்ளம் பொங்க
    இறைவனை வியந்து நோக்கி ஏத்துவான் எறிநீர் வைகை
    துறைவ நீ என் கர்ப்பூர சுந்தரனேயோ என்றான்.
    1291 பூசனை புரியும் எல்லைப் பொன் நகர்க்கு இறைமை பூண்ட
    வாசவன் வருடம் தோறும் பூசித்து வருவான் அன்ன
    காசறு மனத்தான் பூசை கழி உறும் அளவும் தாழத்துத்
    தேசு அமை சிறப்பார் பூசை செய்து தன் நாடு புக்கான்.
    1292 அன்று நீர்க் கடவுள் வேள்வி நாயகன் அவையத்து எய்தி
    நின்றவன் தன் நோய் தீரும் செவ்வியின் இகழ்ச்சி தோன்றக்
    குன்ற வன் சிறகு ஈர்ந்த கொற்றவன் முகத்தை நோக்கி
    இன்று நீ சிறிது தேம்பி இருத்தியால் என் கொல் என்றான்.
    1293 சிலைப்படு முகில் ஊர் அண்ணல் செப்புவான் இருள் தீர் அன்பின்
    வலைப்படு பெருமான் எம்மான் மதுரை எம் பிரானை அன்பு
    தலைப்படு பூசை செய்யத் தாழ்த்தது இன்று அதனால் இப்போது
    அலைப்பட சிறிது என் உள்ளம் ஆகுலம் அடைந்தது உண்டால்.
    1294 என்ன அவன் இலிங்கம் தான் மாஇலிங்கமோ என்று முந்நீர்
    மன்னவன் வினவலோடு மகபதி மொழிவான் முன்பு என்
    தன்னரும் பழியும் வேழச் சாபமும் தொலைத்தது அன்றோ
    அன்னதை அறிந்திலாய் கொல் என்ன நீர் அண்ணால் கூறும்.
    1295 அற்று அது ஆகில் தெய்வ மருத்துவராலும் தீரச்
    செற்றிட அரிதா என்னைத் தெறும் பெரு வயிற்று நோயை
    அற்றிடு மாறு தீர்க்கும் கொல் என வலாரி ஐயம்
    உற்று நீ வினாயது என் என்று உள் நகை அரும்பிச் சொல்வான்.
    1296 அரி அயரலும் தீராப் பிறவி நோய் அறுக்க வல்ல
    பெரியவன் இந்த யாக்கைப் பெரும் பிணி பிறவும தீர்த்தற்கு
    அரியனோ ஐயன் செய்யும் திருவிளையாட்டை இன்னே
    தெரிய நீ சோதி என்னத் தெண் கடல் சேர்ப்பன் சொல்வான
    1297 கல் இறகு அரிந்தோய் இங்கு நான் வரும் காலை வேட்டார்க்கு
    எல்லை இல் காம நல்கும் சுரபியும் இன்பால் சோரப்
    புல்லிய கன்று மாற்றுப் பட்ட அப்போது கண்ட
    நல்ல சோபனத்தால் இந்த நல் மொழி கேட்டேன் என்னா.
    1298 வருணனும் ஏகி வெள்ளி மன்று உடை அடிகள் செய்யும்
    திருவிளையாடல் கண்டு வயிற்று நோய் தீர்ப்பான் எண்ணி
    முரசு அதிர் மதுரை மூதூர் முற்றும் நீ அழித்தி என்னாக்
    குரை கடல் தன்னை வல்லே கூவினான் ஏவினானே
    1299 கொதித்து எழுந்து தருக்கள் இறக் கொத்தி எடுத்து எத்திசையும்
    அதிர்த்து எறிந்து வகைள் எல்லம் அகழ்ந்து திசைப் புறம் செல்லப்
    பிதிர்த்து எறிந்து மாட நிரை பெயர்த்து எறிந்து பிரளயத்தில்
    உதித்து எழுந்து வருவது என ஓங்கு திரைக் கடல் வரும் ஆல்.
    1300 கந்த மலர்த் தனிக் கடவுள் கற்பத்தும் அழியாத
    இந்தவளம் பதிக்கு இடையூறு எய்திய எம் பதிக்கும் இனி
    வந்தது எனச் சுந்தரனை வந்து இறைஞ்சி வானவரும்
    சிந்தை கலங் கினர் வருணன் செய்த செயல் தௌஞ்யாதார்.
    1301 சூலமோடு அழல் ஏந்தும் சொக்கர் திரு விளையாட்டின்
    சீலமோ நாம் இழைத்த தீ வினையின் திறம் இது வோ
    ஆலமோ உலகம் எலாம் அழிய வரும் பேர் ஊழிக்
    காலமோ எனக் கலங்கிக் கடி நகரம் பனிப்பு எய்த.
    1302 மண் புதைக்கத் திசை புதைக்க மயங்கி இருள் போல் வருநீத்தம்
    விண் புதைக்க எழு மாட வியன் நகரின் புறத்து இரவி
    கண் புதைக்க வரும் அளவில் கண்டு அரசன் நடுங்கிப்
    பெண் புதைக்கும் ஒருபாகப் பிரான் அடியே சரண் என்னா.
    1303 ஆலம் எழுந்து இமையவர் மேல் அடர்க்க வரும் பொழுது அஞ்சும்
    மால் எனவும் தன் உயிர் மேல் மறலி வரும் பொழுது அஞ்சும்
    பாலன் எனவும் கலங்கிப் பசுபதி சேவடியில் விழுந்து
    ஓலம் என முறை இட்டான் உலகுபுக முறை இட்டான்.
    1304 முறை இட்ட செழியன் எதிர் முறுவலித்து அஞ்சலை என்னாக்
    கறை இட்டு விண் புரந்த கந்தர சுந்தரக் கடவுள்
    துறை இட்டு வருகடலைச் சுவறப் போய்ப் பருகும் எனப்
    பிறை இட்ட திருச் சடையில் பெயல் நான்கும் வர விடுத்தான்.
    1305 நிவப்பு உற எழுந்த நான்கு மேகமும் நிமிர்ந்து வாய் விட்டு
    உவர்பு உறு கடலை வாரி உறிஞ்சின உறிஞ்ச லோடும்
    சிவப் பெரும் கடவுள் யார்க்கும் தேவ் எனத் தௌஞ்ந்தோர் ஏழு
    பவப் பெரும் பௌவம் போலப் பசை அற வறந்த அன்றெ.
    1306 அந் நிலை நகர் உளாகும் வானவர் ஆதி யோரும்
    தென்னவர் பிரானும் எந்தை திருவிளை யாடல் நோக்கிப்
    பன்னரு மகிழ்ச்சி பொங்கப் பன் முறை புகழ்ந்து பாடி
    இன்னல் தீர் மனத்தர் ஆகி ஈறு இலா இன்பத்து ஆழ்ந்தார்.

    வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் சுபம்
    --------------

    1. மதுரைக் காண்டம் முற்றிற்று.

This file was last updated on 13 Jan. 2014
.